பாகிஸ்தானில் சதமடித்து அமர்க்களப்படுத்திய சமரி அத்தபத்து

750
Chamari Athapaththu’s century in vain as Amazons beat Super Women

பாகிஸ்தானில் நடைபெற்ற மகளிருக்கான கண்காட்சி T20 தொடரில் Amazon அணிக்கெதிரான 3ஆவதும், கடைசியுமான போட்டியில் Super Women அணிக்காக ஆடிய இலங்கையின் அதிரடி வீராங்கனை சமரி அத்தபத்து சதடித்து அசத்தியிருந்தார்.

ஆனால் சமரி அத்தபத்து சதமடித்த போதிலும், Super Women அணிக்கு இந்தப் போட்டியிலும், போட்டித் தொடரிலும் வெற்றிபெறுகின்ற அதிஷ்டம் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று போட்டிகளைக் கொண்ட மகளிருக்கான T20 கண்காட்சி போட்டித் தொடர் கடந்த 8, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டியில் நடைபெற்றது.

முதல் போட்டியில் நிதா தார் தலைமையிலான Super Women அணியும், 2ஆவது போட்டியில் பிஸ்மாஹ் மஹ்ரூப் தலைமையிலான Amazon அணியும் வெற்றியீட்டியது.

இந்த நிலையில், மூன்றாவதும், கடைசியுமான கண்காட்சி T20 போட்டி கடந்த 11ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் நாணய சுழற்சியில் வென்ற அமேசன் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Amazon அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் டானி வியாட் 43 ஓட்டங்களையும், அணித் தலைவி பிஸ்மா மஹ்ரூப் 51 ஓட்டங்களையும் அதிகபட்மாக எடுத்தனர்.

Super Women அணிக்காக பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததுடன், ஐமன் அன்வர் 2 விக்கெட்டுகளையும், சமரி அத்தபத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 219 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய Super Women அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப முதல் அதிரடி காண்பித்த சமரி அத்தபத்து, 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்ட்ரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, இராம் ஜாவிட் 35 ஓட்டங்களை எடுத்தார். Amazon தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகளையும்,  டானி வியாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

மகளிருக்கான கண்காட்சி T20 தொடரில் முதல் போட்டியில் 23 ஓட்டங்களைக் குவித்த சமரி, 2ஆவது போட்டியில் 17 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதனிடையே, 3ஆவது போட்டியில் சதமடித்ததன் மூலம் மகளிருக்கான கண்காட்சி T20 தொடரில் சதமடித்த முதல் வீராங்கனையாக இடம்பிடித்தார்.

எனவே 33 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பிஸ்மாஹ் மஹ்ரூப் தலைமையிலான Amazon அணி, மகளிருக்கான கண்காட்சி T20 தொடரில் சம்பியனாக மகுடம் சூடியது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<