குஜராத் லயன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கான்பூரில் நேற்று இரவு நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  குஜராத் அணியின் தலைவர்  ரெய்னா களத்தடுப்பு செய்ய தீர்மானம் செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 30 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். 3ஆவது நபராக களம் இறங்கிய நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 70 ஓட்டங்களைச் சேர்த்தார். அதன்பின் வந்தவர்களில் பட்லர் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 173 ஓட்டங்களை  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் ஆரோன் பிஞ்ச், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக க களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் 2ஆவது பந்தில் பிஞ்ச் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார்.

அடுத்து மெக்கலத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இதனால் ரன்ரேட் ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்கள் என உயர்ந்து கொண்டே இருந்தது. குஜராத் அணி 9.2 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மெக்கலம் ஆட்டம் இழந்தார். அவர் 27 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 48 ஓட்டங்களைக்  குவித்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். ரெய்னா 30 பந்துகளை சந்தித்து அரைச்சதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் 3 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து டுவயின் ஸ்மித் களம் இறங்கினார்.

ரெய்னா 58 ஓட்டங்களை  எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். 5ஆவது விக்கட்டுக்கு ஸ்மித் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரெய்னா ஆட்டம் இழக்கும் போது போது 46 பந்துகளில் 51 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் ஸ்மித் மற்றும் ஜடேஜா ஜோடி அதிரடியாக விளையாட குஜராத் அணி 17.5 ஓவரில் வெற்றியிலக்கை எட்டியது. இதில் ஸ்மித் 37 ஓட்டங்களையும் ஜடேஜா 21 ஓட்டங்களையும்  ஆட்டம் இழக்காமல் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் 14 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது. 7 வெற்றியுடன் மும்பை அணி ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்