கன்னிப் போட்டியில் சதமடித்த இளம் ப்ரித்திவ் ஷாவ்

228
Prithvi Shaw
Image courtesy - ICC

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய ப்ரித்தீவ் ஷாவ், இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை இன்று (04) பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராக செயற்பட்டு வந்த ப்ரித்திவ் ஷாவ் அறிமுகமாகியிருந்தார்.

இம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கே.எல்.ராஹுலுடன் ப்ரித்திவ் ஷா களமிறங்கினார். இதில் கே.எல்.ராஹுல் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க, புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ப்ரித்திவ் ஷாவ் வேகமாக ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி அரைச்சதத்தை கடந்த இவர், இந்திய அணிசார்பில் அறிமுகப் போட்டியில் அரைச்சதம் கடந்த இரண்டாவது இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை கடந்தார். இதற்கு முன்னர் 1955ம் ஆண்டு இந்திய அணியின் விஜய் மெஹ்ரா 17 வயது மற்றும் 265 நாட்களில் அரைச்சதம் கடந்திருந்தார். இதனையடுத்த இடத்தை தற்போது ப்ரித்திவ் ஷாவ் 18 வயது 329 நாட்களில் அரைச்சதம் கடந்து பிடித்தார்.

குறிப்பிட்ட இந்த சாதனையுடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ப்ரித்திவ் ஷாவ், மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு 99 பந்துகளில் தனது கன்னி சதத்தை கடந்தார். இதனடிப்படையில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 15வது இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

உலகின் முன்னணி ஒருநாள் அணியுடன் மோதத் தயாராகியுள்ள இலங்கை

இலங்கை அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள், ஒரு T20 மற்றும்..

அதுமாத்திரமின்றி, இந்திய அணிசார்பில் இளம் வயதில் டெஸ்ட் சதம் கடந்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் உலகின் ஏழாவது இளம் வீரர் என்ற சாதனையையும் ப்ரித்திவ் ஷாவ் தன்பக்கம் திருப்பிக்கொண்டார். இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1990ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்திருந்தார். குறித்த இந்த சதத்தை சச்சின் 17 வயது மற்றும் 107 நாட்களில் பெற்றிருந்தார். தற்போது இவரை அடுத்து, ப்ரித்திவ் ஷாவ் 18 வயது மற்றும் 329 நாட்களில் சதம் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச ரீதியில் இளம் வயதில் சதமடித்த ஏழாவது வீரர் என்ற பெருமைக்கு ப்ரித்திவ் ஷாவ் சொந்தக்காரர் ஆகியுள்ளதுடன், இந்த பட்டியலின் முதலிடத்தை பங்களாதேஷ் அணியின் மொஹமட் அஷ்ரபுல் பிடித்துள்ளார். மொஹமட் அஷ்ரபுல் 2001ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தனது 17 வயது மற்றும் 61 நாட்களில் சதம் கடந்திருந்தார். குறித்த இந்த சதமே இதுவரையில் இளம் வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் பெற்ற சதம் என்ற சாதனையாக உள்ளது.

இந்தப் போட்டியில் தனது கன்னி சதத்தை கடந்த ப்ரித்திவ் ஷாவ், 154 பந்துகளை எதிர்கொண்டு 19 பௌண்டரிகள் அடங்கலாக 134 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<