வறுமையை தாண்டி சாதனை நாயகனாக உருவெடுத்த பெதும் நிஸ்ஸங்க

Sri Lanka Cricket

318
Gettyimages

சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தவுடன் தங்களுடைய பெயர்களை சாதனை பெயர்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு வீரர்களுக்கு அதிகம். தேடிய இலக்கினை எட்டிய பிறகு சாதனைகளை குவிப்பது அப்படி ஒன்றும் கடினமான விடயமல்ல. ஆனால் நிர்ணயித்த சாதனையை அடைவதற்கான போராட்டமும், வலியும் எமக்கான வாழ்க்கையின் பாடத்தை கற்பிக்கக்கூடியவை.

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இழக்கும் பெதும் நிஸ்ஸங்க?

இலங்கை கிரிக்கெட்டை பொருத்தவரை, இந்த காலக்கட்டத்தில் பெரிதளவுக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், ஒரே ஒரு வீரர் பற்றிய பேச்சுகள் தொடர்ந்தும் வந்துக்கொண்டிருக்கின்றன.

முதற்தர போட்டிகளில் அவரது சராசரி 67 ஆக இருக்கின்ற நிலையில், கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சாதாரண விடயம்தான். இவ்வாறான சிறந்த திறமைகளுடன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தும், தனக்கான சந்தோஷத்தை ஏற்படுத்திக்கொண்டும் இருந்த பெதும் நிஸ்ஸங்க, மைதானத்துக்கு வெளியில் வாழ்ந்த விதம் அவருக்கு மாத்திரமல்ல, கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாகும்.

சிறந்த ஓட்டப்பதிவை கொண்டிருந்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த பெதும் நிஸ்ஸங்க, NCC கழகத்துக்காக தொடர்ந்து 2 சதங்களை விளாசி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்து பெற்றோர் மனதில் பூரிப்பை ஏற்படுத்தினார்.

பெற்றோர் மனதில் பூரிப்பை ஏற்படுத்தியதை விட, இன்னும் சிலரின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட பெதும் நிஸ்ஸங்கவின் வாழ்க்கை கதை வலி மிகுந்த சுவாரஷ்யத்தை கொண்டது.

இலங்கை கிரிக்கெட்டின் அடையாளமான காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், மைதான ஊழியரான சுனில் சில்வாதான் பெதும் நிஸ்ஸங்கவின் தந்தை. பெதும் நிஸ்ஸங்கவின் தாயார், களுத்துறை விகாரையில், பூக்களை விற்பனை செய்து வருகின்றவர். இவ்வாறான சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், சுனில் சில்வாவுக்கு இருந்த கிரிக்கெட் தொடர்பான அறிவு, தன்னுடைய மகனின் முதல் பயிற்றுவிப்பாளராக அவரை மாற்றியுள்ளது.

களுத்துறை வித்தியாலயத்தில் கல்வி கற்ற பெதும் நிஸ்ஸங்க, களுத்துறை பாடசாலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். இந்த பாடசாலைக்காக அதிக ஓட்டங்களை பெற்றிருந்த இவரை, பாடசாலை பயிற்றுவிப்பாளர் சுனில் சலவதன கண்கானித்துவந்தார்.

கொழும்பில் உள்ள பாடசாலைகள் சிறந்த வீரர்களை வலைவீசி தேடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சுனில் சலவதனவுக்கும், சிறந்த வீரர்கள் உள்ளார்களா? என்ற அழைப்பு வரத்தொடங்கியது. உடனடியாக பெதும் நிஸ்ஸங்கவை அடையாளம் காட்ட, புனித தோமையர் கல்லூரி உட்பட கொழும்பில் உள்ள சில முன்னணி பாடசாலைகள் பெதும் நிஸ்ஸங்கவை இணைக்க முற்பட்ட போதும், இசிபதன கல்லூரி முதல் பாடசாலையாக பெதும் நிஸ்ஸங்கவை இணைத்துக்கொண்டது.

கொழும்பு வாழ்க்கை எத்தனை கடினமானது எனவும், வாழ்க்கை செலவு தொடர்பிலும் அதிகமாக சிந்தித்த, பெதும் நிஸ்ஸங்கவின் பெற்றோர்களை, சமாதானப்படுத்த சுனில் சலுவதன மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியது. மகனை கொழும்புக்கு அனுப்புவதில், பெதும் நிஸ்ஸங்கவின் பெற்றோருக்கு துளியும் விருப்பமில்லை. கல்வி அறிவு கொஞ்சமும் இல்லாத பெற்றோர், தமது மகனின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இசிபதன கல்லூரிக்கு அனுப்ப முடிவுசெய்தனர்.

இசிபதன கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் பிரதீப் நிஷாந்த மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் இசிபதன கல்லூரி அணியின் தலைவரின் தந்தையும், பிரதீப்பின் நண்பருமான நிலந்த அமரசிங்க ஆகியோர், பெதும் நிஸ்ஸங்கவை தேடி களுத்துறைக்கு புறப்பட்டனர். களுத்துறையில் பெதும் நிஸ்ஸங்கவின் வீட்டினை கண்டறிய முடியாத இவர்கள், பெதும் நிஸ்ஸங்கவின் பெற்றோரை களுத்துறை விகாரைக்கு அழைத்துள்ளனர்.

எந்தவொரு மாணவனோ மாணவியோ களுத்துறை விகாரையில் வைத்து, பாடசாலையில் இணைவதற்கான கடிதங்களில் கையெழுத்திட்டிருக்க மாட்டார்கள். ஆனால், களுத்துறை விகாரையில் கையெழுத்திடும் வாய்ப்பு பெதும் நிஸ்ஸங்கவுக்கும், அவரது பெற்றோருக்கும் கிடைத்தது.

பெதும் நிஸ்ஸங்கவின் வீடு களுத்துறையில் உள்ளது என தெரியும். ஆனால், சரியாக களுத்துறையில் இருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பலதொட்ட என்ற வீதி பகுதியில் பெதும் நிஸ்ஸங்கவின் வீடு உள்ளது. குறித்த வீடானது

சுனாமியின் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் அமைத்துக்கொடுத்த வீடாகும்.

இலங்கை – இலங்கை லெஜண்ட்ஸ் இடையிலாக போட்டி வேண்டாம் – டில்ஷான்

அரசாங்கத்தினால் கட்டப்பட்ட வீட்டிலிருந்தும், சாதிக்க துடித்த பெதும் நிஸ்ஸங்கவுக்கு, கொழும்பு வாழ்க்கை மேலும் துன்பத்தை கொடுத்தது. இசிபதன கல்லூரியின் இளம் பழைய மாணவர்கள் ஒன்றியம், ஒரு தொகை பணத்தை கொடுத்த போதும், கொழும்பு வாழ்க்கைக்கு இந்த பணம் போதுமானதாக இல்லை. என்ன செய்வதென்று புரியாமல் பெதும் நிஸ்ஸங்க கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார். தன்னுடைய ஒருநாள் உணவை பெற்றுக்கொள்வதற்கும் பெதும் நிஸ்ஸங்க தடுமாறினார்.

ஒருவேளை உணவை பூர்த்திசெய்யமால் ஒரு வீரரால் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை அறிந்திருந்த பயிற்றுவிப்பாளர், ஜயரத்ன மலர்சாலையில் பணிபுரியும் அவருடைய நண்பர் நிலந்த அமரசிங்கவிடம் உதவி கோரினார்.

நிலந்த அமரசிங்க பெதும் நிஸ்ஸங்கவின் திறமையில் ஆர்வம் கொண்டதுடன், ஜயரத்ன மலர்சாலை உரிமையாளரிடம், பெதும் நிஸ்ஸங்க தொடர்பில் கூறினார். நாட்டின் முன்னணி மலர்சாலைகளில் ஒன்றான ஜயரத்ன மலர்சாலை உரிமையாளர் பெதும் நிஸ்ஸங்கவுக்கு உதவ தீர்மானித்தார். மாதாந்தம் ஒருதொகை பணத்தை பெதும் நிஸ்ஸங்கவுக்கு கொடுக்க ஆரம்பித்தார்.

பாடசாலை கிரிக்கெட்டை முடித்துக்கொண்ட பெதும் நிஸ்ஸங்க, மீண்டும் களுத்துறை வந்து, பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்காக விளையாட ஆரம்பித்தார். பின்னர், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரட்ன NCC கழகத்துக்கு பெதும் நிஸ்ஸங்கவை அழைத்தார். NCC கழகத்துக்கு அழைத்தது மாத்திரமின்றி தன்னுடைய சொந்த மகன்களில் ஒருவராக பெதும் நிஸ்ஸங்கவை, ஹஷான் திலகரட்ன பார்த்துக்கொண்டார்.

NCC கழகமானது கொழும்புக்கு வெளியில் உள்ள திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிவதில் சிறப்பு வாய்ந்த கழகம். அதுமாத்திரமின்றி இளம் மற்றும் அனுபவ வீரர்களுக்கு ஒரே அளவான பணத்தை வழங்கி, அனைவரையும் சமமாக பார்க்கும் கழகம். மிகச்சிறந்த கழகம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது

மாத்திரமின்றி, தினேஷ் சந்திமால் மற்றும் உபுல் தரங்க போன்ற சிறந்த ஆலோசகர்களுடன் பழகும் வாய்ப்பும் பெதும் நிஸ்ஸங்கவுக்கு கிடைத்தது.

இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றாக NCC இல் இருந்த போதும், சில கிரிக்கெட் அரசியல்கள் காரணமாக, தேசிய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை அனுப்புவதில் சற்று வீழ்ச்சியை கண்டிருந்தது. ஆனால், அமைதியாக இருந்து இதனை உடைத்தெறிந்த பெதும் நிஸ்ஸங்க மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் முதன்முறையாக இணைக்கப்பட்டார்.

நீண்ட நாட்களாக இலங்கை அணியில் பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பெதும் நிஸ்ஸங்கவுக்கு வாய்ப்பு கொடுங்கள்! என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய அனைத்து தடைகளையும் தாண்டி தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெதும் நிஸ்ஸங்க உருவாக்கிக்கொண்டார். தேசிய அணியில் விளையாடிவிட்டாலும் அவர் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானது.

பெதும் நிஸ்ஸங்க இந்த வாய்ப்பினை இலகுவாக எட்டிப்பிடித்துக்கொள்ளவில்லை. பாடசாலை கிரிக்கெட்டின் போது வறுமை அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. பின்னர், கழக கிரிக்கெட்டில் அரசியல் சிக்கல்கள் மற்றும் உபாதை. ஆனால், அத்தனையும் தகர்த்து தன்னுடைய திறமையை மாத்திரமே வைத்து அணிக்குள் நுழைந்தவர் பெதும் நிஸ்ஸங்க.

பெதும் நிஸ்ஸங்க மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு தெரிவாகியது எமக்கு மகிழ்ச்சி. பெதும் நிஸ்ஸங்கவின் பெற்றொருக்கும் மகிழ்ச்சி. ஆனால், எதற்குமே தொடர்புகள் கிடையாத ஜயரத்ன மலர்சாலை, பெதும் நிஸ்ஸங்கவின் திறமை கண்டு பூரித்து போய் நிற்கின்றது. பெதும் நிஸ்ஸங்க விளையாடும் போது, மாதாந்தம் பணம் வழங்கியது மாத்திரமின்றி, மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு தெரிவாகிய பின்னர், அவரின் செலவுக்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சென்ற பெதும் நிஸ்ஸங்க கன்னி டெஸ்ட் போட்டியில், முதல் டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து சாதித்தது மாத்திரமின்றி, தன்னுடைய திறமை தனித்துவமானது என்பதை நிரூபித்து நாடு திரும்பினார். திறமையை வெளிப்படுத்த வறுமை ஒரு தடையில்லை. தொடர் முயற்சிகள் இலட்சியத்தை அடைவதற்கான படிக்கல் என்பதை, தனது செயலால் வெளிக்காட்டிய பெதும் நிஸ்ஸங்க மேலும் சாதனைகளை படைத்து, கிரிக்கெட் உலகில் சாதனை

நாயகனாக வலம் வர நாமும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…