அஜய், சன்ஜயனின் அற்புத துடுப்பாட்டங்களுடன் யாழ். மத்திக்கு இலகு வெற்றி

U19 Schools Cricket Tournament 2022/23

144

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் யாழ். மத்தியக் கல்லூரி அணி, ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலையை வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதேநேரம், இன்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை எதிர்கொண்ட அக்குரனை அஸ்ஹர் கல்லூரி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

>> இந்திய T20i அணியில் மூன்று வீரர்கள் இணைப்பு

யாழ். மத்தியக் கல்லூரி எதிர் ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை

தங்களுடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலைக்கு வழங்கியது.

அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை அணியின் 7 துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொண்டபோதும், அதனை குறிப்பிடத்தக்க அளவிலான ஓட்ட எண்ணிக்கைக்கு எடுத்துச்செல்லவில்லை.

அதிகபட்சமாக சச்சிந்த சந்தருவான் 22 ஓட்டங்கள், மதுப சுதேஷ் 21 ஓட்டங்கள், டினுக அலோக 21 ஓட்டங்கள் மற்றும் ஹரித தினேந்திர 20 ஓட்டங்கள் என பெற்றுக்கொண்டிருந்த போதும், ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை 46.4 ஓவர்கள் நிறைவில் 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

யாழ். மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சை பொருத்தவரை அணித்தலைவர் ஆனந்தன் கஜன் அற்புதமாக பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜெயதீஷ்வரன் விதுசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்தியக் கல்லூரி அணியை பொருத்தவரை, கடந்த போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்த மதீஷ்வரன் சன்ஜயன் இந்தப்போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் அணிக்காக அதிகபட்சமாக 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, நிஷாந்தன் அஜய் அற்புதமாக ஆடி வெறும் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக, சதாரகன் சிமில்டன் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்தியக் கல்லூரி அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 31.5 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஹரித தினேந்திர 30 ஓட்டங்களுக்கு ஒரு  விக்கெட்டினை கைப்பற்றினார்.

  • ஸ்ரீ பங்கானந்த தேசிய பாடசாலை – 176/10 (46.4), சச்சிந்த சந்தருவான் 22, மதுப சுதேஷ் 21, டினுக அலோக 21, ஆனந்தன் கஜன் 29/4, ஜெயதீஷ்வரன் விதுசன் 26/3
  • யாழ். மத்தியக் கல்லூரி – 180/3 (31.5), மதீஷ்வரன் சன்ஜயன் 69, நிஷாந்தன் அஜய் 50, சதாகரன் சிமில்டன் 22, ஹரித தினேந்திர 30/1
  • முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் அக்குரனை அஸ்ஹர் கல்லூரி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை அவர்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட அஸ்ஹர் கல்லூரி துடுப்பாட்டத்தில் பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கை காரணமாக தோல்வியை சந்தித்தது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அஸ்ஹர் கல்லூரிக்கு இமாத் அஹ்மட், மொஹமட் யூசுப் மற்றும் மொஹமட் இமாஷ் ஆகியோர் ஓரளவு துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த போதும், அவர்களால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை அடையமுடியவில்லை.

அத்துடன் இவர்களை தவிர்த்து களமிறங்கிய எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் இரட்டை இலக்க ஓட்டங்களை அடைய தவறியதன் காரணமாக அஸ்ஹர் கல்லூரி 42.2 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இமாத் அஹ்மட் 34 ஓட்டங்கள், மொஹமட் யூசுப் 29 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் இமாஷ் 24 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் சுவஹாஸ் நெதுல யாபா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிம்ஷார அபுஹாமி மற்றும் நான்காமிலக்க வீரர் எஷான் பெர்னாண்டோ ஆகியோர் அரைச்சதம் கடக்க 20.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த அந்த அணி வெற்றியை பதிவுசெய்தது.

நிம்ஷார அபுஹாமி 64 ஓட்டங்களையும், எஷான் பெர்னாண்டோ 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் அணித்தலைவர் மொஹமட் ரிம்ஷாட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • அக்குரனை அஸ்ஹர் கல்லூரி – 147/10 (42.2), இமாத் அஹ்மட் 34, மொஹமட் யூசுப் 29, ஹமட் இமாஷ் 24, சுவஹாஸ் நெதுல யாபா 5/2
  • மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 148/2 (20.1), நிம்ஷார அபுஹாமி 64, எஷான் பெர்னாண்டோ 53, மொஹமட் ரிம்ஷாட் 30/2
  • முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<