2018இல் ஓய்வு பெற்ற மறக்க முடியாத கிரிக்கெட் நட்சத்திரங்கள்

652

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்த, தமது அபாரத் திறமைகளால் தமக்கேயான அடையாளங்களை ஏற்படுத்தி, தனிப்பட்ட முறையில் அந்தந்த அணிகளுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் 2018இல் தங்களது ஓய்வை அறிவித்தனர்.  

இந்த வீரர்களது ஓய்வு கிரிக்கெட் உலகிற்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தாலும், அடுத்த தலைமுறையினருக்கு இவர்கள் எப்போதும் முன்மாதிரியாக இருப்பார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. எனவே, கிரிக்கெட் உலகில் கடந்த தசாப்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒருசில வீரர்களின் ஓய்வு அறிவிப்புகளை பற்றி இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.  

டிக்வெல்லவின் துடுப்பாட்ட பாணியை நாம் பின்பற்ற வேண்டும் – திமுத்

நிரோஷன் டிக்வெல்லவின் சாதகமான துடுப்பாட்டத்தில் ….

ரங்கன ஹேரத் (40 வயது)

கடந்த 1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் வரம்பெற்று, காலி மைதானத்தில் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் விடைகொடுத்தார்.

முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக விளங்கிய ரங்கன ஹேரத், கடந்த வருட ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போதே உலகில் உள்ள இடது கை பந்து வீச்சாளர்கள் வரிசையில் கூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஸீம் அக்ரமின் (414) சாதனையை முறியடித்தார்.

இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் 170 இன்னிங்ஸ்களில் விளையாடி 433 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹேரத் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் மத்தியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியதில் முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து நான்காவதாக இடம் பிடித்தவர் ஹேரத்.

ரங்கன ஹேரத் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியுடன் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். 2011ஆம் ஆண்டு டி-20 போட்டியில் அறிமுகமான அவர் 2016ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை 17 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2018 மீள் பார்வை

கடந்து சென்றுள்ள 2018ஆம் ஆண்டானது விளையாட்டு உலகில் …

சில சந்தர்ப்பங்களில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரங்கன ஹேரத் 14ஆவது இலங்கை டெஸ்ட் தலைவராவார். அவர் தலைமையில் 05 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் 2 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

அலெஸ்டயார் குக் (34 வயது)

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த நட்சத்திர துடுப்பாட்ட வீரரான அலஸ்டெயார் குக், கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார்.

குறித்த டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அலஸ்டெயார் குக், ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். தன் கடைசி போட்டியில் திடீரென போர்முக்கு திரும்பிய குக் அதிரடியாக ஒரு அரைச்சதம், ஒரு சதம் அடித்து தன் கடைசி போட்டியை மிகச் சிறப்பான ஒன்றாக மாற்றிக் காட்டினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் குக், இங்கிலாந்து அணிக்கு 2010/11 காலப்பகுதியில் நடைபெற்ற ஆஷஸ் வெற்றி, 2012/13 காலப்பகுதியில் இந்திய சுற்றுப் பயணத்தின் போது கிடைத்த டெஸ்ட் தொடர் வெற்றி ஆகியவற்றுக்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தார். அத்துடன் அவர் 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரட்டைச் சதங்களை விளாசி திறமையை நிரூபித்திருந்தார்.

அதன்பிறகு துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்த வந்த அவர், 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியை துறந்தார். தனது 159ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அவர், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையுடள் ஓய்வு பெற்றார்.

12 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 32 சதங்கள் அடங்கலாக 12,254 ஓட்டங்களை குவித்த அலஸ்டெயார் குக்கிற்கு, பிரித்தானிய மகாராணியால் சேர் (நைட்ஹுட்) பட்டமும் இவ்வருடம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏபி டி வில்லியர்ஸ் (34 வயது)

கிரிக்கெட் உலகின் 360 பாகை என அழைக்கப்பட்ட ஏபி டி வில்லியர்ஸ் யாரும் எதிர்பாராத நிலையில் தன் ஓய்வு முடிவை அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நட்சத்திர வீரராக வலம் வந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். தன் நாடு, ரசிகர்கள், பயிற்சியாளர்கள் போன்ற பல தரப்பும் தன்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, அழுத்தத்துக்கு ஏற்ப தன்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியவில்லை என்ற காரணத்தால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ஓட்டங்கள் அடித்த தென்னாபிரிக்க வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி-20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் எடுத்த தென்னாபிரிக்க வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான டி வில்லியர்ஸ், தென்னாபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராகவும் இருந்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் நீடித்து வந்தார். பின் 2017 ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகினார். 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், அதன்பிறகுதான் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்

கடந்த காலங்களைக் காட்டிலும் 2019 ஆண்டானது கிரக்கெட்…

கௌதம் கம்பீர் (36 வயது)

இந்திய அணியின் தலைசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கௌதம் கம்பீர் நீண்ட காலமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தனது போர்மை பல தடவைகள் உள்ளூர் போட்டிகளில் நிரூபித்தும், கம்பீரை அவரது கோபமான குணம், ஆவேசமான கருத்துக்களால் அந்நாட்டு தேர்வாளர்கள் ஒதுக்கி வைத்து இருந்தனர்.

எனினும், ஐ.பி.எல் தொடர், ரஞ்சி தொடர் ஆகியவற்றில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்தார். எனினும், கடந்த ஐ.பி.எல் தொடரில் பெரும் சறுக்கலை சந்தித்தார். இதனையடுத்தே கடந்த டிசம்பர் மாதம் கௌதம் கம்பீர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2007 டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 75 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்த கம்பீர், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 97 ஓட்டங்களை அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதயத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார்.

2004 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற கௌதம் கம்பீர், இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,154 ஓட்டங்களையும், ஒருநாள் அரங்கில் 5,238 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 37 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 7 அரைச்சதங்களுடன் 932 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும், 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியிலும் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியிலும் கௌதம் கம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அசார் அலி (33 வயது)

பாகிஸ்தான் ஒருநாள் அணியின் முன்னாள் தலைவரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான அசார் அலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

நியூஸிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ….

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்து வந்த அசார் அலி, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை தவறவிட்டு வந்தார்.

எனினும், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான முக்கிய பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார். குறித்த தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் மற்றும் இறுதிப் போட்டிகளில் அரைச்சதம் விளாசியதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அரைச்சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.  

எனினும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அசார் அலிக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இமாம் உல் ஹக் அணிக்குள் உள்வாங்கப்பட்டார். இதனால் அசார் அலிக்கு அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்ததுடன், டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அசார் அலி, இதுவரையில் டி-20 போட்டிகளில் விளையாடியதில்லை. எனினும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1,845 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.  

மொஹமட் கைஃப் (37 வயது)

இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரும், தலைசிறந்த களத்தடுப்பாளருமான மொஹமட் கைஃப், கடந்த 12 வருடங்களாக எந்தவொரு சர்வதேசப் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்த நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதிக சூரிய வெளிச்சத்தால் தடைப்பட்ட நியூசிலாந்து இந்திய ஒருநாள் போட்டி

கிரிக்கெட் போட்டிகள் மழை, பனி, வெளிச்சமின்மை….

2000ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு முதற்தடவையாகப் பெற்றுக்கொடுத்த இளம் இந்திய அணியின் தலைவராகச் செயற்பட்ட மொஹமட் கைஃப், அதே ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் இறுதியாக விளையாடிய மொஹமட் கைஃப், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பன்ஞாப் மற்றும் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். அத்துடன், 2017இல் குஜராத் லயன்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும் அவர் செயற்பட்டார்.

மொஹமட் கைஃப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 624 ஓட்டங்களையும், 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2 சதம், 17 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 2753 ஓட்டங்களையும் எடுத்திருக்கிறார்.

ஜோன் ஹேஸ்டிங்ஸ் (33 வயது)

அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பிராந்திய மற்றும் இங்கிலாந்தின் கவுண்டி டி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி வந்த இவர், பந்துவீசும் போது நுரையீரல் இரத்த கசிவு காரணமாக சில சமயங்களில் மைதானத்தில் வைத்து இரத்த வாந்தி எடுத்தார். அதன்பிறகு வைத்தியர்களை அணுகிய அவருக்கு, தொடர்ந்து பந்துவீசினால் இதன் பாதிப்பு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறுதியாக நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இடைநடுவில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய அவர், நியூசிலாந்திற்கு எதிராக எட்ஜ்பெஸ்டனில் தனது இறுதி சர்வதேச போட்டியிலும் பங்குபற்றியிருந்தார்.

சிட்னியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜோன் ஹேஸ்டிங்ஸ், 2012 ஆம் ஆண்டு பேர்த் நகரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த அவர், 2017ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

டுவைன் பிராவோ (35 வயது)

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியின்மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார்.

அன்று முதல் அவர் 40 டெஸ்ட், 164 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 66 சர்வதேச டி-20 என 270 சர்வதேசப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன், 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்காகவும் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 27 சதங்களை பெற்ற ….

அதிரடித் துடுப்பாட்டம் மட்டுமல்லாது, சிறப்பாக பந்து வீசுவதிலும் வல்லவரான பிராவோ, ஐ.பி.எல் உள்ளிட்ட உலகின் முன்னணி டி-20 லீக் போட்டித் தொடர்களில் பங்குபற்றி தனது அசாத்திய திறமையால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியொரு இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

மேற்கிந்திய ஒருநாள் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ள பிராவோ, தொடர் உபாதைகள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் அந்த அணிக்காக களம் இறங்காமல் இருந்தார். இதன் பின்னணியில்தான் தனது ஓய்வின் முடிவை பிராவோ அறிவித்தார்.

நையல் ஓ பிரையன் (37 வயது)

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் நியல் ஓ பிரையன் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அயர்லாந்து அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய நியல் ஓ பிரையன், 103 ஒரு நாள் போட்டிகளிலும், 30 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற அயர்லாந்து அணியின் அறிமுக டெஸ்ட் போட்டியிலும் இடம்பிடித்த அவர், 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த ஆட்டத்தில் 72 ஓட்டங்ளை எடுத்து தனது சிறந்த இன்னிங்ஸையும் பதிவு செய்தார்.

மொஹமட் ஹபீஸ் (38 வயது)

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் அறிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாமில் இடம்பிடித்திருந்த ஹபீஸ், முதல் போட்டியில் சதம் விளாசி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தார். எனினும் அடுத்தடுத்த போட்டிகளில் சோபிக்கத் தவறிய இவர், பின்னர் துடுப்பெடுத்தாடிய 7 இன்னிங்சுகளில் 66 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

நீண்ட நாட்களாக பாகிஸ்தான் அணியில் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த ஹபீஸ், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டிருந்தார். துரதிஷ்டவசமாக அவரால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியாத காரணத்தால் திடீர் என தனது ஓய்வை அறிவித்திருந்தார்.

எனினும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக கவனத்தை செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மொஹமட் ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 10 சதம் மற்றும் 12 அரைச்சதங்கள் அடங்கலாக 3644 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<