டிவிஷன் 1 அரையிறுதிக்கு மொறகஸ்முல்ல, ரெட் ஸ்டார், பெலிகன்ஸ், கொம்ரட்ஸ் அணிகள் தெரிவு

1487
Premier League Division I quarter finals

டிவிஷன் 1 தரத்தில் உள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகளில் மொறகஸ்முல்ல யுனைடட், ரெட் ஸ்டார், பெலிகன்ஸ் மற்றும் கொம்ரட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்று நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

இம்முறை இடம்பெற்ற டிவிஷன் – 1 தரப் போட்டித் தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்குபற்றின. அவை நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் 5 அணிகள் என்ற அடிப்படையில் முதல் சுற்றின் போட்டிகள் இடம்பெற்றன. முதல் சுற்றில், ஒரு அணி தனது குழுவில் உள்ள ஏனைய அனைத்து அணிகளுடனும் மோதின. அதிலும் தனது சொந்த மைதானத்தில் ஒரு போட்டி மற்றும் எதிரணியின் மைதானத்தில் ஒரு போட்டி என ஒரு அணியுடன் இரண்டு போட்டிகளில் மோதின.

முதல் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களையும் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின. அதில் குழு ‘ஏ’ இல் இருந்து கொம்ரட்ஸ் மற்றும் செரண்டிப் அணிகளும், குழு ‘பி’ இல் இருந்து ரெட் ஸ்டார் மற்றும் க்ரீன் பீல்ட் அணிகளும், குழு ‘சீ’ இல் இருந்து மொறகஸ்முல்ல யுனைடட் மற்றும் யாழ்ப்பாணம் சென். மேரிஸ் அணிகளும், அதேபோன்று ‘டீ’ குழுவில் இருந்து பெலிகன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின.


மொறகஸ்முல்ல யுனைடட் – இலங்கை போக்குவரத்து சபை

அண்மையில் இடம்பெற்ற காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் மொறகஸ்முல்ல யுனைடட் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அணிகள் மோதின. இதில் மொறகஸ்முல்ல யுனைடட் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது.

போட்டியின் ஆரம்பம் முதலே மொறகஸ்முல்ல அணி வீரர்களது ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டி ஆரம்பமாகி 10 நிமிடங்களில் மொறகஸ்முல்ல அணி வீரர் பிரியவன்ஸ தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் முதல் பாதி முடியும்வரை எந்த கோல்களும் பெறப்படவில்லை.

1–0 என்று முன்னிலையுடன் 2ஆவது பாதியை ஆரம்பித்த மொறகஸ்முல்ல அணிக்கான இரண்டாவது கோலை அவ்வணி வீரர் மகேஷ் குமார் 63ஆவது நிமிடத்தில் பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 72ஆவது நிமிடத்தில் மொறகஸ்முல்ல அணி வீரர் பிரியவன்ஸவுக்கும் இலங்கை போக்குவரத்து சபை அணி வீரர் பெரேராவுக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் இருவரும்  மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் போட்டியில் இறுதி நேரம் மிகவும் சூடு பிடித்தது. இரு அணியினரும் 10 வீரர்களுடன் விளையாடினர். எனினும் 85ஆவது நிமிடத்தில் மொறகஸ்முல்ல அணிக்கான மூன்றாவது கோலை இளம் வீரர் டிலான் மதுஷங்க பெற்றுக்கொடுக்க, அவ்வணி 3-0 என்ற கோல்கள் ரீதியில் வெற்றி பெற்றது.


கொம்ரட்ஸ் – க்ரீன் பீல்ட்

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொம்ரட்ஸ் – க்ரீன் பீல்ட் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆட்டம் ஆரம்பமாகி 2ஆவது நமிடத்தில் கொம்ரட்ஸ் அணி வீரர் நௌமான் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். முதல் பாதியில் போடப்பட்ட ஒரே ஒரு கோலாக அது இருந்தது.

பின்னர் போட்டியின் இரண்டாவது பாதியில், 82ஆவது நிமிடத்தில் கொம்ரட்ஸ் அணி வீரர் லக்மால் அவ்வணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். போட்டி முடிவில் கொம்ரட்ஸ் அணி 2–0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.


ரெட் ஸ்டார் – செரண்டிப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி

டிவிஷன் – 1 இற்கான காலிறுதிகளில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற ஒரு போட்டி என்று இந்தப் போட்டியைக் குறிப்பிடலாம். இப்போட்டி, களுத்துறை வெர்னண்ட் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பமாகியது முதலே இரு அணி வீரர்களும் மிகவும் அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தினர். இரு அணியினரும் பல முறை தமக்கான கோல்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும், பின்கள வீரர்களின் சிறந்த செயற்பாடு மற்றும் கோல் காப்பாளர்களின் சிறந்த தடுப்பு என்பவற்றால் இரு அணியினரதும் கோல் வாய்ப்புகள் நழுவின.

எனினும் போட்டியின் 37ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணி வீரர் அப்துல்லா தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுக்க, போட்டியின் முதல் பாதி முடிவின்போது செரண்டிப் அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்து.

பின்னர் ஆரம்பமான இரண்டாவது பாதியில் போட்டியின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. 53 ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணித்தலைவர் ரஹ்மான் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்து போட்டியை சமநிலைப் படுத்தினார். போட்டி முடிவின்போது இரு அணிகளும் தலா ஒரு கோலையே பெற்றுக்கொண்டன.

இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் கோல்களைப் போடுவதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் இரு அணி கோல் காப்பாளர்களினதும் சிறந்த திறமையே போட்டியை ஒரு கோலுடன் மட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணியாய் இருந்தது என்று கூறலாம்.

பின்னர் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 6-5 என்ற கோல்கள் கணக்கில் ரெட் ஸ்டார் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது.

போட்டியில் ரெட் ஸ்டார் அணி வீரர்கள் இருவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பெலிகன்ஸ்சென். மேரிஸ்

குருனாகல மலியதேவ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மற்றொரு காலிறுதியில் பெலிகன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் சென். மேரிஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பெலிகன்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியில் 11ஆவது மற்றும் 36ஆவது நிமிடங்களில் சன்ஜீவ் பெற்றுக் கொடுத்த இரண்டு கோல்களும் பெலிகன்ஸ் அணியின் வெற்றி கோல்களாக அமைந்தன. முதல் பாதியில் இரண்டு கோல்கள் போடப்பட்டாலும், இரண்டாவது பாதியில் எந்தவொரு கோலும் போடப்படவில்லை. எனினும் இரண்டாவது பாதி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பெலிகன்ஸ் அணி வீரர் இன்பாஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டமையினால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே இறுதி 20 நிமிடங்களையும் அவ்வணி 10 வீரர்களுடனேயே விளையாடியது. அதேபோன்று அவ்வணியின் மேலும் ஒரு வீரருக்கும் சென். மேரிஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

இந்த காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளின் படி, மொத்தமாக 20 அணிகள் பங்கு கொண்ட டிவிஷன் 1 தர அணிகளுக்கான சுற்றுத் தொடரின் ஒரு அரையிறுதியில் மொறகஸ்முல்ல யுனைடட் மற்றும் கொம்ரட்ஸ் அணிகளும் மற்றைய அரையிறுதியில் ரெட் ஸ்டார் மற்றும் பெலிகன்ஸ் அணிகளும் மோதவுள்ளன.

அரையிறுதிப் போட்டிகள் செப்டம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.