T20 உலகக்கிண்ணத்துக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

ICC T20 World Cup 2022

262

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இங்கிலாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து குழாத்திலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் நீக்கப்பட்டுள்ளதுடன், இந்தவருட ஆரம்பத்தில் T20 அறிமுகத்தை பெற்றுக்கொண்ட பில் சோல்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

லெஜெண்ட்ஸ் T20 தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு

இறுதியாக நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அணியின் தலைவராக செயற்பட்ட இயன் மோர்கன் ஓய்வுபெற்றுள்ளதன் காரணமாக, ஜோஸ் பட்லர் முதன்முறையாக ஐசிசியின் தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.

ஜோஸ் பட்லர் உலகக்கிண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளபோதும், கெண்டைக்கால் உபாதை காரணமாக அடுத்துவரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அணியின் தலைவராக மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி நீண்ட நாட்கள் உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் 15 பேர்கொண்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் தொடருக்கான குழாத்திலும் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

இதேநேரம் இங்கிலாந்து அணியிலிருந்து இறுதியாக வந்த அறிவிப்பின் படி 15 பேர்கொண்ட குழாத்தில் ஜொனி பெயார்ஸ்டோவ் இணைக்கப்பட்டிருந்தாலும், கொல்ப் விளையாடும் போது இவர் உபாதைக்கு முகங்கொடுத்ததால் T20 உலகக்கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, இவருக்கான மாற்று வீரரை இங்கிலாந்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இங்கிலாந்து அணியில் ஹெரி புரூக், செம் கரன், ரீஸ் டொப்லே, டேவிட் வில்லி ஆகியோருடன், டெஸ்ட் அணியின் தலைவரான பென் ஸ்டோக்ஸும் இணைக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ண குழாத்திலிருந்து விலகியிருந்த போதும், இம்முறை அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில் தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஒக்டோபர் 22ம் திகதி பேர்த்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இங்கிலாந்து குழாம்

ஜோஸ் பட்லர் (தலைவர்), ஹெரி புரூக், மொயீன் அலி, செம் கரன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷீட், பில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஷ் டொப்லே, டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட்

  • மேலதிக வீரர்கள் – டைமால் மில்ஸ், லியாம் டவ்சன், ரிச்சர்ட் கிலீஸன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<