விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு

572

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக இணையுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா விடுத்திருந்த கோரிக்கையை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான குமார் சங்கக்காரவும், முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வாவும் நிராகரித்துள்ளனர்.

இதன்படி, அமைச்சரினால் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் நிராகரித்திருந்த நிலையில், தற்போது குறித்த முன்னாள் வீரர்களில் குமார் சங்கக்காரவும், அரவிந்த டி சில்வாவும் தமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு வேலை செய்ய சங்காவையும், மஹேலவையும் அழைக்கும் பைசர் முஸ்தபா

இலங்கை அணி முரளிதரன், சங்கக்கார, மஹேல ஜயவர்தன விளையாடிய காலத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் அரங்கில் முன்னிலை பெற்ற அணியாக வலம்வந்தது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதில் இந்தியாவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை அணி, ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒரு நாள் தொடரையும் இழந்தது.

இதனையடுத்து, இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. எனினும், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரை புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி கைப்பற்றியிருந்தாலும், சுதந்திர கிண்ண முத்தரப்பு டி-20 தொடரில் மறுபடியும் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றது.

இதனால் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் மீண்டும் கொண்டு வர ஆலோசனை வழங்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாக செயற்பாடுகளுக்கான ஆலோசகர்களாக முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹாநாம ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க யோசனை முன்வைப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா கடந்த புதன்கிழமை (13) கடிதம் ஒன்றின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்தை பரிசீலனை செய்த அமைச்சர் குறித்த வீரர்களை இலங்கை கிரிக்கெட்டுக்கு ஆலோசகர்களாக இணைந்து கடமையாற்ற வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.  

விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை நிராகரித்த மஹேல, முரளி, மஹநாம

இதற்கு கடிதம் ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள குமார் சங்கக்கார, இதற்கு முன்னரும் 06 மாத காலம் விசேட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கீழ் தாம் செயற்பட்டுள்ளதாகவும் அது பலனற்ற, காலத்தை வீணடிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தக் குழு வழங்கிய ஒரு பரிந்துரை கூட இதுவரை கிரிக்கெட் நிறுவனம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரும் அவ்வாறான குழுவுக்கே அழைப்பு விடுக்கிறார் என நினைப்பது நியாயமற்றதாக இருந்தாலும், இலங்கை கிரிக்கெட்டுக்கு தற்காலிக அல்லது குறுகிய கால உடனடித் திட்டங்களைவிட நீண்ட கால நிரந்தர தீர்வுகள் தேவைப்படுகிறது என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பையும், இலங்கை விளையாட்டுத்துறை சட்டத்தையும் மாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் நோக்கத்துடன் போதிய காலத்தை பெற்றுக்கொள்வதற்காக தம்மை பயன்படுத்துவதாக உணரும் நேர்மையான பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அவர்களின் காலத்தையும், உழைப்பையும் அர்ப்பணிக்க முன்வர மாட்டார்கள் எனவும் குமார் சங்கக்கார அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு முன்னாள் வீரரான அரவிந்த டி சில்வாவும் கருத்து வெளியிட்ட போது, தற்போதைய நிலையில் இந்த கோரிக்கைக்கு இணங்க முடியாது. ஏனெனில், 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட்டில் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தேன். அப்போது முதல் முன்னாள் வீரர்களை உள்ளடக்கி பல குழுக்களை அமைத்து  திட்டங்கள் மற்றும் யோசனைகளையெல்லாம் நாங்கள் முன்வைத்திருந்தோம். அந்த யோசனைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாகத்தான் தற்போது அவர்கள் தங்களது ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றனர். எனவே முதலில் கிரிக்கெட் நிறுவனத்தை முழுமையான மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் தற்போதாவது முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதேவேளை, இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்திலேயே பதிலளித்திருந்த மஹேல ஜயவர்தன, கடந்த காலத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் குழுவிலும் 6 மாதங்கள் விசேட ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக செயற்பட்ட போதிலும் அந்தக் குழுக்களின் ஊடாக எந்தவொரு பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என கூறியிருந்தார். அத்துடன், நடைமுறையிலுள்ள படிமுறை தொடர்பாக தமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை

இந்நிலையில், ஆஷ்லி டி சில்வாவின் அறிக்கைக்கு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ரொஷான் மஹாநாம பதிலளிக்கையில்,

நேர்மை, நடுநிலைமை, அரசியல் தலையீடுகளற்ற சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணையத் தயார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தாம் அவ்வாறானதொன்றைக் காணவில்லை எனவும், அதனால் ஒன்றிணைய இயலாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், இந்த யோசனைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், என்றாலும் இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிர்வாக ரீதியாக தள்ளப்படும் வரை காத்திருந்தமை கவலைக்குரியது எனவும் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இவர்கள் ஆலோசகர் பதவியை நிராகரிப்பது எந்தளவிற்கு நியாயமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால பயணத்திற்கு அவர்களின் சேவை அவசியம் என்பதால், அவர்கள் அது குறித்து மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<