இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை

2310

பந்தை சேதப்படுத்திய சந்தேகத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்தை மாற்றுவதற்கு நடுவர் தீர்மானித்ததால் இலங்கை வீரர்கள் மைதானம் வர மறுத்துள்ளனர். இதனால் சென் லூசியாவில் நடைபெற்று வரும் போட்டியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனஞ்சய டி சில்வா தனது கைகளை நடுவர் இயன் கௌலுக்கு காட்டும் காட்சிகள் நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் மாலை நேரத்தில் காண முடிந்தது. தனஞ்சய தனது கைகளில் ஒட்டி இருக்கும் கட்டை கொண்டு பந்தை பளபளப்பூட்டியதை அடுத்தே நடுவர் இவ்வாறு சோதித்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து நடுவர் பந்தின் அமைப்பை சோதித்ததோடு அதற்காக வளையம் பயன்படுத்தப்பட்டு பந்தின் வடிவமும் சோதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுடனும் நடுவர்கள் பேசுவதை காணமுடிந்தது.

அரைச்சதம் கடந்த ஸ்மித்; இரண்டாம் நாளில் மழை குறுக்கீடு

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளுக்கான ஆட்டத்தில் ..

இந்த சூழலில் பந்தை மாற்றுவதற்கு நடுவர்கள் தீர்மானித்திருப்பதோடு இதனைத் தொடர்ந்து மைதானத்திற்கு திரும்புவதில்லை என்று இலங்கை வீரர்கள் மற்றும் முகாமையாளர் தீர்மானித்துள்ளனர். கடும் போட்டி நிலவும் இந்த டெஸ்ட் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க போட்டி மத்தியஸ்தர் ஜவாகல் சிறிநாத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை காணமுடிந்தது.