சொந்த மண்ணில் துர்க்மெனிஸ்தானை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளும்?

இலங்கை கால்பந்து அணி, சுமார் 15 வருடங்களின் பின்னர் பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் இரண்டாம் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதன்படி, எதிர்வரும் 5ஆம் திகதி துர்க்மெனிஸ்தான் அணியுடன் இடம்பெறும் முதலாவது போட்டியுடன் இலங்கை இந்த சுற்றை ஆரம்பிக்கின்றது. 

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி மக்காவுடன் மோதியது. கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி மக்காவுவில் இடம்பெற்ற இதன் முதல் கட்டப் போட்டியில் (First Leg) இலங்கை அணி 1-0 என தோல்வியடைந்தது. 

உலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள……………..

பின்னர், அதற்கு அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட போட்டிக்கு இலங்கையின் பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டி மக்காவு அணி வரவில்லை. எனவே, இலங்கை அணிக்கு வோக் ஓவர் முறையில் 3-0 என வெற்றி வழங்கப்பட, இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. 

இரண்டாம் சுற்றின் முதல் மோதல் 

 • அணி: இலங்கை எதிர் துர்க்மெனிஸ்தான்
 • காலம்: 2019.09.05 (வியாழக்கிழமை)
 • நேரம்: இரவு 7.30 மணி 
 • மைதானம்: கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச அரங்கு

இலங்கை – துர்க்மெனிஸ்தான் கடந்தகால மோதல்கள் 

இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகள் கடந்த 15 வருடங்களாக ஒன்றை ஒன்று மோதியதில்லை. இறுதியாக 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியிலேயே மோதின. 

துர்க்மெனிஸ்தானில் இடம்பெற்ற முதல் கட்ட (First Leg) போட்டியை 2-0 என இழந்த இலங்கை வீரர்கள், இலங்கையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட மோதலை 2-2 என சமநிலையில் முடித்தனர். எனினும், குறித்த போட்டியின் மொத்த முடிவுகளுக்கு அமைய துர்க்மெனிஸ்தான் 4-2 என வெற்றி பெற்றது. 

இலங்கை – துர்க்மெனிஸ்தான் இடையிலான இறுதி மோதல்கள் 

 • 2003 – AFC கிண்ண தகுதிகாண் – துர்க்மெனிஸ்தான் 1 – 0 இலங்கை 
 • 2003 – AFC கிண்ண தகுதிகாண் – துர்க்மெனிஸ்தான் 3 – 0 இலங்கை
 • 2004 – உலகக் கிண்ண தகுதிகாண் – துர்க்மெனிஸ்தான் 2 – 0 இலங்கை 
 • 2004 – உலகக் கிண்ண தகுதிகாண் – இலங்கை 2 – 2 துர்க்மெனிஸ்தான்

இலங்கை அணி 

புதிய பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் முழுமையான வழிநடாத்தலில் கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்றுவிக்கப்பட்டு வரும் இலங்கை அணி, பெரிய அளவிலான முன்னேற்றம் ஒன்றை எதிர்பார்த்தே இந்த முறை அதிகமாக இளம் வீரர்களின் உள்ளடக்கத்துடன் தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றது. 

முக்கியமான போட்டிக்கு முன் இலங்கை கால்பந்து அணியின் மூவருக்கு காயம்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெற உள்ள…………….

இலங்கை அணியின் பின்களத்தில் மிகப் பெரிய பலமாக இருந்த இளம் வீரர் ஜூட் சுமன் விபத்தொன்றுக்கு முகம் கொடுத்துள்ளார். அதே இடத்தில் ஆடக்கூடிய மற்றொரு வீரரான உதய கீர்த்தி குமாாரவும் உபாதைக்கு உள்ளாகியுள்ளார். எனவே, இந்த இரண்டு இழப்புக்களை ஈடுசெய்ய புதிய ஒரு வீரருடன் பின்களத்தைப் பலப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பைப் பெறுகின்றார் அனுபவ வீரர் டக்சன் பியூஸ்லஸ்.   

சுஜான் பெரேரா

இலங்கை அணியின் மிகப் பெரிய பலமாக உள்ளவர் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா. மாலைத்தீவுகளில் தொழில்முறை கால்பந்தில் ஆடும் இவருக்கு துர்க்மெனிஸ்தான் அணியுடனான மோதலில் பியூஸ்லசுடன் இணைந்து மிகப் பெரிய ஒரு பங்கை அணிக்காக வழங்க வேண்டி உள்ளது. 

இலங்கை அணியின் மத்திய களத்தைப் பற்றி கூறும்போது, பயிற்றுவிப்பாளர் அண்மைய போட்டிகளில் தொடர்ச்சியாக பல மாற்றங்களை ஏற்படுத்தி, பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய களத்திற்காக பல இளம் வீரர்கள் போட்டி போடுகின்றனர். எனவே, இறுதி நேரம்வரை யார் களமிறக்கப்படுவார்கள் என்பது பக்கீர் அலியின் கைகளிலேயே உள்ளது. 

இலங்கை அணியின் முன்களத்தில் வேகமாக ஆடக்கூடிய வீரர் 19 வயது நிரம்பிய மொஹமட் ஆகிப். அனுபவ வீரர்களான மொஹமட் பசால் மற்றும் புதிய அணித் தலைவர் கவிந்து இஷான் ஆகியோரின் துணையுடன் தனது வேகம், நுணுக்கம் என்பவற்றால் எந்தவொரு நேரத்திலும் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் ஆகிப்பிடம் உள்ளது. எனவே, துர்க்மெனிஸ்தான் அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு வீரராக ஆகிப் இருப்பார். 

மொஹமட் ஆகிப்

தகுதிகாண் சுற்றில் துர்க்மெனிஸ்தான், வட கொரியா, தென் கொரியா, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுடன் H குழுவில் உள்ள இலங்கை அணிக்கு வெற்றிகளைப் பெறுவது என்பது சாத்தியம் குறைந்த விடயமாகவே உள்ளது. எனினும், நீண்ட காலம் சர்வதேச போட்டிகள் இன்றி இருந்த இலங்கை அணிக்கு இந்த தகுதிகாண் சுற்றானது, தமது முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய களமாக இருக்கும். 

Photos: Sri Lanka National Football Team – Beach Training Session (World Cup 2022 Qualifiers)

ThePapare.com | Sithija De Silva | 11/05/2019 Editing and re-using images without permission of ThePapare.com……………

எவ்வாறிருப்பினும், இலங்கை அணியின் அண்மைய போட்டி முடிவுகளும் அந்த அளவு மகிழ்ச்சியடையும் விதத்தில் இல்லை. எவ்வாறிருப்பினும், இலங்கை வீரர்கள் தமது சொந்த மைதானத்தில் எதிரணிக்கு மிகப் பெரிய சவாலைக் கொடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு, இலங்கை வீரர்கள் அண்மையில் பயிற்சிகளுக்காக மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப் பயணங்களும் கைகொடுக்கும். 

இலங்கை அணியின் இறுதி மோதல்கள் 

 • ஐக்கிய அரபு இராச்சியம் 5 – 1 இலங்கை 
 • இலங்கை 3 – 0 மக்காவு (வோக் ஓவர்) 
 • மக்காவு 1 – 0 இலங்கை 
 • லாவோஸ் 2 – 2 இலங்கை 
 • லாவோஸ் 2 – 1 இலங்கை 
 • மாலைத் தீவுகள் 0 – 0 இலங்கை 

துர்க்மெனிஸ்தான் அணி 

2022ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றில் தமது முதல் மோதலுக்காக இலங்கை வரும் துர்க்மெனிஸ்தான் அணிக்கு இந்தப் பயணம் மிகப் பெரிய ஒரு சவாலான பயணமாகவே இருக்க உள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து இலங்கை வரும் துர்க்மெனிஸ்தான் வீரர்கள் அனுபவ ரீதியில் இலங்கையைவிட மிகவும் உயரத்தில் உள்ளனர். 

துர்க்மெனிஸ்தான் அணியின் இறுதி மோதல்கள் அனைத்தும் ஆசியாவில் உள்ள முன்னணி அணிகளுடனே உள்ளது. இதில் குறிப்பாக, உலகக் கிண்ணத்தில் ஆடும் ஜப்பான் அணியுடனான மோதலையும் 3-2 என முடித்துள்ளமை அவ்வணியின் பலத்திற்கு முக்கிய சான்றாகும். 

அணியின் முக்கிய வீரராக மத்தியகள வீரர் அர்ஸ்லான்மிரத் அமனோவ் உள்ளார். 35 இற்கும் அதிகமான போட்டிகளில் தேசிய அணிக்காக ஆடியுள்ள இவர், அணியின் தலைமைப் பதவியையும் வகித்த அனுபவம் கொண்டவர். 

அர்ஸ்லான்மிரத் அமனோவ்

மறுமுனையில், துர்க்மெனிஸ்தான் அணிக்கு உள்ள மிகப் பெரிய இழப்பாக மத்தியகள வீரர்களான ருஸ்லான் மின்கசோவ் மற்றும் அட்யவேவ் ஆகியோரின் இழப்பு இருக்கின்றது. உபாதைக்குள்ளாகியுள்ள இந்த இரண்டு வீரர்களினதும் இடத்தில் பல மேலதிக பணிகளையும் அமனோவ் மேற்கொள்ள வேண்டி இருக்கும். 

மம்மட் ஓரல் மொஹமட்

துர்க்மெனிஸ்தான் அணியின் அரணாக உள்ளார் கோல் காப்பாளர் மம்மட் ஓரல் மொஹமட். சிரேஷ்ட வீரராகவும், அதிக போட்டிகளில் ஆடிய வீரராகவும் உள்ள அவரது பங்கு அணியின் பின்களத்தை ஒருங்கிணைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும். 

இலங்கையுடனான மோதலில் 2 முக்கிய வீரர்களை இழக்கும் துர்க்மெனிஸ்தான்

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில்………………….

இவை அனைத்திற்கும் மேலதிகமாக, துர்க்மெனிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் தொழில்முறை கழகங்களுக்காக ஆடும் வீரர்களாக உள்ளனர். இது இலங்கைக்கு எதிராக பெரிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு விருந்தாளிகளுக்கு ஒரு சாதக புள்ளியாகவே உள்ளது. 

துர்க்மெனிஸ்தான் அணியின் இறுதி மோதல்கள் 

 • பஹ்ரைன் 4 – 0 துர்க்மெனிஸ்தான் 
 • ஆப்கானிஸ்தான் 0 – 2 துர்க்மெனிஸ்தான் 
 • ஜப்பான் 3 -2 துர்க்மெனிஸ்தான் 
 • துர்க்மெனிஸ்தான் 0 – 4 உஸ்பகிஸ்தான் 
 • ஓமான் 3 – 1 துர்க்மெனிஸ்தான் 
 • உகண்டா 0 – 0 துர்க்மெனிஸ்தான்

இறுதியாக, 

பிஃபாவின் அணிகளுக்கான தற்போதைய தரவரிசையில் இலங்கை அணி 200ஆவது இடத்தில் உள்ளது. எனவே, 132ஆவது இடத்தில் உள்ள துர்க்மெனிஸ்தான் அணியை தமது சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ள இலங்கை வீரர்கள், தோல்வியில் இருந்து தம்மைப் பாதுகாப்பதை முதல் இலக்காகக் கொண்டு ஆட வேண்டும். 

தமது சொந்த மைதானத்தில் இறுதியாக 2018ஆம் அண்டு பிற்பகுதியிலேயே இலங்கை வீரர்கள் மலேசிய அணியுடன் ஒரு நட்பு ரீதியிலான போட்டியில் ஆடினர். எனவே, அடுத்த வாரம் கொரிய அணியை எதிர்த்தாடவுள்ள இலங்கை வீரர்கள் இந்தப் போட்டியில் எதிரணிக்கு கொடுக்கும் அழுத்தத்தைக் பொறுத்தே கொரியாவை எவ்வாறு சந்திக்கும் என்பது குறித்து சிந்திக்கலாம். 

எனவே, புதிய தலைவர் கவிந்து இஷானின் தலைமையில் ஒரு மாற்றத்திற்காக களம் காணும் இலங்கை அணி தாய் நாட்டு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான முடிவைக் கொடுக்குமா என்று பார்ப்போம்….  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க