விபத்தினால் காலை இழந்து பாராலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் சமித்த

2020 Tokyo Paralympics

150

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் முறையாக ஆண்களுக்கான F44 பிரிவு ஈட்டி எறிதலில் சமித்த துலான் களமிறங்கவுள்ளார்.

இலங்கை இராணுவ பொலிஸ் படைப்பிரிவு சார்பில் பாராலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற முதல் வீரரான 31 வயதுடைய சமித்த கணுக்கால் செயலிழந்தவராகக் காணப்படுகின்றார்.

நான் எப்போதும் ஒரு நல்ல விளையாட்டு வீரராக இருக்க விரும்புகிறேன். பாடசாலைக் காலத்திலும் அதற்குப் பிறகும் அதற்காக கடுமையாக உழைத்தேன். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு பாராலிம்பிக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்’ என்று ThePapare.com  இற்கு சமித்த துலான் வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதிப்பார்களா இலங்கை நட்சத்திரங்கள்?

சமித்த துலான் மாத்தறைதெனியாயவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். உயர்தரம் வரையிலான தனது பாடசாலைக் கல்வியை தெனியாய தேசிய பாடசாலையில் மேற்கொண்டார்

பாடசாலைக் காலத்தில் இருந்தே அவர் அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார். இதன் காரணமாக பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெறுகின்ற காலப்பகுதியில் பெரும்பாலும் மைதானத்தில் தான் நேரத்தை செலவிட்டார். ஆனால், பிற்காலத்தில் அவருக்கு மெய்வல்லுனர் போட்டிகள் மீதான ஆர்வம் குறைவடைய ஆரம்பித்தது.

நான் ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்புகளில் கல்விகற்கும் போது மற்ற விளையாட்டுக்களை தவிர்த்து ஈட்டி எறிதலைத் தெரிவு செய்தேன். ஆனால் பயிற்சி எடுக்க பாடசாலையில் ஈட்டி ஒன்று இருக்கவில்லை. அதற்கான பயிற்சியாளரும் இருக்கவில்லை.

ஆனால் பாடசாலையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஈட்டி எறிதல் தொடர்பில் அவர்களுக்கு தெரிந்தவற்றை சொல்லிக் கொடுத்தார்கள். இதனால் வலய மற்றும் மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்குபற்றி மூன்று இடங்களுக்குள் வரமுடிந்தது. பெரியளவில் வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் அகில இலங்கை பாடசாலைகள் போட்டிகள் வரை பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்தினேன்’ 

அனுபவ வீரராக டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்கும் சம்பத்

சமித்தவின் தந்தை கே. வசந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. அவருடைய தாயார் .டி.கே சாந்தி விவசாயத் திணைக்களத்தில் பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தில் ஒரே பிள்ளை தான் சமித்தஎனவே, பெற்றோர் வேலைக்கு செல்வதால் பாடசாலை சென்று வந்த பிறகும் சமித்தவுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்தது.

இந்த விளையாட்டுக்கு அடிமையாக இருப்பதற்கு இது முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். எனது அப்பா முகாமில் இருக்கும்போது மாதம் ஒரு முறை தான் வீட்டுக்கு வருவர். எனது அம்மாவும் காலையில் வேலைக்குச் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார். எனவே பாடசாலை முடிந்ததும் ஈட்டி எறிதல் பயிற்சிகளுக்காக செல்வேன்

அப்போதைய நாட்களில் ஜகத் மற்றும் மஞ்சநாயக்க ஆகிய இருவரும் தான் எனக்கு பயிற்சி வழங்கினார்கள். நான் ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்து கொண்டேன். அந்தளவுக்கு ஈட்டி எறிதல் விளையாட்டு எனது மனதைக் கவர்ந்தது. எனக்கும் இது எனது பெற்றோருக்கும் தெரியும். மறுபுறத்தில் இதற்காக எனது பெற்றோர் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை’.

அப்படி ஆரம்பமாகிய சமித்தவின் ஈட்டி எறிதல் வாழ்க்கையானது இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படைப் பிரிவு எனப்படுகின்ற இராணுவ பொலிஸ் பிரிவில் இணைந்துகொண்ட பிறகு தான் அடுத்த கட்டத்துக்குச் சென்றது.

பாடசாலை கல்வியை முடித்த பிறகும் ஈட்டி எறிதலை நான் கைவிடவில்லை. என்னால் முடிந்தவரை பயிற்சி செய்தேன். வேலையொன்றுக்குச் சென்றால் விளையாட்டை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்ற இடத்தில் தான் வேலை செய்வேன் என்ற குறிக்கோளுடன் இருந்தேன்.  

பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது

எனது அப்பா இலங்கை இராணுவத்தில் பணியாற்றினார். இதற்கிடையில், இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவில் விளையாடுவதற்கு நாடாளவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக எனது அப்பாவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நானும் அதற்காக விண்ணப்பித்தேன்.’

அதன்படி, இராணுவ பொலிஸ் சேவை படைப்பிரிவில் இணைந்து கொள்வதற்காக 2009 ஆம் ஆண்டு கிரிதலே இராணுவப் பயிற்சிப் கல்லூரியில் சமித்த இணைந்துகொண்டார். பயிற்சிக்குப் பிறகு அதுவரை அவர் கற்றுக் கொண்டிருந்த ஈட்டி எறிதல் போட்டி தொடர்பில் முறையாக பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதன்படி, 2016இல் இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் களமிறங்கிய அவர், ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அது எனது கனவு. ஏனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் மனதில் இருந்த மிகப் பெரிய கனவு அதுதான். இந்த வெற்றியின் மூலம் ஈட்டி எறிதல் விளையாட்டின் எதிர்காலம் குறித்து நிறைய நம்பிக்கை வந்தது. அத்துடன், இந்த வெற்றியின் பிறகு நான் அதிகளவில் பயிற்சிகளை முன்னெடுத்தேன். ஆனால் அவ்வாறு பயிற்சி எடுப்பதற்கு எனக்கு கொஞ்சம் நேரம் தான் கிடைத்தது.’

இதுஇவ்வாறிருக்க, 2017இல் ஈட்டி எறிதல் பயிற்சிகளை முடிந்து விட்டு விடுதிக்கு செல்லும் போது, துரதிஷ்டவசமாக சமித்த மோட்டர் சைக்கிள் விபத்து ஒன்றுக்கு முகங்கொடுத்தார். இதன் காரணமாக அவரது வலதுகால் செயலழிந்ததுடன், சுமார் இரண்டு ஆண்டுகளாக இராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

என்னால் விளையாட முடியாது என்பதை அறிந்ததும், நான் உலகம் முழுவதையும் இழந்தது போல் உணர்ந்தேன். மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒரே விடயத்தைத் தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை. யோசிக்கவும் கூட இல்லை. ஈட்டி எறிதல் விளையாட்டு எனது உம்பில் வேரூன்றியது. அதை எனது மனதிலிருந்து எளிதாக நீக்க முடியாத அளவுக்கு காணப்பட்டது

அதேபோல, விபத்தினால் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட முடியுமாது என்ற விடயம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியது.’

இந்த நேரத்தில் சமித்தவுக்கு உறுதுணையாக அவரது பெற்றோரும், அவரது மனைவியான யூரோஷா ரங்கனியும் இருந்தனர். குறித்த விபத்தினால் சமித்த ஊனமுற்றாலும் அவரது கனவுகளை முடக்கிப் போடுவதற்கு இடம்கொடுக்கவில்லை

சுமித்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, அவர் பாரா விளையாட்டு மைதானத்திற்குள் நுழைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவரது தந்தையின் இராணுவ சேவைப் பற்றிய அறிவும் அதற்குப் பயன்படுத்தப்பட்டது.

வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க

அது எனக்கு மிகப் பெரிய சக்தியைப் கொடுத்தது. அவர்கள் என் கனவுகளுக்கு உயிர் கொடுக்க பெரும் தியாகம் செய்தனர். நான் மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தேன். எனது பயிற்சியாளரான பிரதீப் நிஷாந்தவும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பாரா மெய்வல்லுனர் வீரராக பயிற்சியை ஆரம்பித்த சில மாதங்களில் மீண்டும் எனக்கு போட்டிகளில் களமிறங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.’ 

2018 இராணுவ பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட சமித்த தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதன்பிறகு அதே ஆண்டில் நடைபெற்ற தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அங்கு வெளிப்படுத்திய திறமையால் சமித்தவுக்கு அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இது சமித்தவின் முதல் சர்வதேசப் போட்டியாகும்

குறித்த போட்டியில் அவர் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, 2019ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக பாரா சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரநிதித்துவப்படுத்திய அவர், நான்காவது இடத்தைப் பெற்று ஆறுதல் அடைந்தார்

உலக பாரா சம்பியன்ஷிப்பில் வெளிப்படுத்திய திறமையினால் தான் எனக்கு டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு தகுதிபெற முடிந்தது. மிகவும் குறுகிய காலத்தில் பாராலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் வீரர் நான் என்று கருதுகிறேன்

இருப்பினும், இந்த வாய்ப்பைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக்கில் கடுமையான போட்டி இருக்கும். ஆனால் என்னால் முடிந்தவரை பாராலிம்பிக்கில் திறமையை வெளிபடுத்த முடியும் என்று நம்புகிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் எனக்கு உதவிய அனைவரின் நம்பிக்கையும் அதுதான். பாராலிம்பிக்கில் அவர்களை சந்தோஷப்படுத்த என்னால் ஏதாவது செய்ய முடியும்என்று சமித்த துலான் கூறினார்.

சுயமுற்சியால் பாராலிம்பிக் வரை செல்லும் பாலித்த பண்டார

எனவே 30ஆம் திகதி ஆண்களுக்கான F44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் களமிறங்கவுள்ள சமித்த துலான், இலங்கைக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

டோக்கியோ கோடைக்கால பாராலிம்பிக்கின் அனைத்து தகல்களையும் உங்களுக்கு வழங்க ThePapare.com தயாராக உள்ளது. போட்டிகள் செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 5 வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும். போட்டியின் அற்புதங்களை அனுபவிக்க ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<