விமானப்படை – ராணுவப்படை இடையிலான போட்டி சமநிலையில் : ரினௌனை வீழ்த்தியது புளூ ஸ்டார்

417
DCL Super 8 Week 1

டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016இன் சுப்பர் 8 சுற்றின் ஆரம்ப நாள் போட்டிகளில் விமானப்படை மற்றும் ராணுவப்படை அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. அதேவேளை, ரினௌன் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் புளூ ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டி

கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (3ஆம் திகதி) மாலை 4 மணிக்கு ஆரம்பமான சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் ராணுவப்படை விளையாட்டுக் கழக அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே ராணுவப்படை அணி வீரர்கள் தமது சிறப்பாட்டத்தின்மூலம் போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். விமானப்படை அணியினர் கவுண்டர் அட்டக் முறை மூலம் கோல்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முயன்றாலும் ராணுவப்படை அணியின் பின்கள வீரர்கள் அந்த முயற்சிகளை இலகுவாக முறியடித்தனர்.

அதேபோன்று ராணுவப்படை அணியினருக்கும் பல வாய்ப்புக்கள் கிடைத்தன. அதன்படி போட்டியின் 35வது நிமிடத்தில் ராணுவப்படை அணி வீரர் மதுஷான் டி சில்வா உள்ளனுப்பிய பந்தை சஜித் குமார கோலாக மாற்றினார். அந்த கோலைத் தொடர்ந்து ராணுவப்படை வீரர்கள் போட்டியின் முதல் பாதியில் தமது செல்வாக்கை செலுத்தினர்.

விமானப்படை அணியின் முன்னணி வீரர் கவிந்து இஷான் கோல்களைப் பெறும் இரண்டு வாய்ப்புகளைப் பெற்றாலும், அவரால் அதனை கோலாக்க முடியாமல் போனது. எனவே, முதல் பாதியில் சஜித் குமாரவின் கோல் மாத்திமே ஒரே கோலாக இருந்தது.

முதல் பாதி : ராணுவப்படை 01 – 00 விமானப்படை

இரண்டாவது பாதி ஆட்டத்தை விமானப்படை அணி வீரர்கள் பிரகாசமாக ஆரம்பித்தனர். போட்டியின் 55வது நிமிடத்தில் விமானப்படை அணி வீரர் கவிந்து இஷான் தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுக்க போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விமானப்படை வீரர்களை சமாளிக்க முடியாமல் ராணுவப்படை அணியினர் திண்டாடினார். எனினும் 60வது நிமிடத்தில் ராணுவப்படை அணிக்கு இலகுவான கோல் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற போதிலும் அதனை சஜித் குமார கோலாக்க தவறினார்.

போட்டியின் போக்கை மாற்றும் முகமாக போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணி வீரர் டிலான் உதயங்கவிற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. அதனால் பத்து வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு ராணுவப் படை அணி உள்ளாகியது.

இந்நிலையில் போட்டியின் 70வது நிமிடத்தில் விமானப்படையின் கெலும் பெரேரா பந்தை தலையால் முட்டி ஒரு கோலைப் போட விமானப்படை அணியினர் 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

விமானப்படை அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்த சந்தர்ப்பத்தில் போட்டியின் இறுதி நிமிடத்தில், அதாவது மேலதிக நேரத்தில் 95ஆவது நிமிடத்தில் அணித்தலைவர் மதுஷான் டி சில்வா ராணுவப்படை அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முழு நேரம் : ராணுவப் படை 02 – 02 விமானப்படை

சிறப்பாட்டக்காரர்- மதுஷான் டி சில்வா


ரினௌன் – புளூ ஸ்டார் இடையிலான போட்டி

சுப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில் ரினௌன் மற்றும் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகங்கள் முதல் போட்டி நடைபெற்ற ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்திலேயே மோதிக்கொண்டன. இப்போட்டி மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகியது.

போட்டியில் வெற்றி பெறும் அதிக வாய்ப்புடன் ரினௌன் விளையாட்டுக் கழகம் களமிறங்கியது. அதேபோன்று பலம் பொருந்திய அணிகளை வீழ்த்திய ப்ளூ ஸ்டார் அணியும் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்கியது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் அதிரடியாக விளையாடி ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்திற்கு சவால் கொடுத்தது. இப்போட்டியில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஜிபோலா தனது சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரினௌன் அணியின் பின்கள வீரர்களுக்கு சோதனை அளித்த ப்ளூ ஸ்டார் அணி 22வது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டு முன்னிலை பெற்றது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சன்ன அடித்த பந்து கோல் கம்பத்தை பதம் பார்த்துவிட்டு மீண்டும் மைதானத்திற்குள் வர, மறு வாய்ப்பை மொஹமட் பர்ஸீன் கோலாக்கினார்.

அதன் பின்பு மீண்டெழுந்த ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் ஆட்டத்தை கட்டுப்படுத்தத் பல முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவர்களால் கோல் வாய்ப்பினை ஏற்படுத்த முடியவில்லை.

தமது திட்டங்களை மறுபரிசீலனை செய்த ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் அஹமட்டை வெளியேற்றி ஷாமிலை களமிறக்கியது. எனினும் அவர்களால் முதலாவது பாதி முடிவதற்குள் கோல் ஒன்றைப் போட முடியவில்லை.

முதல் பாதி : புளூ ஸ்டார் 01 – 00 ரெனௌன்

போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பம் முதல் ரினௌன் விளையாட்டுக் கழகம் தமது ஆக்கிரமிப்பை செலுத்தத் தொடங்கியது. ஆட்டம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயன்றாலும் அவர்களால் கோல் போடும் வாய்ப்பொன்றை முழுமையாக்க முடியவில்லை.

கவுண்டர் அட்டக் மூலம் கோல் வாய்ப்புகளை உருவாக்க ப்ளூ ஸ்டார் அணி முனைந்தது. ஷன்னவினால் உள்ளனுப்பப்பட்ட பந்தினை ஜிபோலா தலையால் முட்டி கோலாக்க முனைந்தாலும் ரினௌன் கோல் காப்பாளர் உஸ்மான் அதனைத் தடுத்தார்.

ரினௌன் அணியின் வாய்ப்புகளை பொறுமையாக தடுத்தாடிய ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 82வது நிமிடத்தில் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியது. அவ்வணி ஷன்ன, ரினௌன் கோல் காப்பாளர் உஸ்மானைத் தாண்டி அடித்த பந்து கோலுக்குள் செல்ல ப்ளூ ஸ்டார் அணியின் வெற்றியை உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் போட்டியினை 2-0 என்ற கோல்கள் கணக்கில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

முழு நேரம் : புளூ ஸ்டார் 02 – 00 ரெனௌன்

போட்டியின் சிறப்பாட்டக்காரர் – ஈ.பி.ஷன்ன