தேசிய கூடைப்பந்தாட்டத்தில் வட மாகாணத்துக்கு இரட்டைப் பதக்கம்

47th National Sports Festival

137

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்திவரும் 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கூடைப்பந்தாட்டத்தில் இருபாலாரிலும் வட மாகாண அணிகள் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

கொழும்பு சுகததாச அரங்கில் அண்மையில் நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா கூடைப்பாந்தாட்டத்தின் ஆண்கள் பிரிவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அரை இறுதிப் போட்டியில் வடமேல் மாகாண அணியை 69 – 68 என்ற புள்ளிகள் கணக்கில் வட மாகாண அணி வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

மறுபுறத்தில் 2ஆவது அரை இறுதியில் கிழக்கு மாகாணத்தை மிக இலகுவாக 106 – 48 என்ற புள்ளிகள் அடிப்படையில் மேல் மாகாணம் வெற்றிகொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் வட மாகாண அணியை எதிர்கொண்ட மேல் மாகாண அணி 108 – 69 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, வட மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.

தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற இரு அணிகளிலும் தேசிய கூடைப்பாந்தாட்ட அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, பெண்கள் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த வட மாகாண அணியினர் முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் மாகாண அணியை 95 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

2ஆவது அரை இறுதியில் மத்திய மாகாண அணியை 103 – 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் மேல் மாகாணம் இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

இதனையடுத்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேல் மாகாண அணியிடம் 41 – 97 புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்த வட மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இதன்படி, இம்முறை தேசிய விளையாட்டு விழா கூடைப்பாந்தாட்டத்தில் இருபாலாரிலும் மேல் மாகாண அணிகள் தங்கப் பதக்கத்தையும், வட மாகாண அணிகள் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழா கூடைப்பாந்தாட்டம் ஆண்கள் பிரிவில் தசுன் நிலன்த மெண்டிஸ் (மேல் மாகாணம்) அதிசிறந்த வீரராகவும், பெண்கள் பிரிவில் அஞ்சலி ஏக்கநாயக்க (மேல் மாகாணம்) அதிசிறந்த வீராங்கனையாகவும் தெரிவாகினர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<