சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தரவரிசை பட்டியலில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனியை பின்தள்ளி பிரேஸில் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.  

பிஃபா, வியாழக்கிழமை (10) புதுப்பித்த தரவரிசையில் ஜெர்மனி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு இரண்டாவது இடத்திற்கு வந்ததோடு, பிரேஸில் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலாவது இடத்தைப் பிடித்தது. ஜெர்மனி அணி 2014 ஆம் ஆண்டுக்கு பின் கடந்த ஆண்டிலேயே முதலிடத்திற்கு முன்னேறியபோதும் தற்போது அதனை தக்கவைத்துக்கொள்ள முடியாமல்போயுள்ளது

ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்தடுத்து சுப்பர் கிண்ணம்

ஐரோப்பாவின் இரு பிரதான கழக போட்டிகளின்…

எனினும் ஆர்ஜன்டீனா தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. முதல் மூன்று இடங்களில் இருக்கும் பலம்கொண்ட மூன்று அணிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் நெருக்கமான போட்டி நீடிக்கிறது.  

இதில் 1993 ஆம் ஆண்டு பிஃபா தரவரிசையின் முதல் மாதத்தில் 3 ஆவது இடத்திற்கு வந்த பின் சுவிட்சர்லாந்து தற்போது தனது சிறந்த தரநிலையை பதிவு செய்துள்ளது. அந்த அணி ஓர் இடம் முன்னேறி 4 ஆவது இடத்தில் உள்ளது. போலந்து வரலாற்றில் தனது சிறந்த தரநிலையைப் பெற்று ஓர் இடம் முன்னேறி 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.  

போர்த்துக்கல் இரண்டு இடங்கள் பின்தங்கி 6 ஆவது இடத்திற்கு சரிந்ததும், பெல்ஜியம் ஓர் இடம் முன்னேறி 9 ஆவது இடத்திற்கு வந்ததுமே தரவரிசையின் முதல் 10 இடங்களில் ஏற்பட்ட ஏனைய மாற்றங்களாகும்.   

கடந்த ஓரு மாதத்தில் இடம்பெற்ற மொத்தம் 64 சர்வதேச போட்டிகளின் அடிப்படையிலேயே புதிய தரவரிசையில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையில் கடந்த மாதம் நடைபெற்ற CONCACAF தங்கக் கிண்ணத் தொடரானது, தரவரிசையில் கீழ் இடங்களில் உள்ள அணிகளின் மாற்றத்தில் அதிக தாக்கம் செலுத்தியுள்ளது.

தங்கக் கிண்ண இறுதிப் போட்டியில் தோற்ற ஜமைக்கா இம்முறை தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாக உள்ளது. அந்த அணி மொத்தம் 172 புள்ளிகளை அதிகரித்துக்கொண்டு 76 ஆவது இடத்தில் இருந்து 57 ஆவது இடத்திற்கு வந்தது. தங்கக் கிண்ண சம்பியனான அமெரிக்கா 9 இடங்கள் முன்னேறி 26 ஆவது இடத்தை பிடித்தது. இந்த தொடரில் ஆடிய கொஸ்டாரிக்கா 5 இடங்கள் ஏற்றம் பெற்று 26 ஆவது இடத்தையும் மெக்சிகோ 2 இடங்கள் முன்னேறி 21 ஆவது இடத்தையும் பிடித்தன

பார்சிலோனாவில் இருந்து விலகியது பணத்துக்காக அல்ல – நெய்மர்

பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட்…

ஓகஸ்டில் புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் அதிகம் பின்தள்ளப்பட்ட அணிகளாக கியூபா மற்றும் குராகவ் என்பன உள்ளன. இந்த இரு அணிகளும் 18 இடங்கள் சரிந்தன. இதனால் கியூபா 182 ஆவது இடத்திலும் குராகவ் 86 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.  

இம்முறை தரவரிசையில் ஆபிரிக்க நாடான நமீபியா அதிகபட்சம் 20 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் 156 ஆவது இடத்தில் இருந்த அந்த அணி 136 ஆவது இடத்திற்கு முன்னேறியது. தரவரிசை புதுப்பிக்கப்படும் காலத்தில் 3 போட்டிகளில் விளையாடிய நமீபியா ஒன்றில் வென்று இரண்டில் தோற்றது.

இலங்கை கால்பந்து அணியை பொறுத்தவரை எட்டு மாதங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் தரவரிசையில் தொடர்ந்தும் 197 ஆவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இதே இடத்தில் நீடிக்கும் இலங்கையின் மோசமாக தரநிலை இதுவாகும்.  

கடந்த தரவரிசை வெளியீட்டின்போது, 96ஆவது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 97ஆவது இடத்தில் இருக்கின்றது.

அடுத்து வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி பிஃபா தரவரிசை மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ளது.

நிலை நாடு புள்ளிகள்
1 பிரேஸில் 1604
2 ஜெர்மனி 1549
3 ஆர்ஜன்டீனா 1399
4 சுவிட்சர்லாந்து 1329
5 போலந்து 1319
6 போர்த்துக்கல் 1267
7 சிலி 1250
8 கொலம்பியா 1208
9 பெல்ஜியம் 1194
10 பிரான்ஸ் 1157