கொழும்பு அணிக்கு கைகொடுத்த ரொஷேன் சில்வாவின் அபார சதம்

159

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (25) நிறைவுக்கு வந்தன.

இதில் கொழும்பு அணிக்காக தனியொருவராகப் போராடிய ரொஷேன் சில்வா சதமடித்து அசத்த, காலி அணிக்காக சுமிந்த லக்ஷான் அரைச்சதம் அடித்து கைகொடுத்தார். இந்த இரண்டு வீரர்களும் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்து தத்தமது அணிகளுக்கு வலுச்சேர்த்தனர்.

ஜப்னா எதிர் கொழும்பு

ரொஷேன் சில்வாவின் சதத்தின் உதவியுடன் ஜப்னா அணிக்கு எதிராக கொழும்பு அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணிக்கு முன்வரிசை வீரர்கள் எவரும் பெரிதளவில் கைகொடுக்கவில்லை.

எனினும், அவ்வணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவ துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வா, இன்றை ஆட்டநேரம் முடியும் வரை களத்தில் இருந்து 147 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை டெஸ்ட் அணிக்காக 2019ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய அவர், இந்தப்போட்டியில் பெற்றுக்கொண்ட சதத்தின் மூலம் முதல்தரப் போட்டிகளில் தன்னுடைய 25ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

எவ்வாறாயினும், போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது கொழும்பு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ஓட்டங்களை எடுத்து ஜப்னா அணியை விட 249 ஓட்டங்களினால் பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ஜப்னா அணி – 555 (173.4) – சமிந்த பெர்னாண்டோ 141, நவோத் பரணவிதான 77, துனித் வெல்லாலகே 74, கீத் குமார 63*, சந்தூஷ் குணதிலக்க 61, சதீர சமரவிக்ரம 58, பிரபாத் ஜயசூரிய 6/169, சம்மு அஷான் 2/62, லஹிரு மதுஷங்க 2/69

கொழும்பு அணி – 309/8 (91) – ரொஷேன் சில்வா 147*, கிரிஷான் சஞ்சுல 35, அஷேன் பண்டார 28, நுவனிது பெர்னாண்டோ 28, துனித் வெல்லாலகே 2/93

காலி எதிர் கண்டி

பபசர வடுகேவின் சதம் மற்றும் சுமிந்த லக்ஷானின் அரைச்சதத்தின் மூலம் கண்டி அணிக்கு எதிராக வலுவான ஓட்ட எண்ணிக்கையை காலி அணி பெற்றுக்கொண்டது.

காலியில் நடைபெறுகின்ற இந்தப்போட்டியின் மூன்றாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த காலி அணி, ஆட்ட நேர முடிவில் 388 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் 100 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த பபசர வடுகே 128 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 4 சிக்ஸர்களும், 9 பௌண்டரிகளும் அடங்கும். அதேபோல, அந்த அணிக்காக பின்வரிசையில் களமிறங்கிய சுமிந்த லக்ஷான் 60 ஓட்டங்களையும், ஹேஷான் ஹெட்டியாரச்சி 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் இருந்தனர்.

எனினும், காலி அணி 94 ஓட்டங்களினால் கண்டி அணியை விட பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாளை போட்டியிள் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 482 (120.1) – கமிந்து மெண்டிஸ் 111, லசித் குரூஸ்புள்ளே 93, லஹிரு உதார 92, கசுன் விதுர 58, சஹன் ஆராச்சிகே 52,ஹேஷான் ஹெட்டியாரச்சி 4/64, நிமேஷ் விமுக்தி 3/120, சானக ருவன்சிறி 2/96

காலி அணி – 388/8 (123.1) – பபசர வடுகே 128, சுமிந்த லக்ஷான் 60*, சங்கீத் குரே 36, ஹேஷான் ஹெட்டியாரச்சி 33*, நிபுன் ரன்சிக 2/45, சஹன் ஆராச்சிகே 2/58, அசித பெர்னாண்டோ 2/64

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<