பார்சிலோனாவில் இருந்து விலகியது பணத்துக்காக அல்ல – நெய்மர்

1031
Neymar press

பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கழகத்திற்கு உலகில் மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் பிரேஸில் முன்கள வீரர் நெய்மர், தன் மீதான குற்றச்சாட்டுக்கு கவலை வெளியிட்டுள்ளார்.

எனது மாற்றத்திற்கு பணம் மாத்திரமே காரணம் என்று மக்கள் நினைப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தனது எதிர்காலம் பற்றி நீண்ட காலமாக நிச்சயமில்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 222 மில்லியன் யூரோக்களுக்கு (262 மில். டொலர்) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நெய்மர், இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் யூரோக்களை (8200 மில். ரூபாய்) சம்பாதிக்கவுள்ளார்.

உலகின் விலை உயர்ந்த வீரரானார் நெய்மர்

ஆனால் நெய்மர் நினைத்தால் மற்றொரு கழகத்தில் மேலும் பணம் சம்பாதிக்க முடியும் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தலைவர் நாஸர் அல் கெலைபி குறிப்பிட்டார்.

இந்நிலையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சனிக்கிழமை பங்கேற்கும் முதல் லீக் போட்டியில் விளையாடுவதற்கு நெய்மர் தயாராகியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தளமாகக் கொண்ட பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் வெள்ளிக்கிழமை (04) இணைந்த நெய்மர், அணி முகாமையாளர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பங்கேற்றார்.

இந்த மாற்றத்திற்கு காரணம் பணம் மாத்திரமே என்ற குற்றச்சாட்டுப் பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நெய்மர், “இவ்வாறு கூறும் மக்களுக்கு எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி ஒன்றும் தெரியாது என்று மாத்திரமே கூறவேண்டியுள்ளது. நான் ஒருபோதும் பணத்துக்காக இதனை செய்யவில்லை.

நான் பணத்தை தேடுவதாக இருந்தால், வேறு ஒரு கழகத்திற்கு வேறு ஒரு நாட்டுக்கு என்று வேறு எங்காவது போயிருக்கலாம். மக்கள் தொடர்ந்து இவ்வாறு சிந்திப்பதையிட்டு நான் மிகக் கவலையடைகிறேன். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம் என்னை நம்பியது மகிழ்ச்சியானது” என்று கூறினார்.

எனினும் நெய்மரின் மாற்றம் பார்சிலோனா அணி ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசிகர்கள் நெய்மரின் படங்களை எரித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.     

“நான் எந்த தவறும் செய்ததாக நினைக்கவில்லை. ரசிகர்களுடன் நான் ஒருபோதும் மதிப்பு குறைவாக நடந்ததில்லை. கழகம் ஒன்றில் இருந்து வெளியேறவும் தொடர்ந்து இருப்பதற்கும் எல்லா வீரர்களுக்கு அனுமதி இருக்க வேண்டும். இதுவே வெளியேறுவதற்கான தருணம் என்றும் வீரர் ஒருவர் நினைப்பாராயின் அவருக்கு வெளியேற முடியுமாக இருக்க வேண்டும்” என்று நெய்மர் குறிப்பிட்டார்.

நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவது குறித்த ஒப்பந்தத்தில் கடந்த இரு தினங்களாக இழுபறி நீடித்த நிலையிலேயே அவர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியில் இணைவது வியாழக்கிழமை உறுதியானது.

PSG அணி கட்டார் நாட்டு தொழிலதிபர் நாஸர் அல் கெலைபிக்கு சொந்தமானதாகும். 2011 ஆம் ஆண்டு அணியை வாங்கிய அவர் அதிக முதலீடு செய்து வருகிறார்.

ஆனால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு வீரரை ஒப்பந்தம் செய்வது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்று லா லிகா மற்றும் பார்சிலோனா கழகங்கள் கேள்வி எழுப்பி இதனை கூட்டமைப்புக்கு புகாராக அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளன.