பெயார் பிரேக் தொடரில் இரண்டாம் இடம் பெற்ற சமரியின் பல்கோன்ஸ்

108

ஹொங்கொங்கில் நடைபெற்று முடிந்திருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான பெயார்பிரேக் (FairBreak) அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில் சமரி அத்தபத்துவின் பல்கோன்ஸ் மகளிர் அணியினை, வோரியர்ஸ் மகளிர் அணி 93 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் தோல்வியினைத் தழுவிய பல்கோன்ஸ் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றது.

>> தனது கன்னி ஐ.பி.எல். போட்டியினை எதிர்பார்த்து காத்திருக்கும் தசுன் ஷானக்க

மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுத்த பெயார்பிரேக் (FairBreak) அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (16) கோவ்லூன் கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகியிருந்தது.

தொடரின் இறுதிப் போட்டிக்கு அரையிறுதிப் போட்டிகளில் ஸ்பிரிட் மகளிர் அணியினை வீழ்த்திய வோரியர்ஸ் அணியும், பார்மி ஆர்மி மகளிர் அணியினை வீழ்த்திய பல்கோன்ஸ் அணியும் தெரிவாகியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பல்கோன்ஸ் மகளிர் அணி முதலில் வோரியர்ஸ் மகளிர் அணியை துடுப்பாட பணித்திருந்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய வோரியர்ஸ் மகளிர் அணியானது ஹேய்லி மெதிவ்ஸின் அபார சதத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்கள் எடுத்தது.

வோரியர்ஸ் மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹேய்லி மெதிவ்ஸ் 52 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்கள் எடுத்தார். அதேவேளை கேத்ரின் பிரைஸ் 20 பந்துகளுக்கு அரைச்சதம் விளாசி 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் பல்கோன்ஸ் மகளிர் அணியின் பந்துவீச்சில் அஞ்சு குரூங் 2 விக்கெட்டுக்களையும்,  சமரி அத்தபத்து மற்றும் மரிகோ ஹில் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட அதிக சவால்மிக்க 231 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பல்கோன்ஸ் மகளிர் அணி சமரி அத்தபத்து மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதும் தொடர்ந்து பறிகொடுத்த விக்கெட்டுக்களின் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

பல்கோன்ஸ் மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சமரி அத்தபத்து அதிகபட்சமாக 17 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 29 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் தீர்த்தா சதீஷ் உம் பல்கோன்ஸ் அணிக்காக 29 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வோரியர்ஸ் மகளிர் அணியின் பந்துவீச்சில் கேத்ரின் பிரைஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ஹேய்லி மெதிவ்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகியாக ஹேய்லி மெதிவ்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

>> ஒருநாள் போட்டிகள் போன்றே டெஸ்ட் ஆடும் குசல் மெண்டிஸ்

பெயார்பிரேக் (FairBreak) அழைப்பு T20 தொடரின் தொடர் நாயகியாக இலங்கையின் சமரி அத்தபத்து தெரிவாகினார். சமரி அத்தபத்து பெயார்பிரேக் தொடரில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்ததோடு அவர் மொத்தமாக 281 ஓட்டங்களையும், 12 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

வோரியர்ஸ் மகளிர் – 230/4 (20) ஹேய்லி மெதிவ்ஸ் 123(52), கேத்ரின் பிரைஸ் 52(20), அஞ்சு குரூங் 43/2(4)

பல்கோன்ஸ் மகளிர் – 137/8 (20) சமரி அத்தபத்து 29(17), தீர்த்தா சதீஷ் 29(32), கேத்ரின் பிரைஸ் 16/3(4), ஹெய்லி மெதிவ்ஸ் 14/2(3)

முடிவு – வோரியர்ஸ் மகளிர் அணி 93 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<