குப்பிளான் குறிஞ்சிக்குமரன் – விண்மீன்கள் இடையேயான போட்டியில் குழப்ப நிலை

559

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கால்பந்து லீக்கினைச் சேர்ந்த குப்பிளான் குறிஞ்சிக்குமரன் மற்றும் பருத்தித்துறை கால்பந்து லீக்கினைச் சேர்ந்த பலாலி விண்மீன்கள் அணிகளுக்கிடையிலான FA கிண்ணத்திற்கான தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின்போது ஏற்பட்ட ஒரு குழப்ப நிலையினால் போட்டி நடைபெறாமலேயே விடப்பட்டது.

குறித்த போட்டி நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.02.2017) அன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறுமென இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் Thepapare.com இற்கு  அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜப்பான் உட்பட 3 நாடுகளுடன் மோதவுள்ள இலங்கை 16 வயதின்கீழ் அணி

ஜப்பான் கால்பந்து சம்மேளனம், இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து முதல் முறையாக நடாத்தும் 16 வயதிற்கு….

இதனடிப்படையில் ThePapare.com இன் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்வதற்காக மைதானம் மற்றும் நேரம் ஆகியவற்றை உறுதிசெய்ய முற்பட்டபோது, போட்டி  “அல்வாய் நண்பர்கள்மைதானத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.

எனவே, ThePapare.com இனர் அல்வாய் நண்பர்கள் மைதானத்திற்கு 4.00 மணியளவில் சென்றிருந்த வேளையில் இரு அணியினரும் மைதானத்தில் நடுவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். அதேவேளை மைதானம் எந்தவிதமான தயார்படுத்தலுமின்றி, எல்லைக்கோடுகள் கூட அடையாளப்படுத்தப்படாதவாறு காணப்பட்டது.

நடுவர்கள் வருகை தராமை குறித்து ஆராய்கையில், அவர்கள் 3.30 மணி முதல் நெற்கொழு கழுகுகள் மைதானத்தில் காத்திருப்பதாக அறிய முடிந்தது. காரணம் அவர்களுக்கு கால்பந்து சம்மேளனம் நெற்கொழு கழுகுகள் மைதானத்திலேயே போட்டி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

மேற்படி போட்டியானது வீண்மீன்களின் சொந்த மைதானத்தில் இடம்பெற வேண்டிய போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 5 மணி கடந்தும் நடுவர்கள் வருகை தராமையால் இரு அணி வீரர்களும் மைதானத்தை விட்டு அகன்றிருந்தனர்.

எனவே, போட்டி ஏற்பாடு தொடர்பாக விண்மீன்கள் விளையாட்டுக் கழகத்தின் செயலாளருடன் Thepapare.com தொடர்பு கொண்டபோது, தமது காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனவே, தமக்கு சொந்த மைதானம் இதுவரை இல்லை. அதன் காரணமாக தாம் பிறிதொரு மைதானத்தையே சொந்த மைதானமாக(Home ground) தேர்வு செய்ய வேண்டும் என பருத்தித்துறை லீக்கின் உப தலைவருக்கு அறிவித்திருந்தோம்.

அத்தோடு, தாம் நெற்கொழு கழுகுகள் மைதானத்தையே தேர்வு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தோம். அதற்கு பருத்தித்துறை லீக், கழுகுகள் மைதானத்தில் போட்டியை நடாத்த முடியாது என மறுத்தனர். இந்நிலையில், நண்பர்கள் மைதானத்தில் போட்டி நடைபெறும் என எமக்கு கடந்தவாரம் கால்பந்து சம்மேளனத்திலிருந்து தொலைபேசி மூலம் அறிவுறுத்தினர்.  

அதனடிப்படையிலேயே போட்டிக்காக நாங்கள்  நண்பர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளோம். கடந்த வருடமும் தாம் மன்னார் ஜோசப் வாஸுடனான போட்டிக்குச் சென்றிருந்த போதும் நடுவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால், தாம் பிறிதொரு தினத்தில் மன்னார் சென்று போட்டியில் பங்கெடுத்தோம்என்றார்.

சிறந்த திட்டமிடலே கிரிக்கெட் வீரர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் : அக்சயன் ஆத்மநாதன்

பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடித்துள்ள நிலையில்…

மேற்படி சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை லீக்கினைச் சேர்ந்த சோதி அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர், “FA கிண்ணத்தினுடைய லீக் மட்ட போட்டிகளுக்கு மட்டுமே உரிய லீக் பொறுப்பு. அதற்குப் பின்னரான சகல போட்டிகளுக்கும் கால்பந்து சம்மேளனம் நேரடியாக கழகங்களுடன் தொடர்பு கொண்டு போட்டிகளை நடாத்தும். ஆகவே மேற்படி சம்பவத்திற்கும் லீக்கிற்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை.” என்றார்.

இந்த விடயம் குறித்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணியின் பயிற்றுவிப்பாளர் சுரேந்திரன் கருத்து தெரிவிக்கையில், தமக்கு கால்பந்து சம்மேளனத்திலிருந்து வலிகாமம் லீக்கின் தலைவரூடாக கழுகுகள் மைதானத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் விண்மீன் அணியினர் தம்மைத் தொடர்புகொண்டு நண்பர்கள் மைதானத்திற்குப் போட்டி மாற்றப்பட்டுள்ளதென அறிவித்ததன் அடிப்படையில் தாம் இந்த மைதானத்திற்கு வருகை தந்தோம்” எனத் தெரிவித்தார்.  

அதேவேளை, சம்மேளனத்தின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட போட்டி இது. முறையான அறிவித்தல் இன்றி மைதானம் மாற்றப்பட முடியாது என்பதனை அறிந்திருந்ததனால் தான் இது தொடர்பாக வலிகாம லீக்கின் தலைவருக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகவும், அது தொடர்பாக அவர் எப்பதிலையும் தரவில்லை எனவும் சுரேந்திரன் மேலும் தெரிவித்தார்.

போட்டி தொடர்பாக மத்தியஸ்தர்களின் நிலையை அறிவதற்காக எமது குழு, நெற்கொழு கழுகுகள் மைதானத்திற்குச் சென்றிருந்தவேளை அவர்கள் அங்கிருந்து புறப்பட்டிருந்தனர். அவர்களை தொலைபேசி மூலமாவதாயினும் அணுக முற்பட்டவேளை அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போட்டியின் முடிவு என்ன? மற்றொரு தினத்தில் போட்டி இடம்பெறுமா? அல்லது உரிய தரப்பினரால் ஒரு தீர்வு கொடுக்கப்படுமா என்பதனை கால்பந்து சம்மேளனத்தின் அறிக்கையின் பின்னரே தீர்மானிக்க முடியும்.

இந்த விடயம் குறித்த உங்களது கருத்தை கீழே பதிவிடுங்கள்