ரெட் ஸ்டாரை வீழ்த்தி இறுதி 16 அணிகளுக்குள் நுழைந்த கல்முனை பிரில்லியண்ட்

2265
Brilliant SC vs Red Star SC

கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் நிறைவுற்ற FA கிண்ணத்திற்கான 32 அணிகள் மோதும் சுற்றுக்குரிய போட்டியொன்றில் பேருவளை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கல்முனை பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம், அடுத்த சுற்றில் தேசிய அளவிலான பலம் மிக்க அணிகளுடன் மோதவுள்ளது.

இதற்கு முன்னைய சுற்றில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் அணியினரை தமது போராட்டத்தின் மூலம் 2-1 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்த கல்முனை பிரில்லியண்ட் கழகம், காத்தான்குடி நஷனல் விளையாட்டுக் கழகத்திற்கு 9-1 என கோல் மழை பொழிந்து அதிர்ச்சித் தோல்வி கொடுத்திருந்த பேருவளை ரெட் ஸ்டார் அணியுடன் இப்போட்டியில் மோதியிருந்து.

பலத்த போராட்டத்தின் பின் செரண்டிப் அணியை தோற்கடித்த சுபர் சன்

போட்டியினை இரு அணி வீரர்களும் உற்சாகத்துடன் ஆரம்பித்திருந்தனர். போட்டி ஆரம்பித்து சிறிது கணத்திலேயே கோல் அடிக்கும் முயற்சியொன்றினை கல்முனை அணியின் M.C.ஹாரூன் மேற்கொண்டிருந்தார். எனினும் பந்தினை கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்த ரெட் ஸ்டார் தரப்பு, அந்த முயற்சியினை தோல்வியுறச் செய்தது.

பின்னர் பந்தின் ஆதிக்கத்தை பேருவளை இளம் அணி தமதாக்கிக் கொண்டது. இவ்வாறானதொரு நிலையில் ப்ரீ கிக் வாய்ப்பொன்றும் அவ்வணிக்கு கிட்டியது. எனினும் அதனை அவர்கள் சரிவர உபயோகித்திருக்கவில்லை.

தொடர்ந்து தலையால் முட்டி கோல் பெறும் வாய்ப்பொன்றினைப் பெற்றுக்கொண்ட பிரில்லியண்ட் அணியின் சவ்ஜான் அதனை வீணாக்கியிருந்தார். அதேபோன்று ரெட் ஸ்டார் அணியின்  மொஹமட் றிகாசும் ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தும் அதனை நழுவவிட்டிருந்தார்.

தொடர்ந்தும் ரெட் ஸ்டார் அணிக்கு பல வாய்ப்புக்கள் கிட்டியிருந்தன. எனினும் பிரில்லியண்ட் அணியின் பலமான பின்கள வீரர்களால் வாய்ப்புக்களை வரப்பிரசாதமாக மாற்ற எதிரணிக்கு இயலவில்லை.

இவ்வாறாக போட்டியின் ஆதிக்கத்தினை மெதுமெதுவாய் ரெட் ஸ்டார் அணி ஆட்கொண்ட தருணத்தில், தனக்கு கிடைத்த பந்தினை லாவகமான முறையில் நீண்ட தூரத்திற்கு கொண்டு சென்ற பிரில்லியண்ட் அணியின் ஹாரூன் அனைவரும் எதிர்பார்ந்திருந்த முதல் கோலினை போட்டியின் 24ஆவது நிமிடத்தில் பெற்றார்.

இதன்போது சொந்த மைதானத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிய சந்தோசம் மைதானத்தில் கோசங்களாக வெளிப்படுத்தப்பட்டன.

இதனை அடுத்து கடும் முயற்சிகள் மூலம் பந்தினை நீண்ட நேரம் பிரில்லியண்ட் அணியின் எல்லையில் ரெட் ஸ்டார் வீரர்கள் வைத்திருந்தனர்.

இதன்போது, சிறப்பாக செயற்பட்ட ரெட் ஸ்டார் அணியின் தலைவர் ரஹ்மான் தமது அணிக்கான முதல் கோலினை முதற்பாதி நிறைவடைவதற்கு சற்று முன்னர் சமார்த்தியமான முறையில் பெற்றிருந்தார்.

ஸர்வானின் அபார ஆட்டத்தின் உதவியுடன் ஜாவா லேனை வீழ்த்தியது கொழும்பு கால்பந்து கழகம்

இரு அணிகளும் கோல் எண்ணிக்கையில் சமநிலை அடைய, விறுவிறுப்பாகிய ஆட்டத்தின் முதற்பாதியின் எஞ்சிய நிமிடங்கள், முன்னர் போன்று ரெட் ஸ்டார் அணியின் ஆதிக்கத்துடன் நிறைவடைந்தது.

முதல் பாதி: பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம் 1 – 1 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் பாதியில் பந்தின் ஆதிக்கம் அதிகமாக பிரில்லியண்ட் அணியிடம் இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. இம்முறையும் தமக்கு கிடைத்திருந்த பல வாய்ப்புக்களை ரெட் ஸ்டார் அணியினர் கோட்டை விட்டிருந்தனர்.

திடகாத்திரமாக செயற்பட்டிருந்த பிரில்லியண்ட் அணியின் கோல்காப்பாளர் எதிரணிக்கு எந்த சந்தர்ப்பத்தினையும் வழங்கவில்லை. அதேபோன்று, அவர்களின் பின்கள வீரர்களும் எதிர்தாக்குதல்களை இம்முறை சிறந்த முறையில் மேற்கொண்டிருந்தனர்.

மேலும், ரெட் ஸ்டாரினால் கோல்கள் பெறுவதற்காக உதைக்கப்பட்டிருந்த பந்துகள் கம்பங்களில் பட்டும் அதற்கு மேலாகவும் அப்பாலும் சென்ற காரணங்களினால் அவர்களுக்கான அதிகமான வாய்ப்புகள் இறுதி நேரத்தில் வெற்றியளிக்கவில்லை.

இத்தருணத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பொன்றை பொன் போன்று கருதிய றவூப், இரண்டாவது கோலினை 78ஆவது நிமிடத்தில் பெற்று பிரில்லியண்ட் அணியை முன்னிலைப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து இரு அணிகளும் சமபலத்தினை வெளிக்கொணர்ந்து ஆட்டத்தை தொடர்ந்தன. எனினும், ரெட் ஸ்டாரின் முயற்சிகள் அனைத்தும் போட்டியை பெனால்டி வரை கொண்டு செல்வதாகவே இருந்தது.

ஆட்டம் நிறைவடைவதற்கு மேலதிகமாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டும் கோல்கள் எதுவும் எந்த அணியினராலும் பெறப்படாத நிலையில் இந்த மோதல் நிறைவடைந்தது.

எனவே, மேலதிக ஒரு கோலினால் கல்முனை பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம் வெற்றியாளர்களாக மாறி அடுத்த சுற்றான 16 அணிகள் மோதும் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

முழு நேரம்: பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம் 2 – 1 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்  

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – M.C. ஹாரூன் (பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் ThePapare.com இற்கு கருத்து தெரிவித்த கல்முனை பிரில்லியண்ட் அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் பளீல், இரண்டு கழகங்களின் வீரர்களும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். பேருவளை அணியினருக்கே அதிக வாய்ப்புக்கள் கிடைத்திருந்தன. எனினும், எங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புக்களை நாம் சரிவர உபயோகித்து இப்போட்டியினை வென்றோம் என்றார்.

அதேபோன்று, ரெட் ஸ்டார் அணியின் பயிற்றுவிப்பாளரும், கொழும்பு கால்பந்து அணி வீரருமான மொஹமட் ரமீஸ் இப்போட்டி தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் எங்களுக்கு கிடைத்த அதிகமான வாய்ப்புக்களை நாம் தவறவிட்டிருந்தோம். அத்துடன் எமது பின்கள வீரர்களும் தவறுகளை விட்டிருந்தனர். இதுவே எமது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இது நொக் அவுட் சுற்றுத் தொடராகவே உள்ளது. எமது இலக்கு டிவிஷன் – I போட்டிகளாகும். எனவே இனி அதற்காக நாம் எமது அணியைத் தயார்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

கோல் பெற்றவர்கள்

பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்  M.C. ஹாரூன் 24’, A.L.M றவூப் 78’

ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மொஹமட் ரஹ்மான் 38’

மஞ்சள் அட்டைகள்

பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்சாஹிபு ஜிமுன் 35’