புத்தம் புது தொடருடன் கிரிக்கெட்டை ஆரம்பிக்கும் தென்னாபிரிக்கா!

9688

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் அடிப்படையிலான புதிய கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது. 

தென்னாபிரிக்காவின் உள்ளூர் வீரர்களை உள்ளடக்கிய மூன்று அணிகள் இந்த போட்டித் தொடரில் விளையாடவுள்ளதுடன், அணிக்கு தலா 8 வீரர்கள் இணைக்கப்படவுள்ளனர். கிங்பிஷர்ஸ், கைட்ஸ் மற்றும் ஈகல்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளதுடன், கிங்பிஷர்ஸ் அணியின் தலைவராக காகிஸோ ரபாடா, கைட்ஸ் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் மற்றும் ஈகல்ஸ் அணியின் தலைவராக ஏபி.டி. வில்லியர்ஸ் ஆகியோர் செயற்படவுள்ளனர். 

“ஜொப்ரா ஆர்ச்சருடன் நட்பு இல்லை” – கெமார் ரோச்

தென்னாபிரிக்காவில் கொவிட்-19 காரணமாக ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத போதும், தொடுகையுடன் தொடர்பில்லாத விளையாட்டுகளை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் இந்த புதிய தொடரானது இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாக முடிவுசெய்யப்பட்டுள்ள போதிலும், தென்னாபிரிக்க விளையாட்டு திணைக்களம் இதுவரை இதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த கிரிக்கெட் தொடரானது வர்த்தக நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைபெறவுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், இதன்மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

போட்டி விதிமுறைகள்

  • ஒரு போட்டியில் மூன்று அணிகள் ஒரே தடவையில் விளையாட முடியும். அணிக்கு தலா 8 ஓவர்கள் வழங்கப்படும்
  • போட்டியில் 36 ஓவர்கள் வீசப்படும் என்பதுடன், 18 ஓவர்கள் ஒரு பாதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
  • ஒரு அணி 12 ஓவர்கள் துடுப்பெடுத்தாட முடியும். அதில் 6 ஓவர்கள் முதற்பாதியிலும், 6 ஓவர்கள் இரண்டாவது பாதியிலும் ஒரு அணியால் துடுப்பெடுத்தாட முடியும். துடுப்பெடுத்தாடும் 12 ஓவர்களை இரண்டு எதிரணிகளும் தலா 6 ஓவர்களாக பங்கிட்டுக்கொள்ளும்.
  • போட்டியின் முதற்பாதியில் துடுப்பெடுத்தாடும் மற்றும் பந்துவீசும் அணிகள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்படும்.
  • முதல் பாதியில் அதிக ஓட்டங்களை பெறும் அணிகள் அடிப்படையில், இரண்டாவது பாதியில் துடுப்பெடுத்தாடும் அணிகள் வரிசைப்படுத்தப்படும். ஓட்டங்கள் சமனிலையானால், முதற்பாதியின் துடுப்பாட்ட வரிசை தொடரும். 
  • துடுப்பெடுத்தாடும் அணியின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும், 8வது வீரர் தனியாக துடுப்பெடுத்தாட முடியும். எனினும், அவர் ஒரு கனிசமான ஓட்ட எண்ணிக்கையை மாத்திரமே பெறமுடியும்.
  • முதல் பாதியில் ஒரு அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தால், இரண்டாவது பாதியில் மீதமுள்ள பந்துகள் துடுப்பாட்டத்துக்காக சேர்த்துக்கொள்ளப்படும் 
  • இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புதிய பந்துகள் வழங்கப்படும் என்பதுடன், குறித்த பந்தினால் 12 ஓவர்கள் வீசவேண்டும். ஒரு பந்துவீச்சாளருக்கு 3 ஓவர்கள் மாத்திரமே வழங்கப்படும். 
  • போட்டியின் வெற்றி ஓட்டங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிக ஓட்டங்களை பெற்ற அணிக்கு தங்கம், இரண்டாவது அணிக்கு வெள்ளி மற்றும் மூன்றாவது அணிக்கு வெண்கலம் வழங்கப்படும். 
  • இரண்டு அணிகள் ஒரே ஓட்ட எண்ணிக்கையை பெற்றால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும். மூன்று அணிகளும் ஒரே ஓட்ட எண்ணிக்கையை பெற்றால், தங்கம் பகிரப்படும். 

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<