உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் 10 வீரர்கள்

2052

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) மிகப் பெரிய மோதலான உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 21 ஆவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளன. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பும் பல எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பிரேசில் மற்றும் ஆர்ஜென்டீனா அணிகளின் முன்னாள் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனா போன்றோர் இன்று வரை உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் நினைவு கூறப்படுகின்ற சிறந்த வீரர்கள் ஆவர். தற்போதைய உலகக் கிண்ணம் குறித்து கதைக்கும்பொழுதும் பலராலும் அவர்கள் நினைவுபடுத்தப்படுகின்றனர்.

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு……

எனினும், எமது இந்தப் பார்வை அவர்கள் குறித்ததல்ல. மாறாக, இம்முறை ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் பிரகாசிப்பார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்படும் சிறந்த வீரர்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை உங்களுக்காக…

10. டீமோ வேர்னர் (Timo Werner)

நடப்புச் சம்பியன் ஜேர்மனி அணியின் அனுபவ வீரர்களையும் தாண்டி, தன்னை ஒரு சிறந்த நட்சத்திர வீரராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு இளம் வீரர் டீமோ வேர்னர் என்றால் அது மிகையாகாது.

2017 ஆம் ஆண்டு  ஜேர்மனி தேசிய அணியில் இணைக்கப்பட்ட வேர்னர் அவ்வாண்டு ரஷ்யாவில் இடம்பெற்ற பிஃபாவின் கண்டங்களுக்கிடையேயான கிண்ணத் தொடரில் (FIFA Confederations Cup) சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனி அணியின் முக்கிய வீரராக விளையாடியிருந்தார். மேலும் அப்போட்டித் தொடரில் அதிக கோல்கள் பெற்று தங்க பாதணி விருதையும் வென்றிருந்தார்.

9. ஜேம்ஸ் ரொட்ரிகாஸ் (James Rodriguez)

2014 ஆண்டு பிரேசிலில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டித் தொடரில் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்த வீரர் தான் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரொட்ரிகாஸ்.

அத்தொடரில் அவர் வெளிப்படுத்திய திறமையில் அசந்து போன உலகின் முன்னணி கழகமான ஸ்பெயின் நாட்டின் ரியல் மெட்ரிட் அணி அவரை 63 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இது கொலம்பிய வீரர் ஒருவர் கழகம் ஒன்றுக்கு ஒப்பந்தமான அதி கூடிய தொகையாகும்.

2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் கொலம்பியா அணி முதல் முறையாக காலிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியது. அவற்றில் ஐந்து போட்டிகளில் விளையாடிய ரொட்ரிகாஸ் ஆறு கோல்கள் பெற்று தங்க பாதணியையும் வென்றிருந்தார். மேலும், உருகுவே அணிக்கெதிராக பெற்ற ஒரு கோல் தொடரின் சிறந்த கோலாக தெரிவு செய்யப்பட்டு அதற்கான விருதையும் அவர் பெற்றிருந்தார்.

இவ்வாறான சிறந்த பதிவுகளை கடந்த காலங்களில் கொண்டுள்ள இவர், இம்முறை உலகக் கிண்ண தொடரிலும் கொலம்பிய அணி சார்பாக சிறப்பாக விளையாடுவார் என பலராலும் எதிர்பார்ககப்படுகின்றது.

8. இஸ்கோ (Isco)

2008 ஐரோப்பிய (யூரோ) கிண்ணம், 2010 உலகக் கிண்ணம் மற்றும் 2012 ஐரோப்பிய கிண்ணம் என அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, 2014 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் மற்றும் 2016 யூரோ கிண்ண தொடர்களில் மிக மோசமான பெறுபேறுகளின் மூலம் சோபிக்க தவறியது உதைப்பந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதனை நிவர்த்தி செய்யும் வண்ணம் இம்முறை அவ்வணியில் அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பிரபல ரியல் மெட்ரிட் அணியின் மத்தியகள வீரரான இஸ்கோ, இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் சிறந்த முறையில் தனது பங்கினை ஸ்பெயின் அணிக்காக வழங்குவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஆர்ஜென்டீன அணிக்கெதிரான சினேகபூர்வ போட்டியில் இஸ்கோ ஹெட்ரிக் கோல் அடித்திருந்தமை இவரின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றது.

2018 பிஃபா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த பிரபலங்கள்

இம்மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள……

7. ஹெர்ரி கேன் (Harry Kane)

ரியல் மெட்ரிட் அணியின் முன்னாள் முகாமையாளரான சினேடின் சிடான் மூலம் பரிபூரணமான வீரர் என போற்றப்பட்ட உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான டொடென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹெர்ரி கேன், இவ்வருட உலகக் கிண்ண போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் மற்றொருவராவார்.

இங்கிலாந்து அணியின் தலைவராக செயற்படவுள்ள இவர், இம்முறை அவ்வணியை சிறப்பாக வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பருவகாலத்தில் டொடென்ஹம் அணி சார்பாக 30 கோல்கள் பெற்றிருந்த இவர் இங்கிலாந்து அணி சார்பாக இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 13 கோல்களைப் பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டித் தொடர்களில் வழமையாகவே சோபிக்க தவறுகின்ற அணிகளில் இங்கிலாந்து அணிக்கு தனி இடமுண்டு. எனவே, இம்முறை அணியில் பல இளம் வீரர்கள் புதிய வழிகாட்டலுடன் இக்கோட்பாட்டை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. கெவின் டி ப்ரூனே (Kevin De Bruyne)

இங்கிலாந்து பிரீமியர் லீக் சம்பியனான மென்செஸ்டர் சிட்டி மற்றும் பெல்ஜியம் அணிகளின் மத்தியகள வீரரான இவர் இம்முறை உலகக் கிண்ண தொடரில் தனது தேசிய அணி சார்பாக சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் கடந்த பருவகாலத்தில் பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல்களுக்காக உதவிகள் (Assist) செய்த வீரர் ஆவார். மேலும் கடந்த 2014 உலகக் கிண்ணம் மற்றும் 2016 யூரோ கிண்ண தொடர்களில் பெல்ஜியம் அணி காலிறுதி சுற்றுகளுக்கு முன்னேறிய வேளையில் குறித்த போட்டிகளில் இவர் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

பெல்ஜியம் அணி சார்பாக இதுவரை 14 கோல்கள் பெற்றுள்ள ப்ரூனே இம்முறை அவ்வணிக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு வீரராகவும் உள்ளார்.

நெய்மாரின் அசத்தல் கோலால் கடைசி பயிற்சிப் போட்டியிலும் பிரேசில் வெற்றி

நெய்மாரின் அசத்தல் கோல் உட்பட மூன்று அபார…..

5. மொஹமட் சலாஹ் (Mohamed Salah)

இவ்வாண்டு உதைப்பந்தாட்ட ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட வீரர் சலாஹ் என்பது மறுக்க முடியாத உண்மை. 28 வருடங்களின் பின் எகிப்து அணி இம்முறை உலகக் கிண்ண தொடரில் விளையாடுகிறது என்றால் அதற்கு சலாஹ்வின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது எனலாம்.

மேலும், இவர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் அதிக கோல்களையும் பெற்றிருந்தார். 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துடன் ஒப்பந்தமான இவர், கடந்த பருவகாலத்தில் பிரீமியர் லீக் மற்றும் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் பிரீமியர் லீக் தொடர் ஒன்றில் அதிக கோல்கள் பெற்ற வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தியிருந்தார்.

அது மட்டுமின்றி, இந்த வருடத்தில் அடுத்தடுத்து பல விருதுகளையும் சலாஹ் பெற்றுள்ளார். அதில் குறிப்பாக இவ்வாண்டின் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரர் விருதைக் குறிப்பிடலாம். சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் காயம் காரணமாக இடை நடுவே வெளியேறிய இவர் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டு எகிப்திய குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், எதிரணியின் பின்கள வீரர்களால் அதிகம் கட்டுப்படுத்தப்படும் வீரராக இவர் இலக்கு வைக்கப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

4. அன்தோனி கிரீஸ்மன் (Antoine Griezmann)

இவ்வாண்டின் ஐரோப்பிய லீக்  (Europa League) சம்பியனான ஸ்பெயின் நாட்டின் அட்லெடிகோ மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான  இவர் பிரான்ஸ் தேசிய அணியின் முன்னணி வீரராக உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் அணி அத்தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. இத்தொடரில் பிரான்ஸ் அணி சார்பாக சிறப்பாக விளையாடிய அவர் அதற்கான அங்கீகாரமாக தொடரின் சிறந்த வீரருக்கான விருதை பொற்றுக்கொண்டார். மேலும், தொடரில் அதிக கோல்கள் போட்ட வீரரும் இவரே என்பதால் தங்க பாதணி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது….

3. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)

போர்த்துக்கல் மற்றும் ரியல் மெ ட்ரிட் அணிகளின் நட்சத்திர வீரரும் உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான இவர் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் ஆவார். கழக மட்டத்திலும் தேசிய அணி சார்பாகவும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் இம்முறை உலகக் கிண்ண தொடரில் சாதிப்பார் என்பது நிச்சயம்.

தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் அதிக சர்வதேச கோல்கள் பெற்றுள்ள முதன்மையானவர் இவர். 2016 ஆம் ஆண்டின் யூரோ கிண்ண தொடரில் ரொனால்டோ தலைமையில் சம்பியனாக முடிசூடிய போர்த்துக்கல் அணி, நம்பிக்கையுடன் ரஷ்யா நோக்கி பயணிக்கிறது. உலகின் சிறந்த வீரருக்கான (Ballon d’Or) விருதை ஐந்து முறை வென்றுள்ள இவர் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிலும் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.

எனினும் சலாஹ்வைப் போன்றே ரொனால்டோவும் எதிரணியின் பின்கள வீரர்களால் இலக்கு வைக்கப்படுவார்.

2. லியொனல் மெஸ்ஸி (Lionel Messi)

கழக மட்டத்தில் பார்சிலோனா அணிக்காக எண்ணில் அடங்காத கிண்ணங்களை வென்று கொடுத்துள்ள மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா  அணி சார்பாக இதுவரை சர்வதேச கிண்ணம் வென்றிறாத ஒருவராக உள்ளார்.  எனவே, இம்முறை உலகக் கிண்ணம் வெல்லும் மிகப் பெரிய கனவுடன் ரஷ்யா செல்கிறது மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்க இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திடீரென தனது ஓய்வை அறிவித்த மெஸ்ஸி, பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி தனது முடிவை மாற்றிக்கொண்டார். பெறும்பாலும் இம்முறை உலகக் கிண்ண போட்டிகளுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 உலகக் கிண்ணம்: போர்த்துக்கல் அணியின் முன்னோட்டம்

போர்த்துக்கல் அணி 2016இல் ஐரோப்பிய கிண்ணத்தை…..

இவர் உலகின் தலைசிறந்த வீரரும் பல இளம் வீரர்களின் முன்மாதிரி வீரருமாவார். மேலும் பல சாதனைகளுக்கு  சொந்தக்காரரான இவரும் ஐந்து முறை உலகின் சிறந்த வீரருக்கான (Ballon d’Or) விருதை வென்றுள்ளார்.

இவருக்கு அணியின் ஏனைய முன்கள மற்றும் மத்திய கள வீரர்கள் பங்களிப்பை வழங்கும்பொழுது மெஸ்ஸியின் முழுப் பயனை ஆர்ஜன்டீன அணியினால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.

1. நெய்மர் (Neymar)

பிரேசிலின் சுப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நட்சத்திர வீரர் நெய்மர் உலகில் அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பதிவைக் கொண்டவர். கடந்த ஆண்டு 220 மில்லியன் யூரோ என்ற பாரிய தொகைக்கு ஸ்பெயின் பார்சிலோனா கழகத்தில் இருந்து பிரான்ஸின் பரிஸ் செயிண்ட் ஜேர்மன் (பி.எஸ்.ஜி) கழகத்துடன் இணைந்து கொண்டார்.

பி.எஸ்.ஜி அணி சார்பாக சிறப்பாக விளையாடி வரும் அவர் 20 போட்டிகளில் 19 கோல்கள் பெற்றுள்ளதோடு பிரேசில் அணி சார்பாக 55 கோல்களையும் பெற்றுள்ளார். இம்முறை உலகக் கிண்ண தொடருக்காக ரஷ்யா செல்லும் பிரேசில் அணிக்கு சம்பியன் ஆவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் அதில் நெய்மரின் பங்களிப்பு கூடுதலாக இருக்கும் எனவும் விமர்சகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் யார் இம்முறை அதிக கோல்களைப் பெறுவர்? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<