இங்கிலாந்துக்கு எதிராக T20I மூலம் சாதனை படைத்த பாபர் – ரிஸ்வான் ஜோடி

21
England vs Pakistan 2022

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டாவது T20I போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, 7 போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது.

>> பங்களாதேஷ் T20I அணிக்கு மீண்டும் புதிய தலைவர்

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களை பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவர்களில் 203 ஓட்டங்களுடன் அடைந்தது.

அதன்படி வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி T20 போட்டிகள் வரலாற்றில் அணியொன்று விரட்டிய அதிகூடிய ஓட்டங்களை விரட்டி சாதனை செய்திருந்தது.

இதற்கு முன்னர் அணியொன்று விக்கெட் இழப்பின்றி T20 போட்டிகளில் விரட்டிய அதிகூடிய வெற்றி இலக்கு 184 ஓட்டங்களாகும். இந்த வெற்றி இலக்கினை 2017ஆம் ஆண்டு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக விரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதற்கு முன்னர் T20 சர்வதேச போட்டிகளில் அணியொன்று விக்கெட் இழப்பின்றி விரட்டிய அதிகூடிய வெற்றி இலக்கு 169 ஓட்டங்களாகும். இந்த வெற்றி இலக்கு 2016ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியினால், பாகிஸ்தானுக்கு எதிராக விரட்டப்பட்டிருந்தது.

இதேநேரம் பாபர் அசாம் – மொஹமட் ரிஸ்வான் ஜோடி இப்போட்டியில் 203 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று T20 போட்டிகளில் அணியொன்று போட்டியின் வெற்றி இலக்கினை விரட்டும் போது பெற்ற அதிகூடிய இணைப்பாட்டத்தினையும் பதிவு செய்தது. இதற்கு முன்னர் T20 போட்டிகளில் போட்டியின் வெற்றி இலக்கினை விரட்டும் போது பதிவு அணியொன்று பதிவு செய்த அதிகூடிய இணைப்பாட்டம் 197 ஓட்டங்களாகும். இந்த இணைப்பாட்டத்தினையும் பாபர் அசாம் – மொஹமட் ரிஸ்வான் ஜோடி 2021ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தது. அத்துடன் பாகிஸ்தான் சார்பில் T20I போட்டிகளில் 200 ஓட்டங்கள் என்கிற இணைப்பாட்டத்தினை பதிவு செய்த முதல் ஜோடியாக பாபர் அசாம் – மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் மாறியிருக்கின்றனர்.

இதேவேளை 200 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை விரட்டி இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதிகூடிய வெற்றி இலக்கு ஒன்றினை T20I போட்டிகளில் விரட்டிய அணியாகவும் பாகிஸ்தான் சாதனை செய்திருக்கின்றது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக அணியொன்று T20I போட்டிகளில் விரட்டிய அதிகூடிய வெற்றி இலக்கு 199 ஓட்டங்களாகும். இந்த வெற்றி இலக்கினை 2018ஆம் ஆண்டில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக விரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இங்கிலாந்தினை T20I போட்டிகளில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்கிற சாதனையினையும் பாகிஸ்தான் பதிவு செய்திருக்கின்றது.

>> T20 உலகக் கிண்ணத்தின் பின் இலங்கையுடன் விளையாடும் இந்தியா

இப்போட்டியில் சதம் விளாசிய பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக T20I போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசிய முதல் வீரர் என்கிற சாதனையினையும் படைத்திருந்தார். இன்னும் இப்போட்டியோடு சேர்த்து T20I போட்டிகளில் 1929 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருக்கும் மொஹமட் ரிஸ்வான் – பாபர் அசாம் ஜோடி, T20I போட்டிகளில் அதிக ஓட்டங்களை இணைப்பாட்டம் மூலம் பெற்ற ஜோடியாகவும் சாதனை செய்திருக்கின்றது. இதற்கு முன்னர் இந்தியாவின் ரோஹிட் சர்மா மற்றும் சிகார் தவான் ஆகியோர் 1743 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததே T20I போட்டிகளில் துடுப்பாட்ட ஜோடியொன்று பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாக கருதப்பட்டிருந்தது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<