இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த யாழ் மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகள்

198

பெரும் சமர்களிற்கான இறுதிக் கட்ட தயார்படுத்தலில் பாடசாலை கிரிக்கெட் அணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றன. வடக்கின் முன்னணி கிரிக்கெட் விளையாடும் பாடசாலை அணிகளான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளும், சென். ஜோன்ஸ் கல்லூரி – யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.  

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி 

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பத்திரிசியார் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை பெண்கள் தோல்வி

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடருக்கான……..

முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த பத்திரிசியார் கல்லூரி அணியை, யாழ் மத்திய கல்லூரி 78 ஓட்டங்களோடு ஆட்டமிழக்கச்செய்தது. பத்திரிசியார் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக அமல்ராஜ் 21 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் இயலரசன் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான விதுசன் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். 

பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி, இளம் வீரர் சண்சஜனின் 100 ஓட்டங்கள் அணித்தலைவர் வியாஸ்காந்தின் 105 மற்றும் இயலரசனின் பெறுமதியான 45 ஓட்டங்களின் துணையுடன் 6 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருக்கையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. 

பத்திரிசியார் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் டனீசியஸ், டெஸ்வின் மற்றும் சதுர்திகன்  மூவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

யாழ் மத்திய கல்லூரியின் கனிஷ்ட அணிகளில் சோபித்திருந்த இளம் வீரரான சண்சஜன் முதற்பதினொருவர் அணிக்காக பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, இந்த பருவகாலத்தில் அணியின் தலைவர் வியாஸ்காந்த் பெற்ற முதலாவது சதமும் இந்த போட்டியிலேயே கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முதலாவது இன்னிங்சில் யாழ் மத்திய கல்லூரியை விட 230 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பத்திரிசியார் கல்லூரியை, யாழ் மத்திய கல்லூரி 100 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது. 

விதுசன் வெறுமனே 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். போட்டியில் 47 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்கள் என்ற பெறுதியினையும் இவர் பதிவு செய்தார். வியாஸ்காந்த் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்த போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம் 

புனித பத்திரிசியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 78 (40.1) – அமல்ராஜ் 21, விதுசன் 4/22, இயலரசன் 3/06

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 308/6 (68.1) – சன்சஜன் 105, வியாஸ்காந்த் 100*, இயலரசன் 45, நிதுசன் 27, சதுர்திகன் 2/46, டனிசிஜஸ் 2/83, டெஸ்வின் 2/84

புனித பத்திரிசியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 100 (35.5) – விதுசன் 7/25, வியாஸ்காந்த் 2/32 

முடிவு – யாழ் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்களால் வெற்றி 

சென். ஜோன்ஸ் கல்லூரி எதிர் யாழ்ப்பாண கல்லூரி 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 46 ஓட்டங்களுக்கு யாழ்ப்பாணக் கல்லூரி அணியை மட்டுப்படுத்தினர். சுழல் பந்துவீச்சாளர்கள் தமக்கிடையே 8 விக்கெட்டுக்களை பகிர்ந்திருந்தனர். சரண் 5 விக்கெட்டுக்களையும், வினோஜனிற்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுகேதன் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மற்றொரு முன் வரிசை துடுப்பாட்ட வீரரான வினோஜன் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப சோபிக்கத் தவறிய போதும் சென். ஜோன்ஸ் கல்லூரி 213 ஓட்டங்களுடன் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. 

167 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக  துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண கல்லூரியினர் 85 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். இறுதியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 

துடுப்பாட்டத்தில் அதிகப்பட்சமாக நிகர்ஜழன் 22 ஓட்டங்களையும், சிந்துஜன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தனுஜன் மற்றும் ஹரிசன் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம் 

யாழ்ப்பாண கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 46 (31.4) – சரண் 5/09, வினோஜன் 3/08 

சென் ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 213/9 (50.2) – சுகேதன் 81,வினோஜன் 52,நர்த்தனன் 2/31, சிந்துஜன் 2/57

யாழ்ப்பாண கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 88(42) – நிகர்ஜழன் 22, சிந்துஜன் 20, தனுஜன் 4/21, விதுசன் 4/32 , ஹரிசன் 2/32 

முடிவு – சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<