ஓய்வு வழங்கப்பட்டிருந்த விராட் கோஹ்லி மீண்டும் இந்திய அணியில்

260
ESPN Cricinfo

அவுஸ்திரேலிய அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களுக்குமான இந்திய அணியின் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரான எம்.எஸ்.கே பிரசாத்தினால் இன்று (15) வெளியிடப்பட்டதற்கமைய ஓய்வு வழங்கப்பட்டிருந்த விராட் கோஹ்லியுடன் இன்னும் பல முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி இறுதியாக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியிருந்தது. அந்த அடிப்படையில் தற்போது இந்திய மண்ணுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வீரர்களுடன் சேர்ந்து இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதாக அர்ஜுன அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளான டி20 சர்வதேச தொடரின் இரு போட்டிகளிலும் மற்றும் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளது.   

குறித்த இரு தரப்பு தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் இரு தொடர்களுக்குமான குழாம் கடந்த வியாழக்கிழமை (07) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (15) இரு தொடர்களுக்குமான இந்திய அணியின் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாகவும், உலகக்கிண்ண போட்டிகளுக்காக உடல் கட்டமைப்பை பேணுவதற்காகவும் நியூஸிலாந்து அணியுடனான தொடரின் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுடன் இடைநடுவில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த இந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பி தலைமை பெறுப்பை ஏற்றுள்ளார்.

மேலும் அதே நோக்கத்துடன் நியூஸிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்றாஹ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக தாயகம் சென்றிருந்த இளம் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான ரிஷாப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அத்துடன் முக்கியமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பாரிய சர்ச்சையில் சிக்கியிருயிருந்த இரு வீரர்களில் ஒருவரான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல் மீண்டும் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக நியூஸிலாந்து அணியுடனான தொடரில் இடம்பெற்றிருந்த வீரர்களான பந்துவீச்சாளர்கள் கலீல் அஹமட், முஹம்மட் சிராஜ் மற்றும் சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.

விஷ்வ, ராஜிதவின் பந்து வீச்சை புகழ்ந்த குயிண்டன் டி கொக்

வேகப்பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இறுதி மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் மாத்திரமே கிடைத்துள்ளது. டி20 சர்வதேச தொடரிலிருந்து இவர் முழுமையாக நீக்கப்பட்டுள்ளார். இவரின் குறித்த வெற்றிடத்துக்காக மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான சித்தார்த் கௌல் அழைக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் பிரகாசிக்காததன் காரணமாக தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் ஒருநாள் குழாமிலிருந்து நீக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷாப் பண்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றுமொரு தமிழக வீரரான விஜய் சங்கர் தொடர்ந்தும் குழாமில் நீடிக்கின்றார். மேலும் கே.எல் ராகுலின் வருகையினால் நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் சர்வதேச அறிமுகம் பெற்றி சுப்மன் கில் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணியின் குழாமிலிருந்து அவ்வணியின் முக்கிய சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்விற்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவரின் வெற்றிடத்துக்காக கடந்த வருடம் (2018) நடைபெற்றிருந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 15 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த சுழல் பந்துவீச்சாளர் மயங்க் மார்க்கன்டே அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் மிக முக்கிய சுழல் பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருந்த தமிழக வீரரான ரவிசந்திரன் அஸ்வின் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காக புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்.

ஐ.சி.சி இன் நடைமுறையிலுள்ள டி20 சர்வதேச அணிகளின் தரவரிசைக்கமைய இந்திய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் காணப்படுகின்றது. ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அணிகளின் தரப்படுத்தலில் இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய அணி 100 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் காணப்படுகின்றது.

டி20 சர்வதேச போட்டிகளுக்காக 15 பேர் கொண்ட குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா (உபதலைவர்), கே.எல் ராகுல், சிகார் தவான், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் டோனி (விக்கெட் காப்பாளர்), ஹார்த்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, விஜய் சங்கர், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்றாஹ், உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல், மயங்க் மார்க்கன்டே

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா (உபதலைவர்), சிகார் தவான், அம்பத்தி ராயுடு, கேதார் யாதவ், எம்.எஸ் டோனி (விக்கெட் காப்பாளர்), ஹார்த்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்றாஹ், முஹம்மட் ஷமி, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷாப் பண்ட், சித்தார்த் கௌல், கே.எல் ராகுல்

இலங்கை வீரர்கள் எவரும் ஊழல் மோசடியில் ஈடுபடவில்லை – ஹரீன் பெர்னாண்டோ

இறுதி மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹிட் சர்மா (உபதலைவர்), சிகார் தவான், அம்பத்தி ராயுடு, கேதார் யாதவ், எம்.எஸ் டோனி (விக்கெட் காப்பாளர்), ஹார்த்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்றாஹ், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முஹம்மட் ஷமி, விஜய் சங்கர், ரிஷாப் பண்ட், கே.எல் ராகுல்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<