திட்டமிட்டபடி இலங்கை – பங்களாதேஷ் தொடர் நடைபெறும்

95
SLC

கொவிட்-19 அச்சம் காரணமாக சந்தேகத்திற்கு உள்ளான இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை – பங்களாதேஷ் முதல் ஒருநாள் போட்டி சந்தேகம்

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (23) ஆரம்பமாகவிருந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் படி இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சமிந்த வாஸ், இலங்கை அணி வீரர்களான ஷிரான் பெர்னாந்து மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான தொடர் இன்று ஆரம்பமாகுவதில் சிக்கல்கள் உருவாகியிருந்தன. 

தொடர்ந்து நேற்று (22) மாலை மீண்டும் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வெளியானதன் அடிப்படையில், சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கும் அதேவேளை, ஷிரான் பெர்னாந்துவுக்கு தொடர்ந்தும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை நிராகரித்த வீரர்கள்

இவ்வாறு கொவிட்-19 வைரஸ் அச்சம் குறைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்திலேயே இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், சிக்கல்கள் எதுவுமின்றி தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மீண்டும் கொவிட-19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஷிரான் பெர்னாந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக வேகப்பந்துவீச்சாளரான ஷிரான் பெர்னாந்து முன்னதாக இம்மாத ஆரம்பத்திலும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இதேவேளை, இலங்கை அணியின் வீரர்கள் அனைவரும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக நாட்டை விட்டு வெளியேற முன்னர் கொவிட்-19 தடுப்பூசியினை குறைந்தது ஒரு தடவையேனும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…