இங்கிலாந்துடனான தோல்விக்கு ரஷீத் கான் காரணமில்லை: குல்படீன்

312
Getty

இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் பெற்றுக்கொண்ட தோல்விக்கு ரஷீத் கான் காரணமல்ல எனத் தெரிவித்த ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப், அவர் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர், இவ்வாறாதொரு நிலைமை ரஷீத் கானுக்கு மட்டுமின்றி எந்தவொரு வீரருக்கும் நடக்கலாம் என குறிப்பிட்டார்.   

மோர்கனின் உலக சாதனையோடு இங்கிலாந்து அணி இலகு வெற்றி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 24………

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மென்செஸ்டரில் நேற்று (18) நடைபெற்ற லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கனின் அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்த அணி 379 என்ற இமாலய ஓட்டத்தைக் குவித்தது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ஷீத் கானின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓரு போட்டியாகவும் இது அமைந்தது. இதில் 9 ஓவர்கள் பந்துவீசிய அவர், 110 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் 11 சிக்ஸர்களும் அடங்கும்.

இதன்மூலம், கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸுடன் 2ஆவது இடத்தை ரஷீத் கான் பகிர்ந்து கொண்டார். மேலும், அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த சுழற் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி, அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி இருந்தது. எனவே, இங்கிலாந்து அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட இந்த தோல்வியுடன் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரஷீத் கானின் பந்துவீச்சு மற்றும் அவரது திறமை குறித்து ஊடகவியாலளர்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப்,

”இன்றைய போட்டியின் ஆரம்பத்தை எடுத்துக் கொண்டால் முதல் 30 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தோம். எமது பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். அதன்பிறகு ஷீத் கான் உள்ளடங்கலாக அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக ஓட்டங்கள் குவிக்கப்பட்டன” என தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் ஷீத் கான் ஏமாற்றப்பட்டாரா என்று கேட்டபோது, ”இல்லை. அவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர், இது ஷீத் கானுக்கு மட்டுமின்றி எந்த வீரருக்கு நடக்கலாம். அவர் எப்படிப்பட்ட ஒரு பந்துவீச்சாளர், எந்தளவு தூரத்துக்கு நன்றாக பந்துவீசுவார் என்பது குறித்து அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். எனவே, இது அவருடைய நாள் அல்ல என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இது கிரிக்கெட், சில நேரங்களில் நீங்கள் நன்றாக செய்கிறீர்கள், சில நேரங்களில் இந்த வகையான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். நான் அவருடைய பந்துவீச்சு குறித்து திருப்தி அடைகிறேன். இது ஒரு பெரிய விடயம் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

எனினும், இந்தப் போட்டியில் இயன் மோர்கன் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தல்வத் சத்ரானின் பந்துவீச்சில் பௌண்டரி எல்லைக்கு அருகில் வந்த பிடியெடுப்பையும் ஷீத் கான் துரதிஷ்டவசமாக தவறவிட்டார். இதன் விளைவாக இயன் மோர்கன், 17 சிக்ஸர்களுடன் புதிய உலக சாதனையுடன் 148 ஓட்டங்களைப் பெற்று அவ்வணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், இயன் மோர்கனின் அதிரடி ஆட்டம் தான் இந்தப் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது என குல்படீன் நையிப் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

”நாங்கள் மோர்கனின் முக்கிய பிடியெடுப்பொன்றை தவறவிட்டோம், ஒருவேளை அதன்காரணமாக நாங்கள் போட்டியை இழந்திருக்கலாம். நாங்கள் அந்த பிடியெடுப்பை எடுத்திருந்தால், அவர்கள் இவ்வளவு ஒட்டங்களை குவித்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்து ஒரு வலுவான அணி, அவர்கள் போட்டியில் எந்தவொரு வாய்ப்பையும் எங்களுக்கு கொடுக்கவில்லை.

ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த இயன் மோர்கன்

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் ………..

உண்மையில் அனைத்து கௌரவங்களும் மோர்கனையே சாரும். அவருடைய அபார திறமையை இந்தப் போட்டியில் வெளிக்காட்டினார். இதுபோன்றதொரு இன்னிங்ஸை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை” என்று அவர் கூறினார்.

நாங்கள் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். அதற்காக ஒவ்வொரு நாளும் நன்றாக முயற்சி செய்கிறோம். இந்தப் போட்டியில் 50 ஓவர்கள் வரை நாங்கள் விளையாடிய அணிக்கு ஒரு நல்ல விடயம். இது ஒரு நல்ல அறிகுறி என்று நான் நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தான் அணி அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் இந்தியா (22) மற்றும் பாகிஸ்தான் (24) அணிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<