மிஸ்பா புதிய சாதனை; பாக் அணி வலுவான நிலையில்

2115
ENG v Pak 1st Test Day 1
Getty

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். இது குறித்து மிஸ்பா கூறுகையில் ‘‘சூரியன் நன்றாக வெளியே வந்துள்ளது. ஆடுகளம் துடுப்பாட்டம் செய்வதற்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகையால் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தேன்” என்றார்.

இங்கிலாந்து அணித் தலைவர் எலைஸ்டர் குக் கூறுகையில் ‘‘ஆடுகளத்தைப் பார்த்ததில் சிறிது பச்சை புற்கள் காணப்படுகின்றன. இருந்தாலும் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருப்பதுபோல் உள்ளதால், நாங்கள் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும்” என்றார்.

இரண்டு அணிகளின் விபரம்

பாகிஸ்தான் அணி

1.முஹமத் ஹபீஸ், 2. ஷான் மசூத், 3. அசார் அலி, 4. யூனிஸ் கான், 5. மிஸ்பா-உல்-ஹக், 6. அசாத் ஷபிக், 7. சர்பிராஸ் அஹமது, 8. வஹாப் ரியாஸ், 9. முஹமத் ஆமிர், 10. ரஹத் அலி, 11. யாசீர் ஷா

இங்கிலாந்து அணி

1. எலைஸ்டர் குக், 2. எலெக்ஸ் ஹேல்ஸ், 3. ஜேம்ஸ் வின்ஸ், 4. கெரி பேலன்ஸ், 5. ஜொனி பேர்ஸ்டோவ், 6. மொயீன் அலி, 7. ஜோ ரூட் , 8. ஸ்டுவர்ட் ப்ரோட் , 9.. ஜெக் போல், 10. ஸ்டடீபன் பின், 11. கிறிஸ் வோக்ஸ்

அதன்படி பாகிஸ்தான் அணியின் முஹமத் ஹபீஸ், ஷான் மசூத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மசூத் 7 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.

29 பந்துகளை சந்தித்த அவர் 12 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். அடுத்து அசார் அலி களம் இறங்கினார். அவர் ஓட்டங்களை அடிக்காவிட்டாலும், விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். மறுமுனையில் விளையாடிய ஹபீஸ் 59 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 40 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

ஹபீஸ் ஆட்டம் இழக்கும் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 51 ஓட்டங்களை எடுத்திருந்தது. அடுத்து யூனிஸ் கான் களம் இறங்கினார். பாகிஸ்தான் அணி மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் அசார் அலி 7 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் 49 பந்துகளை சந்தித்து இந்த ஓட்டங்களைச் சேர்த்தார்.

4ஆவது விக்கெட்டுக்கு யூனிஸ்கான் உடன் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இதனால் பாகிஸ்தானின் ஓட்ட எண்ணிக்கை 34.4 ஓவர்களில் 100-ஐ தொட்டது.

நிலைத்து நின்று விளையாடிய யூனிஸ் கான் 33 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஸ்டுவர்ட் ப்ரோட்டின் பந்தில் ஆட்டம் இழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு மிஸ்பா உடன் அசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் மதிய தேநீர் இடைவேளை வரை விக்கெட்டை இழக்ககாமல் பார்த்துக்கொண்டது. தேநீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 52 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைச் சேர்த்து இருந்தது. மிஸ்பா 48 ஓட்டங்களோடும் , அசாத் ஷபிக் 12 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடங்கியதும் மிஸ்பா உல் ஹக் 81 பந்துகளை சந்தித்து அரைச் சதம் அடித்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை மிஸ்பா உல் ஹக் பெற்றார். மிஸ்பா உல் ஹக்கிற்கு இந்த பெருமையைப் பெறும் போது 42 வயது மற்றும் 47 நாட்கள் ஆகியிருந்தது.

இதன் பிறகும் தொடர்ந்து அசாத் ஷபிக் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஜோடி அற்புதமாக விளையாடி ஓட்டங்களைப் பெற்றனர். சிறப்பாக விளையாடிய அசாத் ஷபிக் அரைச்சதம் அடித்தார். இந்த ஜோடி 5ஆவது விக்கட்டுக்காக 148 ஓட்டங்களைப் பகிர்ந்த பின் பாகிஸ்தான் அணி 282 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது அசாத் ஷபிக் 130 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் "நயிட் வொட்ச்மன்" ஆக வந்த ரஹத் அலி ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 87 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று இருந்த வேளையில் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

நிதானமாக ஆடி வரும் மிஸ்பா உல் ஹக் தனது டெஸ்ட் வாழ்வில் 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து 179 பந்துகளில் 18 பவுண்டரிகள் அடங்கலாக 110 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்காமல் மைதானத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் மீண்டும் ஒரு முறை சிறப்பாகப் பந்துவீசி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி 282/6 (87)

மிஸ்பா உல் ஹக் 110*, அசாத் ஷபிக் 73, முஹமத் ஹபீஸ்40, யூனிஸ் கான் 33 கிறிஸ் வோக்ஸ் 45/4. ஸ்டுவர்ட் ப்ரோட் 44/1, ஜெக் போல் 51/1

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்