விஸ்டன் டெஸ்ட் சம்பியன்ஷிப் அணியில் இரு இலங்கை வீரர்கள்

705

கிரிக்கெட் உலகில் மிகப் பிரபல்யமாக காணப்படும் விஸ்டன் சஞ்சிகையானது இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களைக் கொண்டு, ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சிறந்த பதினொருவர் அணியினை வெளியிட்டுள்ளது.

டில்ஷான் – தரங்க அதிரடியில் லெஜன்ட்ஸ் லீக் சம்பியனான Asia Lions

இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் நேற்று (20) நிறைவுக்கு வந்திருந்தது. இலங்கை – நியூசிலாந்து தொடர் நிறைவினை அடுத்தே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் சிறந்த பதினொருவர் அணியானது இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

வெளியிடப்பட்டிருக்கும் விஸ்டன் பதினொருவர் அணியில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அதன்படி திமுத் கருணாரட்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகிய இருவருமே இந்த பதினொருவரில் வாய்ப்பு பெற்ற இலங்கை வீரர்களாக அமைகின்றனர்.

இதில் திமுத் கருணாரட்ன அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டிருக்கின்றார். ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது பருவத்திற்காக 12 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 47.90 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 1054 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்குள் 2 சதங்களும், 8 அரைச்சதங்களும் அடங்குகின்றன.

அதேநேரம், ஏனைய ஆரம்ப வீரராக உஸ்மான் கவாஜா பெயரிடப்பட்டிருக்கின்றார். உஸ்மான் கவாஜா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது பருவத்தில் அதிக ஓட்டங்களை (1608) குவித்த இரண்டாவது வீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்டவீரரான தினேஷ் சந்திமால் நான்காம் இலக்கத்தில் துடுப்பாடும் வீரராக விஸ்டன் பதினொருவர் அணியில் இடம்பெற்றிருக்கின்றார். தினேஷ் சந்திமால் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 10 போட்டிகளில் ஆடி 68.42 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 958 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஸி. அணியில் இருந்து உஸ்மான் கவாஜா தவிர மார்னஸ் லபச்சேனே, பேட் கம்மின்ஸ் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் நதன் லயன் ஆகிய வீரர்களும் விஸ்டன் சஞ்சிகையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இந்திய அணியில் இருந்து உபாதை காரணமாக தற்போது ஓய்வெடுத்திருக்கும் ரிசாப் பாண்ட், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் விஸ்டன் அணியில் இடம் கிடைத்திருக்கின்றது. மறுமுனையில் விஸ்டன் அணியில் தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் ககிஸோ றபாடா மற்றும் இங்கிலாந்தின் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<