ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணையும் டு பிளெசிஸ், வஹாப் ரியாஷ்

Lanka Premier League 2021

240

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரமீயர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகளில், ஜப்னா கிங்ஸ் அணியில் தென்னாபிரிக்க வீரர் பாப் டு பிளெசிஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாப் டு பிளெசிஸ் ஜப்னா கிங்ஸ் அணியின்,  வெளிநாட்டு ஐகோன் (Icon) வீரராக பெயரிடப்பட்டுள்ளார் எனவும், வஹாப் ரியாஸ் வெளிநாட்டு டயமண்ட் (Diamond) வீரராக பெயரிடப்பட்டுள்ளனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் வரைவுக்கு வெளியிலிருந்து, தலா இரண்டு வீரர்களை அணிகள் இணைக்கமுடியும் என லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, மேற்குறித்த வீரர்களை, ஜப்னா கிங்ஸ் அணி இணைத்துள்ளது.

தென்னாபிரிக்க அணியின் வீரரான பாப் டு பிளெசிஸ், இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதுடன், குறித்த அணி சம்பியனாகியிருந்தது. அதேநேரம் வஹாப் ரியாஸ் சர்வதேசத்தில் நடைபெறும் பல முன்னணி லீக் தொடர்களில் விளையாடிவருவதுடன், அதிசிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளராகவும் உள்ளார்.

T20 உலகக்கிண்ணத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், T20 உலகக்கிண்ணத்தொடர் நிறைவடைந்த பின்னர், LPL தொடர், டிசம்பர் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப்போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<