புதிய ஜேர்ஸியுடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி

111
Srilanka cricket

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் முறையாக பெயர் மற்றும் இலக்கம் பொறிக்கப்பட்ட புதிய டெஸ்ட் சீருடையுடன் (ஜேர்ஸியுடன்)  நியூசிலாந்து அணியை எதிர்கொள்கின்றது. 

கிரிக்கெட் உலகமே உற்று நோக்கும் தொடர்களில் .சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் விளங்குகிறது. ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் .சி.சியின் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியாக ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அந்தப் போட்டியில் முதல்தடவையாக இரு அணி வீரர்களும் தங்களின் பெயர் மற்றும் இலக்கம் பொறிக்கப்பட்ட டெஸ்ட் ஜேர்ஸியுடன் விளையாடியிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளின் வீரர்கள் இன்று ஆரம்பமாகியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் தங்களின் பெயர் மற்றும் இலக்கம் பொறிக்கப்பட்டுள்ள ஜேர்ஸியுடன் விளையாடுகின்றனர். 

>>மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

இதில் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள்  பலர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்காக பயன்படுத்துகின்ற இலக்கங்களைத் தான் டெஸ்ட் ஜேர்ஸியிலும் பொறித்துக் கொண்டுள்ளனர்.

அதிலும் ஓருசில வீரர்கள் தமக்கு ராசியான, தமது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பயன்படுத்துகின்ற இலங்கங்களைத் தான் டெஸ்ட் ஜேர்ஸியில் பயன்படுத்தியுள்ளமை  சிறப்பம்சமாகும்

ஏற்கனவே, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வீரர்கள் தங்களின் ஜேர்ஸியில் பெயர் மற்றும் இலக்கம் ஆகியவற்றுடன் விளையாடி வருகின்றனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களின் ஜேர்ஸியில் பெயர் மற்றும் இலக்கம் இல்லாமல் தான் இருந்து வந்தது. எனினும், அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் ஒருசில முக்கியமான உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட டெஸ்ட் சீருடையுடன் விளையாடி வந்தனர்

இதன் பின்னணியில் தான் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் ஜேர்ஸியில் பெயர் மற்றும் இலக்கம் ஆகியவற்றை இடம்பெறச் செய்வதற்கு .சி.சி நடவடிக்கை எடுத்திருந்தது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<