டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடப்பதே கனவு என்கிறார் குசல் மெண்டிஸ்

2422

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரிற்கு முன் பல்லேகலை மைதானத்தில் பெற்றுக்கொண்ட பயிற்சிகள் காரணமாகத்தான் தனது திறமைகளை வெளிப்படுத்த முடிந்ததாகத் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான குசல் மெண்டிஸ், டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடந்து முன்மாதிரயான ஒரு கிரிக்கெட் வீரராக திகழ்வதே தனது வாழ்நாள் கனவு என தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் குசல் மெண்டிஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 87 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டார். எனினும், சதம் பெறும் வாய்ப்பை அவர் துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.

மழையினால் நழுவிப்போன இலங்கையின் வெற்றி வாய்ப்பு

இந்நிலையில், குறித்த போட்டியின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு குசல் மெண்டிஸ் பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மேற்கிந்திய ஆடுகளங்களில் அதிகம் பவுண்சர் பந்துகளை எதிர்நோக்க வேண்டும் என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்தோம். எனவே, அதற்கு முகங்கொடுப்பதற்காக நாம் பல்லேகலை மைதானத்தில் பந்துவீச்சு இயந்திரங்களைக் கொண்டு விசேட பயிற்சிகளை முன்னெடுத்திருந்தோம். அந்த பயிற்சிகளால் தான் எனக்கு நடைபெற்றுமுடிந்த இரண்டு போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது என தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலையால் பல மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டது. இதன்காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தைப் பெற முடியாமல் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மழையினால் ஏற்பட்ட இடையூறினால் எனது ஆட்டத்தின் போக்கு மாற்றமடைந்தது. நான் சதமொன்றைப் பெற்றிருந்தால் அந்த நம்பிக்கையுடன் இன்னும் முன்னோக்கிச் சென்றிருக்க முடியும். ஆனாலும் அழுத்தங்களுடன் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் அதே அழுத்தங்களுடன் தான் நான் சதமொன்றைப் பெற்றுக்கொண்டேன். எனவே, ஒரு இளம் வீரராக அழுத்தங்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பதை எமது பயிற்றுவிப்பாளர்கள் அதிகம் கற்றுக்கொடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து குசல் மெண்டிஸ் கருத்து வெளியிடுகையில்,

எப்போதாவது இலங்கை தேசிய அணிக்கு விளையாடுவதே எனது கனவாக இருந்தது. அது நிறைவேறிவிட்டது. தற்போது டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் குவிப்பதே எனது அடுத்த இலக்காகும். அந்த இலக்கை வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதையே நான் அதிகம் விரும்பினேன். அதிலும் நான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இலங்கை அணியில் அறிமுகமானேன். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவே பங்களாதேஷ் அணிக்கெதிராக 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு 3ஆவது, 4ஆவது இலக்கங்களில் களமிறங்கினேன். எனவே, அணியில் அனைத்து இடங்களிலும் விளையாடியுள்ளதால் எந்த இலக்கத்தில் களமிறங்கினாலும் எனக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் என்னை டி-20 அணியில் இணைத்துக்கொண்ட போது அதை நான் விரும்பவில்லை. ஏனெனில் டெஸ்ட் அரங்கில் முன்னணி வீரராக வரவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் டி-20 போட்டிகளிலும் விளையாட வேண்டும் என தேர்வாளர்கள் என்னை கேட்டுக் கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, அறிவை நன்றாகப் பயன்படுத்தி விளையாடுகின்ற திறமையான வீரரொருவருக்கு இவ்வாறு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு முடியும் என்பதையும் அவர்கள் என்னிடம் எடுத்துக் கூறினர். இதன் பிரதிபலனாக இன்று நான் டெஸ்ட் போட்டிகளைப் போன்று மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றேன் என குறிப்பிட்டார்.

எதிர்கால கிரிக்கெட் தொடர்கள் நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

23 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ், இந்த சுற்றுப்பயணத்தின் இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக 238 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக முன்னிலையில் உள்ளார். அது மாத்திரமின்றி .சி.சியினால் இறுதியாக வெளியிடப்பட்ட டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் குசல் மெண்டிஸ் நான்கு இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டு, தனது சிறந்த தரப்படுத்தல் நிலையை பதிவுசெய்துள்ளார்.

இதேநேரம், டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டு வருவது தொடர்பில் கருத்து வெளியிட்ட குசல், இலங்கை அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகின்றேன். அதிலும், நான் தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் 12ஆவது இடத்தில் உள்ளேன். எனினும், குறித்த தரப்படுத்தலில் முன்னிலையில் உள்ள ஸ்மித், கோஹ்லி போன்ற வீரர்களை நெருங்குவதற்கு எனக்கு இன்னும் பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எமது துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீரவும், என்னிடம் உள்ள ஒருசில தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

இதேவேளை, மஹேலசங்காவின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகின்ற குசல் மெண்டிஸ், 2013ஆம் ஆண்டு சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகச் செயற்படும் அரிய வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அவர் தேசிய அணியின் நட்சத்திர வீரராக பிரகாசிப்பாரென பலரும் எதிர்வு கூறியிருந்தனர். மேற்படி விருதினைப் பெற்ற ஒருசில வருடங்களில், அதாவது, 2015 ஒக்டோபர் 22ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஐ.சி.சி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை வீரர்கள்

நம்பகத்தன்மை வாய்ந்த விக்கெட் காப்பாளராகவும், தாக்கும் பாணியில் அமைந்த வலது கை துடுப்பாட்ட வீரராகவும் விளங்கும் குசல் மெண்டிஸ், எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றார்.

இதில், கடந்த 2016 ஜுன் 16ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் 59 பந்துகளில் எட்டு பௌண்டரிகளுடன் அரைச்சதமடித்து (51) தனது ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான அறிமுகத்தையும் ஜோராக ஆரம்பித்தார். அன்றுமுதல், குசல் மெண்டிஸ் 26 டெஸ்ட், 44 ஒரு நாள் மற்றும் 14 டி-20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் 1000 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ள இலங்கையர்கள் பட்டியலில், அர்ஜுண ரணதுங்க மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு அடுத்தபடியாக குசல் மெண்டிஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் காலியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மெண்டிஸ் 194 ஓட்டங்களைக் குவித்து இரட்டைச் சதம் பெறும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார். அவர் இன்னுமொரு சிக்ஸர் அடித்திருந்தால் இரண்டைச் சதம் அடிக்கும் அவரது கனவு பலித்திருக்கும்.

MCC அணியின் தலைவராக மஹேல ஜயவர்தன

கிரிக்கெட்டின் தாயகம் …

எனினும், இரண்டு தடவைகள் இவ்வாறு இரட்டைச் சதம் குவிக்கும் வாய்ப்பை தவறவிட்டது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு குசல் மெண்டிஸ் கருத்து வெளியிடுகையில்,

இதுதொடர்பில் எமது துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர அடிக்கடி ஞாபகப்படுத்துவார். எனினும், டெஸ்ட் அரங்கில் இரட்டைச் சதம் குவிக்கும் எனது எதிர்பார்ப்பு அப்படியே உள்ளது. இந்த தொடரில் இன்னுமொரு போட்டி உண்டு. அதனைத்தொடர்ந்து இலங்கையில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளசுவுள்ளது. அந்தப் போட்டிகளில் இரட்டைச் சதமொன்றைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன். அதிலும் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்கின்ற திறமை என்னிடம் உண்டு. இதனால் போட்டியின் இடைநடுவில் ஓட்டங்களைக் குவிக்க முடிகின்றமை எனக்கு மிகப் பெரிய நன்மையையும் பெற்றுக்கொடுக்கும் என தெரிவித்தார்.

தேசிய அணி தேர்வாளர்கள் மஹேலசங்காவின் ஓய்வுக்குப் பிறகு அதிசிறந்த துடுப்பாட்ட வீரரொருவரைத் தேடி அலைந்திருந்த காலகட்டத்தில் குசல் மெண்டிஸின் அறிமுகமானது தேசிய அணிக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

எனவே, இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி, தற்போது படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் 1996 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணியைப் போல பலமிக்க பதினொருவரை உருவாக்குவதற்கும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கும் குசல் மெண்டிஸ் போன்ற வீரர்களை தொடர்ந்து அணியில் தக்கவைத்துக் கொள்வதும், அவர்களை பாதுகாப்பதும் கிரிக்கெட் அதிகாரிகளின் தலையாய பொறுப்பாகும்.  

நன்றி – அசேல விதான

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க