பிரீமியர் லீக் டிவிஷன் 2 இறுதிப்போட்டியில் மோதவுள்ள ரட்னம் மற்றும் கெலிஓய அணிகள்

1421
Premier League Div II FinalPremier League Div II Final

ஒரு காலத்தில் இலங்கையில் கால்பந்து விளையாட்டில் ஆதிக்கம் செலுத்திய ரட்னம் விளையாட்டுக் கழகம் பிரீமியர் லீக் இரண்டாம் பிரிவு (டிவிஷன் 2) இறுதிப் போட்டியில் கெலிஓய விளையாட்டுக் கழகத்துடன் மோதவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டு அணிகளும் முதல் பிரிவில் (டிவிஷன் 1) விளையாட தகுதி பெற்றுள்ள நிலையில் இறுதிப்போட்டி இம்மாதம் 11ஆம் திகதி நாவலபிட்டிய ஜயதிலக்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளும் இப்பருவகாலத்தில் வெளிக்காட்டிய திறமை தொடர்பான ThePapare.com இன் கண்ணோட்டம் பின்வருமாறு.

இரண்டு அணிகளும் குழுச்சுற்றிற்கு முன்னர் மூன்று நொக்-அவுட் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றிருந்தன.

ரட்னம் விளையாட்டுக் கழகமானது சன் ஷைன் விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல்கள் அடிப்படையிலும், கொள்ளுப்பிட்டி யுனைடட் அணியை 6-0 என்ற பாரிய கோல்கள் வித்தியாசத்திலும் மாளிகாவத்த யூத் அணியை 3-0 என்றும் தோற்கடித்ததோடு ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகம் போட்டியில் கலந்து கொள்ளாததன் காரணமாக அப்போட்டியிலும் 3-0 என வெற்றியை பதிவு செய்து கொண்டது.

அதனை தொடர்ந்து குழு ‘B’ யில் அவ்வணி இடம்பிடித்ததோடு, குழுச்சுற்றில் லெவன் ஸ்டார் அணியை 3-1 என்றும் ரத்மலான யுனைடட் அணியை 2-1 என்றும் தோற்கடித்திருந்தது. கிரேட் ஸ்டார் அணியுடனான இறுதி குழுப்போட்டியை 0-0 என சமநிலையில் முடித்துக் கொண்ட ரட்னம் விளையாட்டுக் கழகம் குழுவில் முதலிடத்தை பெற்றுக் கொண்டதுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதிச் சுற்று இரண்டு போட்டிகளை கொண்டதாக அமைந்ததுடன், குழு ‘A’ வில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்த சிங்கிங் ஃபிஷ் (Singing Fish) விளையாட்டுக் கழகம் அரையிறுதியில் ரட்னம் கழகத்தை எதிர்கொண்டது. முதல் போட்டியில் 2-0 எனவும் இரண்டாம் போட்டியில் 1-0 எனவும் வெற்றி பெற்ற ரட்னம் அணி 3-0  என்ற மொத்த கோல் வித்தியாசத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டிவிஷன் 2 இறுதிப் போட்டியில் மோதவுள்ள ரட்னம் விளையாட்டுக் கழகம்

Team P W D L GF GA GD Pts
Ratnam SC 3 2 1 0 5 2 3 7
Great Star SC 3 2 1 0 3 1 2 7
Rathmalana Utd 3 1 0 2 4 3 1 3
Eleven Star SC 3 0 0 3 2 8 -6 0

கெலிஓய கால்பந்து கழகமானது நொக் அவுட் போட்டிகளில் அனுருதியன்ஸ் விளையாட்டுக் கழகம் (1-0), யங் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (5-1), யங் மேட்ஸ் விளையாட்டுக் கழகம் (3-1) மற்றும் ஸ்மோல் ட்ரய்டன் விளையாட்டுக் கழக (5-0) அணிகளை இலகுவாக தோற்கடித்து குழுச்சுற்றில் இடம்பிடித்தது.

மிடில்-எக்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சிங்கிங் ஃபிஷ் (Singing Fish) விளையாட்டுக் கழக அணிகளுடனான முதல் இரண்டு போட்டிகளும் 2-2 என சமநிலையில் நிறைவடைந்த போதிலும், பைணியர் விளையாட்டுக் கழகத்தை 9-0 என படுதோல்வியடையச் செய்து கெலிஓய கால்பந்து கழகம் குழு ‘A’ வில் முதலிடத்தை பிடித்தது.

அரையிறுதியில் கிரேட் ஸ்டார் அணியுடன் மோதிய அவ்வணி முதல் போட்டியை 1-0 என முன்னிலையில் நிறைவு செய்து, இரண்டாவது போட்டியை 1-1 என சமநிலையில் முடித்துக் கொண்டு 2-1 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கெலிஓய கால்பந்து அணி

Team P W D L GF GA GD Pts
Geli Oya SC 3 1 2 0 13 4 9 5
Singing Fish 3 1 2 0 7 3 4 5
Middle X SC 3 1 2 0 6 5 1 5
Pioneer SC 3 0 0 3 2 16 -14 0

2015/2016ஆம் ஆண்டிற்கான மற்றும் இவ்வருடத்திற்கான பருவகாலங்களில் வெளிக்காட்டிய சிறப்பாட்டத்தின் காரணமாக கெலிஓய அணி முதல் பிரிவிற்கு தகுதி பெற்றுக் கொண்டது. இந்நிலையில் முன்னணி கழகங்களுக்கு சவால் அளிக்கக் கூடிய அணியாக அவ்வணி வளர்ந்துள்ளது.

நொக் அவுட் சுற்றில் அபாரமாக விளையாடிய கெலிஓய விளையாட்டுக் கழகம் குழுச்சுற்றின் ஆரம்பத்தில் சற்று பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. எவ்வாறாயினும் இறுதி குழுப்போட்டியில் முழு ஆதிக்கத்தையும் செலுத்தி மீண்டும் தனது வழமையான விளையாட்டுப்பாணிக்கு திரும்பியுள்ளது. தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் அவ்வணி தடுப்பாட்டத்திலும் அதற்கு நிகராக செயற்பட்டால் இறுதிப் போட்டியில் ரட்னம் விளையாட்டுக் கழகம் பலத்த சவாலை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை தனது ஏழு போட்டிகளில் எதிரணிகளுக்கு வெறும் மூன்று கோல்களையே கொடுத்துள்ள ரட்னம் அணி தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்குகின்றது. அவ்வணியும் நொக் அவுட் சுற்றில் கோல் போடுவதில் அசத்திய போதிலும் குழுச்சுற்றில் சற்று மந்தமான போக்கையே வெளிக்காட்டியிருந்தது.

எவ்வாறாயினும் ரட்னம் அணி இப்பருவகாலத்தில் எதிரணிகளின் சொந்த ஆடுகளங்களில் இடம்பெற்ற போட்டிகளில் அதிக திறமையை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நாவலபிட்டியவில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் அவ்வணி வெற்றியை சுவீகரிக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.