இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளராக தினேஷ் கார்த்திக்

531
Image Courtesy - AFP

ஜூன் மாதம் 14 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவிருக்கும் ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் ரித்திமன் சஹாவுக்கு உபாதை காரணமாக விளையாட முடியாமல் போயிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று (2) தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, ஆப்கான் அணியின் கன்னி டெஸ்ட்டாக அமையும் குறித்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

குசல் பெரேராவின் இரண்டாவது அரைச்சதத்துடன் முடிவடைந்த பயிற்சிப் போட்டி

மேற்கு வங்க மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்ட சஹாவுக்கு, அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதிகாண் போட்டியின் போது வலதுகையின் கட்டை விரலில் உபாதை ஏற்பட்டிருந்தது. சஹாவினைப் பரிசோதித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மருத்துவக் குழாம், சஹா ஓய்வை எடுத்துக் கொண்டால் மாத்திரமே அவரினால் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட முடியும் என அறிவுறுத்தியிருந்தனர். இதன்படி, சஹாவுக்கு இந்த விரல் உபாதையிலிருந்து மீள ஐந்து அல்லது ஆறு வார கால அவகாசம் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

சஹாவுக்கு முன்னதாக இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியும் ஐ.பி.எல். போட்டியொன்றின் போது ஏற்பட்ட கழுத்து உபாதை காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஹாவுக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டிருக்கும் காரணத்தினால், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு ஆப்கான் உடனான போட்டியின் மூலம் இந்தியாவின் டெஸ்ட் அணியில் நிரந்தர இடமொன்றை பிடித்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

2010 ஆம் ஆண்டே இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் ஆடியிருந்த தினேஷ் கார்த்திக், அதன் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் டெஸ்ட் அணியில் உள்வாங்கப்படவில்லை. எனினும், அண்மைய நாட்களில் தினேஷ் கார்த்திக்கினால் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு இலங்கையில் நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரின் இறுதிப் போட்டி சான்றாகும். குறித்த போட்டியில் வெறும் 8 பந்துகளுக்கு 29 ஓட்டங்களை விளாசி கார்த்திக் இந்திய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றதோடு, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைவராக செயற்பட்டு 16 போட்டிகளில் மொத்தமாக 498 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

ரஷீத் கானை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் : ஆப்கான் அதிபர்

சஹாவுக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் மற்றைய விக்கெட் காப்பாளரான பார்தீவ் பட்டேலை இணைக்க எதிர்பார்க்கப்பட்டிருந்தும், பார்தீவ் பட்டேல் அண்மையில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பான பதிவுகளை காட்டியிருக்கவில்லை.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான இந்தியாவின் டெஸ்ட் சுற்றுத் தொடரின் போது, அதிக ஓட்டங்கள் பெற்ற (263) இந்திய அணி வீரராக மாறியிருந்த தினேஷ் கார்த்திக் இதுவரையில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27.7 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் மொத்தமாக 1000 ஓட்டங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<