ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த திமுத் கருணாரத்ன

Bangladesh tour of Sri Lanka 2021

225

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது முதலாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்ததுடன்  பல சாதனைகளை நிலைநாட்டினார். 

இரண்டு அணிகளாலும் முதலாவது இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மொமினுல் ஹக், தனன்ஜய டி சில்வா ஆகிய வீரர்கள் சதங்கள் குவித்து அசத்தினர்.

2021இல் அதிக டெஸ்ட் ஓட்டங்கள்: திரிமான்னவுக்கு இரண்டாமிடம்

மறுபுறத்தில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரட்டைச் சதம் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்

தனது 71ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், தனது 11ஆவது சதத்தை இரட்டைச் சதமாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 11ஆவது இலங்கையர் என்ற சிறப்பை திமுத் கருணாரத்ன பெற்றுக்கொண்டார்.

அத்துடன், 2018இல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் பெற்றுக்கொண்ட இரட்டைச் சதத்தின் பிறகு இலங்கை வீரரொருவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதலாவது இரட்டைச் சதமாகவும் இது பதிவாகியது.

அதேபோல, குமார் சங்கக்கார ஓய்வுபெற்ற பிறகு டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இலங்கை வீரரொருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாகவும் இது இடம்பிடித்தது

இதனிடையே, முன்னதாக பிரெண்டன் குருப்பு, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, ஹஷான் திலகரட்ன, குமார் சங்கக்கார, திலான் சமரவீர, அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய 10 வீரர்கள் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியவர்களாவர்.

Video – SLvBAN: மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி…!| Sports RoundUp – Epi 159

இலங்கை சார்பாக குவிக்கப்பட்ட இரட்டை சதங்களில் குமார் சங்கக்கார 12 இரட்டைச் சதங்களையும், மஹேல ஜயவர்தன 7 இரட்டைச் சதங்களையும், மார்வன் அத்தப்பத்து 6 இரட்டைச் சதங்களையும், சனத் ஜயசூரிய 3 இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளனர்.

மேலும், அரவிந்த டி சில்வா, திலான் சமரவீர இருவரும் தலா 2 இரட்டை சதங்களை பெற்றுள்ளனர். ஏனையோரில் பிரெண்டன் குருப்பு, ரொஷான் மஹாநாம, அஞ்செலா மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு முறை இரட்டை சதங்களை விளாசியுள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் அரங்கில் இலங்கை வீரரொருவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 35ஆவது இரட்டைச் சதமதமாக இது இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதேவேளை, இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 656 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 26 பௌவுண்டரிகளுடன் 244 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்து ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்

இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து விலகும் லஹிரு குமார

டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவுசெய்த அவர், பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் வீரரொரவருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் படைத்தார். 

அதுமாத்திரமின்றி, பங்களாதேஷ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியொன்றில் அதிபட்ச ஓட்டங்களைக் குவித்த இரண்டாவது வீரராக இடம்பிடித்த திமுத் கருணாரத்ன, டெஸ்ட் அரங்கில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்

அடுத்த இரு இடங்களில் முறையே தென்னாபிரிக்காவின் கிரஹம் ஸ்மித் (232 ஓட்டங்கள் 2008), இந்தியாவின் விராட் கோஹ்லி (204 ஓட்டங்கள், 2017) உள்ளனர்.

அத்தோடு இலங்கை அணித்தலைவராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பூர்த்தி செய்தவர்கள் வரிசையில் 3ஆவது இடத்தையும் திமுத் கருனார்தன பெற்றுக்கொண்டார்.

இந்தப் பட்டியலில் 374 ஓட்டங்களுடன் மஹேல ஜயவர்தன முதலிடத்திலும், 249 ஓட்டங்களுடன் மார்வன் அத்தபத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – ஐ.சி.சி

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உலக சாதனையொன்றையும் இந்தப் போட்டியில் நிலைநாட்டினார்.

உலக டெஸ்ட் அரங்கில் கடந்த 5 வருடங்களில், அதாவது 2016 ஏப்ரல் 23 முதல் 2021 ஏப்ரல் 23 வரையான காலப்பகுதியில் அதிக ஓட்டங்களைக் குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவர் சாதனை படைத்தார்.

குறித்த காலப்பகுதியில் ஒரு இரட்டைச் சதம், 6 சதங்களுடன் 3,273 ஓட்டங்களைக் குவித்து திமுத் கருணாரத்ன முதலிடத்தையும், தென்னாபிரிக்காவின் டீன் எல்கர் 5 சதங்களுடன் 3011 ஓட்டங்களைக் குவித்து இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், 8 சதங்களுடன் 2,794 ஓட்டங்களைக் குவித்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, பங்களாதேஷ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை முறியடித்த திமுத் கருணாரத்ன, இன்னும் பல சாதகைளை முறியடிக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…