ஸ்கொட்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

136

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஒரு நாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டக்வத் லூயிஸ் முறையில் 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

மேலும் இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினையும் 1-0 என கைப்பற்றியுள்ளது.

அவிஷ்க குணவர்தன, சொய்ஸா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) சார்பாக, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.)…

உலகக் கிண்ணத் தொடருக்காக ஐக்கிய இராச்சியம் (United Kingdom) பயணமாகியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றது.

இந்த ஒருநாள் தொடரில் ஸ்கொட்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக கடந்த புதன்கிழமை (8) கைவிடப்பட்டிருந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் இரண்டாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி நேற்று (10) எடின்பேர்க் நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணித்தலைவர் கைல் கோயெட்சேர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்திருந்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த ஸ்கொட்லாந்து அணிக்கு அதன் தலைவர் கைல் கோயெட்சேர், கெலம் மெக்லியோட் ஆகியோர் திறமையான ஆட்டம் மூலம் கைகொடுத்தனர்.

இதில் கெலம் மெக்லியோட் ஒரு நாள் போட்டிகளில் தான் பதிவு செய்த எட்டாவது சதத்தோடு, ஒரு சிக்ஸர் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 89 பந்துகளில் 100 ஓட்டங்களை குவித்தார். இதேநேரம், கைல் கோயெட்சேர் தனது 13ஆவது ஒரு நாள் அரைச்சதத்தோடு 12 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்த இரு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக அதன் தலைவர் குல்படின் நயீப் 3 விக்கெட்டுக்களையும், ஹமிட் ஹஸன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 328 ஓட்டங்களை அடைய ஆப்கானிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பாடியது.

எனினும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கினை அடையும் தமது பயணத்தினை சிறப்பாக முன்னெடுத்து வந்த நிலையில் ஆட்டம் மழையினால் தடைப்பட்டது.

மழையின் குறுக்கீடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆப்கானிஸ்தான் அணியினர் 44.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து  269 ஓட்டங்களை குவிந்திருந்தனர்.

தொடர்ந்தும் மழை நிலைமைகள் சீராகாத காரணத்தினால், ஆட்டம் நிறுத்தப்பட்டு போட்டியின் வெற்றியாளர்களாக டக்வத் லூயிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணியினர் அறிவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு அதன் துடுப்பாட்டம் மூலம் உதவியாக இருந்த றஹ்மத் ஷாஹ், ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற மூன்றாவது சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம் ஹஸ்மதுல்லாஹ் சஹிதி ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றும், மொஹமட் சஹ்ஷாத் 55 ஓட்டங்களை பெற்றும் தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

இதேவேளை ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ப்ராட்லி வீல், அலஸ்டைர் ஈவான்ஸ் மற்றும் டொம் ஸ்டோல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதவுள்ள சென்னை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (10) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி…

போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான றஹ்மத் ஷாஹ்விற்கு வழங்கப்பட்டது.

இப்போட்டியின் வெற்றியோடு, உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களை சிறப்பாக மேற்கொண்டிருப்பதை நிரூபித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ணத் தொடரின் தமது முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை ஜூன் மாதம் 01ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து – 325/7 (50) – கெலம் மெக்லியோட் 100(89),  கைல் கோயெட்சர் 79(98), றிச்சி பெர்ரிங்டன்  33(20), குல்படின் நயீப் 72/3(10), ஹமிட் ஹஸன் 55/2(10), அப்தாப் ஆலம் 66/2(10)

ஆப்கானிஸ்தான் – 269/3 (44.5) – றஹ்மத் சாஹ் 113(115), ஹஸ்மத்துல்லாஹ் சஹிதி 59(60)*, மொஹமட் சஹ்ஷாத் 55(67), டொம் சோல் 47/1(9),  அலஸ்டைர் ஈவான்ஸ் 45/1(7.5), ப்ராட்லி வீல் 49/1(8)

முடிவு – ஆப்கானிஸ்தான் டக்வத் லூயிஸ் முறையில் 2 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<