அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

7711

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின் முன்னணி கழக அணியான சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் அணிக்கு விளையாடுவதற்காக ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையில் அவுஸ்திரேலியா பயணமாகின்றார்

யாழ்ப்பாணம் ஈவினையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி, தனது பள்ளிக்கல்வியை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தார். அங்கு வலைப்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்த இவர் மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியின் நட்சத்திரமாக உருவெடுத்தார்.  

உலகின் முதல்தர வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது முகாமையாளர் கோபிநாத் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த, 2011ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் சிறந்த ஷூட்டர் (Shooter) விருதினைப் பெற்ற தர்ஜினி, கடந்த ஒரு வருடகாலமாக இலங்கை தேசிய அணி சார்பாக எந்தவொரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 10 வருடங்களிற்கு மேலாக இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக ஆடிவந்த தர்ஜினி, கடந்த ஒரு வருடகாலமாக போட்டிகளில் பங்கெடுக்காது விலகியிருந்தமை இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் பெரும் சவாலாக இருந்த அதேவேளை, பலரை ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியிருந்தது.  

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரும் தற்போதைய புருனே அணியின் பயிற்றுவிப்பாளருமான திலகா ஜினதாஸ மற்றும் தர்ஜினியின் முகாமையாளரான கோபிநாத் ஆகியோரினது முயற்சியினால் தர்ஜினிக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.  

தர்ஜினி தனது இந்த ஆறு மாதகால பயணத்தின்போது, அவுஸ்திரேலியாவின் மெல்பெர்னிலிருந்து சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் (City west falcon) அணி மற்றும் சென். அல்பன்ஸ் வலைப்பந்தாட்டக் கழகம் (St. Albans Netball club) ஆகியவற்றிற்காக விளையாடவுள்ளார். அதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும் பயிற்றுவிப்பாளருமான நிக்ஹோலி றிச்சர்ட்சனின் பயிற்றுவிப்பின் கீழ் தன்னை தயார்படுத்தவுள்ளமை முக்கிய விடயமாகும்.  

மேற்படி சுற்றுப்பயணம் தொடர்பாக தர்ஜினி சிவலிங்கம் ThePapare.com இற்கு பிரத்தியேகமாக கருத்துத் தெரிவிக்கையில் நான் அவுஸ்திரேலியாவின் முதல்தர கழகத்திற்கு விளையாட இருப்பதையிட்டும், அங்கு சிறந்த நிபுணரின் கீழ் பயிற்றுவிக்கப்படுவதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த திலகா ஜினதாஸ, கோபிநாத் மற்றும் ஆலோசனை வழங்கிய ஏனையோருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய இலக்கு எப்போதும் இலங்கையின் வலைபந்தாட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதேயாகும். நான் ஆறு மாதகால பயிற்சியின் பின்னர் தாயகம் திரும்பி இலங்கை தேசிய அணிக்கு என்னால் இயலுமான பங்களிப்பை வழங்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார்.  

இது குறித்து தர்ஜினியின் முகாமையாளர் கோபிநாத் ThePapare.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது, வலைப்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களாக வலம்வரும் அவுஸ்திரேலிய கழகம் ஒன்றிற்கு இலங்கையிலிருந்து ஒரு வீராங்கனை விளையாடுவது இதுவே முதல் தடவை. தர்ஜினிக்கு தன்னார்வலர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இது போன்ற வாய்ப்பினை எதிர்காலத்தில் ஏனையோருக்கும் உருவாக்கிக்கொடுக்க இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வேளை தர்ஜினிக்கு இலங்கை வலைப்பந்தாட்டத்தில் உரிய இடம் வழங்கும் அதேவேளை, இலங்கையின் வலைப்பந்தாட்ட வளர்ச்சி தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்என்றார்