அவிஷ்க, சந்திமாலின் அபாரத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரெட்ஸ்

Dialog-SLC Invitational T20 League 2021

317

டயலொக் SLC அழைப்பு T20 தொடரில், நடைபெற்றுமுடிந்த இறுதி லீக் போட்டியில், வெற்றிபெற்ற தினேஷ் சந்திமால் தலைமையிலான SLC ரெட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

தொடருக்கான இறுதி லீக் போட்டியில், SLC கிரீன்ஸ் மற்றும் SLC ரெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், மழை குறுக்கிட்டிருந்ததால், போட்டியானது இரவு 8.30 இற்கு ஆரம்பமானது. அத்துடன், அணிகளுக்கு தலா 15 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. 

அசலங்க, நுவனிந்துவின் பிரகாசிப்புடன் கைவிடப்பட்ட புளூஸ் – கிரேய்ஸ் போட்டி

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரெட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை, கிரீன்ஸ் அணிக்கு வழங்கியது. அதன்படி, களமிறங்கிய கிரீன்ஸ் அணி இன்னிங்ஸ் முழுவதும் பெண்டரிகளை பெறுவதில் தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

கிரீன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சமிந்த பெர்னாண்டோ 37 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, ரெட்ஸ் அணியின் பந்துவீச்சில் சீகுகே பிரசன்ன, அசேல குணரத்ன மற்றும் ஹிமேஷ் ரமாநாயக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறித்த மூன்று விக்கெட்டுகளை தவிர்த்து, ஏனைய 4 விக்கெட்டுகளும் ரன்-அவுட் மூலமாக பெறப்பட்டிருந்தது.

பின்னர்,  115 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய SLC ரெட்ஸ் அணி தினேஷ் சந்திமால் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தின் உதவியுடன் 14.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ரெட்ஸ் அணிசார்பாக அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 32 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 25 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, சாமிக்க கருணாரத்ன மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இன்னிங்ஸை சிறப்பாக நிறைவுசெய்தனர். கிரீன்ஸ் அணியின் பந்துவீச்சில், லக்ஷான் சந்தகன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே, இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக, SLC ரெட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டதுடன், சீரற்ற காலநிலையால் போட்டிகள் கைவிடப்பட்டதால் புளூஸ் அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பறிபோனது. 

எனவே, எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், SLC ரெட்ஸ் அணியானது, தசுன் ஷானக தலைமையிலான SLC கிரேய்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<