ஜப்னா அணி வீரர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உற்சாக வரவேற்பு

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

268

இலங்கையில் அண்மையில் நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் (LPL) சம்பியன் பட்டத்தை வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் குழாத்தில் இடம்பெற்ற வட பகுதியை சேர்ந்த நான்கு வீரர்களும், அதிகாரிகளும் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரின் வெற்றிக் கிண்ணத்தை திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி கைப்பற்றியது.

இதில் வட மாகாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ், கனகரத்னம் கபில்ராஜ் மற்றும் தெய்வேந்திரம் டினோஷன் ஆகிய நான்கு வீரர்களும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் குழாத்தில் இடம்பெற்றிருந்தனர்.

>>Video – LPL சம்பியனாகிய ஜப்னா ஸ்டாலியன்ஸின் வெற்றிக்கொண்டாட்டம்!

இவர்களில் வியாஸ்காந்த் மாத்திரம் லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சம்பியனான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பிடித்த வட மாகாண வீரர்களுக்கு யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை அனுசரணையாளராக செயற்பட்ட ஜுரா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அரியாலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

வாகனத் தொடரணி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்த வீரர்கள் மேள வாத்தியம் முழங்க நிகழ்வு இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>வியாஸ்காந்த்தை யாழ் வீரர் என்பதால் அணியில் இணைக்கவில்லை: திலின கண்டம்பி

இதன்போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜயராஜ் ஆகிய நான்கு வீரர்களும், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்ட வட மாகாண கிரிக்கெட் சங்கத் தலைவரான யோகேந்திரன் ரதீபனும் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன்,  இந்த வைபவத்தில் யாழ். மத்திய கல்லூரி அதிபர் எஸ். கே. எழில்வேந்தன், சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வி. எஸ். பி. துசீதரன், யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஏ. எஸ். நிஷாந்தன், யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கே. சசிகரன், யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்க பொருளாளர் எல். சிவஷங்கர், யாழ். மாவட்ட கிரிக்கெட் மத்தியஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜீ. கொபிகிருஷ்ணா, யாழ். மாவட்ட கிரிக்கெட் மத்தியஸ்தர்கள் சங்க செயலாளர் ரி. கிருபாகரன், யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் பயிற்றுநர் எஸ். சுரேஷ் மோகன், தற்போதைய பயிற்றுநர் கே. ஷெல்டன், சென். ஜோன்ஸ் கல்லூரி பயிற்றுநர் பி. லவேந்த்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<