மதுஷங்க, அசலங்கவின் அபார ஆட்டத்தால் கிரேய்ஸிற்கு மூன்றாவது வெற்றி

Dialog-SLC Invitational T20 League 2021

618
 

டயலொக் SLC அழைப்பு T20 லீக் கிரிக்கெட் தொடரில், இன்று (16) நடைபெற்ற இரண்டாவது போட்டியில், SLC புளூஸ் அணியை எதிர்கொண்ட SLC கிரேய்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தசுன் ஷானக தலைமையிலான கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய கிரேய்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை.

சந்திமால், அவிஷ்கவின் பிரகாசிப்புடன் ரெட்ஸ் அணிக்கு முதல் வெற்றி

கிரேய்ஸ் அணியில் முதல் போட்டியிலிருந்து அவர்களுடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிக்கவில்லை. அணித்தலைவர் தசுன் ஷானக மாத்திரமே முதலிரண்டு போட்டிகளில் ஓட்டங்களை குவித்திருந்தார்.

எனினும், இந்தப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தசுன் ஷானகவும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனவே, கிரேய்ஸ் அணி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

எவ்வாறாயினும், உபாதைக்கு பின்னர் முதன்முறையாக அணிக்கு திரும்பிய சரித் அசலங்க மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை குவித்தனர். இவர்கள் இருவரும், சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்த, கிரேய்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சகலதுறை வீரராக இருந்தாலும், அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய லஹிரு மதுஷங்க, இந்த தொடரில் தன்னுடைய முதலாவது அரைச்சதத்தை பதிவுசெய்தார். இவர், 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை குவித்தார். இவருக்கு அடுத்தப்படியாக நிதானமாக ஆடிய சரித் அசலங்க 47 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க, மஹீஷ் தீக்ஷன, சுரங்க லக்மால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய SLC புளூஸ் அணிக்கு சதீர சமரவிக்ரம மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் சிறு நம்பிக்கை கொடுத்த போதும், கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் போட்டியை தமது பக்கம் திருப்பினர்.

அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட புளூஸ் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

புளூஸ் அணிசார்பாக சதீர சமரவிக்ரம  58 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கிரேய்ஸ் அணிசார்பாக தசுன் ஷானக மற்றும் நுவான் பிரதீப் அகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

எனவே, கிரேய்ஸ் அணியானது தொடரில், தொடர்ச்சியாக தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், புளூஸ் அணி தங்களுடைய முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<