டில்ஷானின் அபார பந்து வீச்சினால் நாலந்த கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி

184
U19 Cricket

2016/17ஆம் பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்காக நேற்றும் இன்றும் இடம்பெற்ற இரு போட்டிகளில் இளம் பந்து வீச்சாளர்கள் தமது அணிக்கான அபார செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், புனித சில்வஸ்டர் மற்றும் புனித தோமியர் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

பண்டாரநாயக்க கல்லூரி (கம்பஹா) எதிர் புனித ஜோசப் கல்லூரி

இத்தொடரில் D பிரிவுக்காக மோதிக்கொண்ட இவ்விரு அணிகளில், நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய பண்டாரநாயக்க கல்லூரி அணி முதல் இன்னிங்சுக்காக 62.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பண்டாரநாயக்க கல்லூரி சார்பாக அரோஷ மதுஷான் 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஜோசப் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தினித் ஜெயகொடி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய ஜோசப் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின்போது 10.3 ஓவர்கள் துடுப்பாடி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி : 173 (62.3) அரோஷ மதுஷான் 26, தினித் ஜயக்கொடி 34/4, ருச்சிரா ஏக்கநாயக்க 3/42, ஜெகன் டேனியல் 2/30

புனித ஜோசப் கல்லூரி :33/2 (10.3)


திரித்துவ கல்லூரி (கண்டி) எதிர் நாலந்த கல்லூரி (கொழும்பு)

முதல் சுற்றுக்காக பிரிவு A இல் மோதிய இவ்விரு அணிகளும் இரண்டாம் நாளான இன்று களமிறங்கிய நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. எனினும் முதல் இன்னிங்சில் கொழும்பு நாலந்த கல்லூரி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடக் களமிறங்கிய திரித்துவ கல்லூரி 48.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. சிறப்பாக பந்து வீசிய உமேஷ்க டில்ஷான் 24 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து 142 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொழும்பு, நாலந்த கல்லூரி 40.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. சிறப்பாக துடுப்பாடிய மலிங்க அமரசிங்க 46 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டார்.

இதன்படி முதல் இன்னிங்சில் வெற்றியீட்டிய கொழும்பு நாலந்த கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

திரித்துவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 142 (48.4)  ஹசித்த போயகொட 35, ஹசித்த ஜயசூரிய 31, உமேஷ்க டில்ஷான் 5/24, தசுன் செனவிரத்ன 2/11

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 144/8 (40.5) மலிங்க அமரசிங்க 46, ஷானோகீத் சண்முகநாதன் 4/46


புனித சில்வஸ்டர் எதிர் புனித தோமியர் கல்லூரி

முதல் சுற்றில் C பிரிவில் அங்கம் வகிக்கும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி சீரற்ற கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.