டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பம்!

105

இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டவின் அனுசரணையின் கீழ், நாட்டின் மிகச்சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை கண்டறியக்கூடிய டயலொக் தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் 14, 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த டயலொக் தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் தேசிய மற்றும் இளையோருக்கான (ஜூனியர்) வலைப்பந்து சம்பியன்ஷிப் என்ற இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

லா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி

சர்வதேச போட்டி இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பமான…….

தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகள் அனைத்தும் அனுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இளையோருக்கான ஜூனியர் சம்பியன்ஷிப் போட்டிகள் இந்த வாரம் ஆரம்பிக்கின்றன. இந்தப் போட்டிகள் எதிர்வரும் 29ம் திகதி முதல் டிசம்பர் 2ம் திகதிவரை கொழும்பு டொரிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்கால வலைப்பந்தாட்டத்தை வலிமைபடுத்தும் முகமாக நடைபெறவுள்ள ஜூனியர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 21 வயதுக்குட்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். 

ஜூனியர் வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளை பார்க்கும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை உள்ளடக்கிய 42 அணிகள் பங்கேற்கவுள்ளன. குறித்த 42 அணிகளும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், பின்னர், குழுக்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு தெரிவாகும்.     

முதல் சுற்றுப் போட்டிகள் இரு பாதிகள் அடங்கிய 20 நிமிடங்களாக விளையாடப்படவுள்ளதுடன், நொக்-அவுட் சுற்றுப் போட்டிகள் நான்கு கால் பாதிகள் அடங்கிய 40 நிமிடங்களாக விளையாடப்படவுள்ளன.

இதேநேரம், தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி கட்டமைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இந்த டயலொக் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான ஊடக சந்திப்பு நேற்றைய (26) தினம் நடைபெற்ற நிலையில், இதில் கலந்துக்கொண்ட வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவி செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த தொடரில் சிறப்பாக செயற்படும் வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என குறிப்பிட்டார். அத்துடன் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, டயலொக் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் குறித்து வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிடுகையில், “இலங்கையின் வலைப்பந்து விளையாட்டானது டயலொக் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் மூலம் அதிகம் பயனடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் நடைபெற்ற தொடரின் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து திறமையான வீராங்கனைகள் கண்டறியப்பட்டிருந்தனர்” என்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற டயலொக் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் சம்பியனாக ஹெட்டன் நெஷனல் வங்கி அணி மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க  <<