லா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி

53
 

சர்வதேச போட்டி இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பமான இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் ரியல் சொசிடாட்

சான்டியாகோ பார்னபுவில் நடைபெற்ற போட்டியில் ரியல் சொசிடாட்டை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ரியல் மெட்ரிட் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனாவுடன் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டது.

போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே வில்லியன் ஜோஸ் கோல் பெற்று ரியல் சொசிடாட் அணியை முன்னிலை பெறச் செய்தபோதும், கரிம் பென்சமா 37 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 

இரண்டாவது பாதியில் பெடரிகோ வெல்வார்டே (47’) மற்றும் லூகா மொட்ரிக் (74’) கோல்கள் பெற்று ரியல் மெட்ரிட்டை வெற்றிபெறச் செய்தனர்.      

ரியெல் மெட்ரிட் முன்கள வீரர் கரேத் பேல் மாற்று வீரராக களமிறங்கியபோது அந்த அணி ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டதை காணமுடிந்தது. வார நடுப்பகுதில் நடந்த ஐரோப்பிய தகுதிகாண் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக வேல்ஸ் அணி வெற்றிபெற்றபோது ரியல் மெட்ரிட்டை நையாண்டி செய்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.      

பார்சிலோனா எதிர் லெகான்ஸ்

லா லிகா புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் லெகான்ஸ் அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய பார்சிலோனா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யூசெப் என் நெசைரி பெற்ற கோல் மூலம் 12 ஆவது நிமிடத்தில் லெகான்ஸ் முன்னிலை பெற்றபோதும் இரண்டாவது பாதியில் பார்சிலோன முழு ஆதிக்கம் செலுத்தியது.  

லுவிஸ் சுவாரெஸ் 53 ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் பார்சிலோனா போட்டியை சமநிலை செய்த நிலையில் போட்டி முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும்போது ஆர்டுர் விடால் வெற்றி கோலை பெற்றார்.  

லிவர்பூல் எதிர் கிறிஸ்டல் பெலஸ்

ரொபார்டோ பர்மினோ பிந்திய நேரத்தில் போட்ட கோல் மூலம் செல்ஹார்ஸ்ட் பார்க்கில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த பருவத்தில் இருந்து ப்ரீமியர் லீக்கில் 30 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிக்கும் லிவர்பூல் எட்டுப் புள்ளிகள் இடைவெளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியில் சாடியோ மானே லிவர்பூலுக்காக் கோல் பெற வில்பிரைட் சஹா பதில் கோல் திருப்பினார். இந்நிலையில் 85 ஆவது நிமிடத்தில் குறுகிய தூரத்தில் இருந்து பர்மினோ லிவர்பூலின் வெற்றி கோலை பெற்றார். 

உபாதை காரணமாக லிவர்பூல் தனது நட்சத்திர வீரரான மொஹமது சலாஹ்வை இந்தப் போட்டியில் களமிறக்கவில்லை. 

ஆர்சனல் எதிர் சௌதம்டன்

சௌதம்டன் அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சமநிலை செய்த ஆர்சனல் அணி வெற்றியின்றி நீடிக்கிறது.

இந்த முடிவு காரணமாக ஆர்சனல் அணி 18 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருப்பதோடு அந்த அணி கடைசியாக விளையாடிய ஐந்து ப்ரீமியர் லீக் போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.  

அதிரடியாக போட்டியை ஆரம்பித்த சௌதம்டன் 8 ஆவது நிமிடத்தில் டான்னி இங்ஸ் மூலம் கோல் பெற்றது. இந்நிலையில் அலெக்சாண்டர் லெகசாட் 18 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் செளதம்டன் 71 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் அந்த அணி வெற்றியை நெருங்கியது. போட்டியின் மேலதிக நேரத்தில் லெகசாட் தனது இரண்டாவது கோலை பெற்று போட்டியை சமநிலை செய்தார். 

மன்செஸ்டர் சிட்டி எதிர் செல்சி 

செல்சி அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

சர்வதேச போட்டிகளுக்கான இடைவெளிக்கு முன்னர் லிவர்பூலிடம் தோல்வி அடைந்த நிலையிலே இந்தப் போட்டியில் களமிறங்கிய மன்செஸ்டர் சிட்டி இந்த வெற்றியின் மூலம் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியில் மூன்றாவது இடத்தில் நீடித்து தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகிறது. 

போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் ந்கோலோ கான்டே பெற்ற கோல் மூலம் செல்சி கழகம் முன்னிலை பெற்றபோதும் 8 நிமிடங்களின் பின் கெவி டி ப்ருயின் உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பாளர் தடுப்பதில் தவறிழைத்ததால் அது கோலாக மாறியது. இதன் மூலம் போட்டியை சமன் செய்த மன்செஸ்டர் சிட்டி அணி ரியாத் மஹ்ரஸ் மூலம் வெற்றி கோலை பெற்றது. 

வெஸ்ட் ஹாம் யுனைடட் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

லண்டன் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாமுக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் டொட்டஹம் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் முகாமையாளரான ஜோஸ் மொரின்ஹோ தனது பணியை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.   

போட்டியின் முதல் பாதியில் சொன் ஹியுங் மின் மற்றும் லுகாஸ் மௌரோ மற்றும் ஹரி கேன் இரண்டாவது பாதியில் பெற்ற கோல்கள் மூலம் டொட்டன்ஹாம் கடந்த ஜனவரி 20 இற்குப்பின் வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. 

வெஸ்ட் ஹாம் கடைசி நேரத்தில் இரண்டு கோல்களை பெற்றபோதும் அது எதிரணிக்கு சவால் விடுப்பதாக அமையவில்லை. 

ப்ரீமியர் லீக்கில் சோபிக்கத் தவறிவந்த டொட்டன்ஹாம் முகாமையாளர் மோரிசியோ பொச்சடினோ கடந்த வாரம் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொரின்ஹோ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

ஜுவன்டஸ் எதிர் அட்லாண்டா

கொன்சலோ ஹிகுவைன் கடைசி நேரத்தில் பெற்ற இரட்டை கோல் மூலம் அட்லாண்டா அணிக்கு எதிராக போட்டியில் ஜுவன்டஸ் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் மூலம் சீரி A தொடரில் ஜுவன்டஸ் 4 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது. 

இரண்டாவது பாதியில் ரொபின் கொசென்ஸ் பெற்ற கோல் மூலம் அட்லாண்டா முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஹிகுவைன் 74, 82 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் பெற்று ஜுவன்டஸின் வெற்றியை உறுதி செய்யதார். தொடர்ந்து மேலதிக நேரத்தில் போல் டிபாலா அந்த அணிக்காக மற்றொரு கோலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

ஜுவன்டஸ் கழகம் தமது முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றியே இந்தப் போட்டியில் களமிறங்கியது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<