இராணுவம் மற்றும் சொலிட் அணிகள் அதிரடி

261
Dialog champions league - Tamil article

டயலொக் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 5 போட்டிகள் கடந்த ஜூலை 3ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டிகளில் இராணுவம் ,பொலிஸ், நியூ யங் மற்றும் சொலிட் அணிகள் வெற்றிபெற்றன.

இராணுவ மற்றும் ப்ளூஸ்டார் அணிகளுக்கிடையிலான போட்டி

களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இராணுவ அணி 6-0 என்ற கோல் கணக்கில் பாரிய வெற்றி பெற்றது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இராணுவ அணியினர் 30ஆவது நிமிடத்தில் சஜித் குமார மூலமாக முதலாவது கோலை அடித்து தமது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியது. தனது திறமையான ஆட்டத்தின் மூலம் மொஹம்மத் இஸடீன் 58ஆம்,77ஆம்,87ஆம்,90ஆம் நிமிடங்களில் தொடர்ந்து 4 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 5-0 என முன்னிலை கொண்டிருந்த இராணுவ அணிக்கு 91ஆவது நிமிடத்தில் சங்க தனுஷ்க மேலும் ஒரு கோலை அடித்து 6-0 என்று இராணுவ அணியை வெற்றிபெறச் செய்தார்.


ஜாவா லேன் மற்றும் பொலிஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பொலிஸ் அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 12ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணிக்காக மொஹமட் சுபாய்க் கோல் அடித்து பொலிஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 42ஆவது நிமிடத்தில் ஜாவா லேன்  சார்பாக நவீன் ஜுட் கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார். பதிலுக்கு  வேகமாக செயற்பட்ட பொலிஸ் அணி 45ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலையடைந்த போதும் முதல் பாதியில் கொடுக்கப்பட்ட மேலதிக நேரத்தில் (48ஆவது நிமிடத்தில்) நவீன் ஜுட் மேலும் ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார்.

முதற்பாதியில் 2-2 என போட்டி சமநிலையடைய இரண்டாம் பாதியில் இரு அணிகளும் மும்முரமாக மோதிக்கொண்டனர். 78ஆவது நிமிடத்தில் கெல்வின் கணு பொலிஸ் அணிக்காக வெற்றி கோல் அடித்து பொலிஸ் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியடையச் செய்தார். ஜாவா லேன் அணியின் அழகராஜ் டாகிஷ் கு 80ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அப் கண்ட்ரி லயன்ஸ் மற்றும் கிரிஸ்டல் பெலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மலையகத்தின் இரு அணிகளும் மோதிக் கொண்டன. ஆரம்பம் முதல் அசத்தி வந்த அப் கண்ட்ரி லயன்ஸ், சார்லஸ் ஓரலு  மூலமாக 27ஆவது நிமிடத்திலும், அநோயோ ஒசொர் மூலமாக 31ஆவது நிமிடத்திலும் தொடந்து கோல் அடித்து 2-0 என முன்னிலை அடைந்தது. தமது நம்பிக்கையைத் தளர விடாத கிரிஸ்டல் பெலஸ் அணியினர் போராடி 42ஆவது நிமிடத்தில் ஐசக் அபா மூலமாக ஒரு கோல் அடித்து 2-1 என்ற நிலையில் முதல் பாதியை முடித்தனர்.

இரண்டாம் பாதியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளாலும் ஆரம்பத்தில் கோல் அடிக்க முடியவில்லை. எனினும் தோல்வியுற விரும்பாத கிரிஸ்டல் பெலஸ் அணியினர் சிறப்பாக விளையாடி 85ஆவது நிமிடத்தில் கிறிஸ்டோபர் எரஸ்டஸ் மூலமாக கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தது. அதைத் தொடர்ந்து எந்த ஒரு அணியினாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.


நியூ யங் மற்றும் கடற்படை அணிகளுக்குக்கிடையிலான போட்டி

வென்னப்புவ அல்பேர்ட் எப். பீரிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நியூ யங் அணியினர் 3-1  என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு தமது வெற்றி நடையைத் தொடர்ந்தனர். போட்டியின் 29ஆவது நிமிடத்தில் நாலக ரொஷான் கடற்படை அணிக்காக கோல் அடித்து கடற்படையை முன்னிலைப்படுத்திய போதும் நியூ யங் அணிக்காக அன்கம ஜார்ஜ் 41ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தினார். கடற்படை அணியினால் இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போக, ஹசித பிரியங்கர மற்றும் திசேர ஆகிய வீரர்களின் உதவியுடன் 2 கோல் அடித்து நியூ யங் அணியானது போட்டியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.


சொலிட் மற்றும் மக்கள் பாதுகாப்பு படை அணிகளுக்கிடையிலான போட்டி

சொலிட் மற்றும் மக்கள் பாதுகாப்புப் படை அணிகளுக்கிடையிலான போட்டி அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சொலிட் அணியானது இப்போட்டியை 6-0 என இலகுவாக வெற்றிகொண்டது. சொலிட் அணிக்காக அன்டன் ரஞ்சன் 53ஆம்,63ஆம்,91ஆம் நிமிடங்களில் 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அவரை தொடர்ந்து ஹென்றி 31ஆம் மற்றும் 45ஆம் நிமிடங்களில் 2 கோல் அடித்து அசத்தினார். மேலும் சொலிட் அணிக்காக அபூமேர் 1 கோல் அடித்து 6-0 என்ற அபார வெற்றியை அடைய  உதவினார்.

இப்போட்டியில் சொலிட் அணியின் இரண்டு வீரர்களுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரிஸ்மி 49ஆம் நிமிடத்திலும் ஹெட்டியாராச்சி 88ஆம் நிமிடத்திலும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் சொலிட் அணி இப்போட்டியை 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது .