டயலொக் சாம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வார இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் சோண்டர்ஸ், நீர்கொழும்பு இளைஞர் கழகம், சொலிட் கழகம், ஜாவா லேன் கழகம், இராணுவ மற்றும் கடற்படைக் கழகம், நியூ யங்ஸ் கழகம் மற்றும் மாத்தறை கழகங்கள் வெற்றிபெற்றன.

நீர்கொழும்பு இளைஞர் அணி மற்றும் அப் கண்ட்ரி லயன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

ஆகஸ்ட் 6ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நீர்கொழும்பு அணி அப் கண்ட்ரி லயன்ஸிற்கு அதிர்ச்சி கொடுத்து போட்டியை 8-0 என்ற கோல் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

கடந்த சில போட்டிகளில் தோல்வியை சந்தித்த அப் கண்ட்ரி  லயன்ஸ் அணியானது இப்போட்டியில் கடுமையான தோல்வியைச் சந்தித்தது. முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் 15ஆவது நிமிடத்தில் அக்கூடே நீர்கொழும்பு இளைஞர் அணிசார்பாக கோல் அடித்து கோல் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்.

40ஆவது நிமிடத்தில் தர்மலிங்கம் கோல் அடித்து நீர்கொழும்பு அணியை மேலும் உயர்த்திவிட்டார். இரண்டாவது கோல் அடிக்க சிறிது நேரம் சென்றாலும் முதல் பாதி முடிவதற்குள் மேலும் இரண்டு கோல் அடித்து நீர்கொழும்பு இளைஞர் அணி முதற் பாதியை 4-0 என்று முடித்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய நீர்கொழும்பு இளைஞர் அணி மேலும் நான்கு கோல்களை அடித்து போட்டியை 8-0 என்று இலகுவாக வென்றது.

நீர்கொழும்பு இளைஞர் அணி சார்பாக அக்கூடே 15ஆவது மற்றும் 45+1 நிமிடத்திலும், தர்மலிங்கள் 40ஆவது நிமிடத்திலும், ஹாட் ரிக் கோல் அடித்த அப்துல் மூமினி 45+3, 51, 79ஆவது நிமிடங்களிலும், திலிப் பீரிஸ் 85ஆவது மற்றும் 90+2ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அப் கண்ட்ரி லயன்ஸிற்கு சோதனை அளித்தனர்.


பொலிஸ் மற்றும் சோண்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

ஆகஸ்ட் 6ஆம் திகதி பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சோண்டர்ஸ் அணியானது 1-0 என்று வெற்றிபெற்றது. பொலிஸ் அணியானது இப்போட்டியுடன் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த சோண்டர்ஸ் அணி 26ஆம் நிமிடத்தில் மொஹமட் ஷஹீல் மூலமாக கோல் அடித்துப் போட்டியை வென்றது. தொடர்ந்து சோண்டர்ஸ் அணியிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் பொலிஸ் அணியின் கோல் காப்பாளரின் திறமையால் சோண்டர்ஸ் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. பொலிஸ் அணியின் மந்த நிலையிலான ஆட்டத்தினால் சோண்டர்ஸ் அணி இலகுவாக வெற்றியைப் பெற்றது.


சொலிட்  மற்றும் கொழும்பு கழகங்களுக்கிடையிலான போட்டி

ஆகஸ்ட் 7ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியின் பின்னர் சொலிட் அணி கொழும்பு அணியை 4-2 என்று வென்றது.

சிறப்பாக விளையாடிய சொல்லிட அணியானது முதல் பாதியில் 13ஆவது நிமிடத்தில் கானரூபன் வினோத் மூலமாக முதலாவது கோலை அடித்தது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்து அடிக்க முடியாத நிலையில் முதற் பாதி முடிவதற்கு 2 நிமிடத்திற்கு முன்பு ஸர்வான் ஜொஹார்  கொழும்பு அணி சார்பாக கோல் அடித்து முதற் பாதி சமநிலையில் முடிய உதவினார்.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காகத் தீவிரமாக விளையாடிய பொழுதும் மீண்டும் ஒரு முறை அபாரமாக விளையாடிய கானரூபன் வினோத் 71 ஆவது நிமிடத்தில் சொலிட் அணி சார்பாக கோல் அடித்து சொலிட் அணிக்கு முன்னிலை வழங்கினார். போட்டியை சமநிலையில் முடிப்பதற்கு கோல் அடிக்க முயற்சி செய்த கொழும்பு அணி சார்பாக தனுஷ்க மதுஷங்க 85ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கொழும்பு அணிக்கு நம்பிக்கை வழங்கினார். எனினும் 89ஆவது நிமிடத்தில் தனோஜ் விஜேதுங்க சொலிட் அணி சார்பாக கோல் அடித்து கொழும்பு அணியிக்கு அபாய மணி அடித்தார்.

93ஆவது நிமிடத்தில் அபுமெரே கோலடித்து சொலிட் அணியின் வெற்றியை உறுதி செய்தாலும் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஜாவா லேன் மற்றும் விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டி

அகஸ்ட் 6ஆம் திகதி சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஜாவா லேன் அணி 2-0 என்று வென்றது.

சூப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகுவதற்கு கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கிய ஜாவா லேன் அணி, தரவரிசையில் தமக்கு முன்னிலையில் இருக்கும் விமானப்படை அணியை வென்று தாமும் அடுத்த சுற்றுக்குத் தகுதியான அணி தான் என்பதை நிரூபித்தது.

ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக விளையாடிய ஜாவா லேன் அணி முதலில் சில வாய்ப்புகளைத் தவறவிட்ட பொழுதும் 24ஆவது நிமிடத்தில் நவீன் ஜுடின்  உதவியுடன் கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஜாவா லேன் அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அவ் அணி கோல் அடிக்கத் தவறியது குறிப்பிடத்தக்கது. 82ஆவது நிமிடத்தில் விமானப்படை கோல் காப்பாளர் அருணசிறி செய்த தவறால் ஜாவா லேன் அணிக்கு பெனால்டி வழங்கப்பட, அப்துல்லா கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

அடுத்த சுற்றுக்குத் தெரிவாக விமானப்படை ரினொன் அணியை வெல்ல வேண்டும் என்பதோடு, ஜாவா லேன் அணி அடுத்த சுற்றுக்குத் தெரிவாக வேண்டும் எனின் சூப்பர் சன் அணி பொலிஸ் அணியை வெல்ல வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.


இராணுவ அணி மற்றும் கிரிஸ்டல் பெலஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

ஆகஸ்ட் 7ஆம் திகதி களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி நிமிட கோலின் மூலம் இராணுவ அணி கிரிஸ்டல் பெலஸ் அணியைத் தோற்கடித்தது .

அடுத்த சுற்றுக்குத் தெரிவாக கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் விளையாடிய கிரிஸ்டல் பெலஸ் அணியானது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இராணுவ அணிக்கு கடும் போட்டியை வழங்கியது. எனினும் நிதானமாக விளையாடிய இராணுவ அணியானது மதுஷான் மூலமாக முதல் கோல் அடித்தது. விட்டுக்கொடுக்காதா கிரிஸ்டல் பெலஸ் அணியும் காலிட் அஸ்மில் மூலமாக கோல் அடித்து சமநிலை செய்தது. முதல் பாதி முடியும் முன் 42ஆவது நிமிடத்தில் மொஹமட் இஸடீன் மூலமாக இரண்டாவது கோல் அடித்த இராணுவ அணியானது முதற் பாதி முடிவில் முன்னிலையில் காணப்பட்டது.

இரண்டாம் பாதியில் சமநிலை கோலிற்காக முயற்சி செய்த கிரிஸ்டல் பெலஸ் அணி சார்பாக 57ஆவது நிமிடத்தில் ஐசக் அபா கோல் அடித்து கிரிஸ்டல் பேலஸ் அணிக்காக நம்பிக்கை கொடுத்தார். எனினும் போட்டியின் இறுதி நேரமான 85ஆவது நிமிடத்தில் பண்டார இராணுவ அணி சார்பாக கோல் அடித்து இராணுவ அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.


கடற்படை மற்றும் ரினொன் அணிகளுக்கிடையிலான போட்டி

ஆகஸ்ட் 6ஆம் திகதி வெளிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கடற்படை அணி பிரபல ரினொன் அணியை 2-1 என்று வென்றது.

இந்த வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியடையாது களமிறங்கிய ரினொன் அணியானது முதல் முறையாக இவ்வருடத்தில் கடற்படை அணியிடம் தோல்வியைக் கண்டது. சமீர கிரிஷாந்த 29ஆவது நிமிடத்தில் கடற்படை அணி சார்பாக கோல் அடித்து கடற்படை அணிக்கு முன்னிலையை வழங்கினார். இரு அணிகளும் முதல் பாதியில் வேறு கோல்கள் அடிக்காத நிலையில் முதல் பாதி 1-0 என்று கடற்படை வசம் முடிந்தது.

இரண்டாம் பாதியில் 55ஆவது நிமிடத்தில் சமநிலை கோல் அடித்த ரினொன் அணியின் ஜாப் மைக்கல் ரினொன் அணிக்கு வேகம் அளித்தார். எனினும் 74ஆவது நிமிடத்தில் கடற்படை அணி சார்பாக கோல் அடித்த பெர்னாண்டோ கடற்படையின் வெற்றியை உறுதிசெய்தார்.


நியூ யங்ஸ் மற்றும் திகாரிய இளைஞர் அணிகளுக்கிடையிலான போட்டி

வென்னப்புவ அல்பர்ட் எப் பீரிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நியூ யங்ஸ் அணியானது 2-0 என்று வெற்றிபெற்றது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நியூ யங்ஸ் அணியானது 9ஆவது நிமிடத்தில் அன்கமஹா ஜோர்ஜ் மூலமாக முதல் கோல் அடித்து ஆரம்பத்திலேயே முன்னிலை கொண்டது. திகாரிய இளைஞர் அணி பல முயற்சிகளை செய்த பொழுதும் அவ் அணியால் எந்த ஒரு கோலையும் அடிக்க முடியாத நிலையில் முதல் பாதி 1-0 என்று நியூ யங்ஸ் வசம் நிறைவுகண்டது.

இரண்டாம் பாதியின் ஆரம்பத்திலேயே 47ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணியின் வீரர் மொஹமட் பவ்சான் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட நியூ யங்ஸ் அணி 10 வீரர்களைக் கொண்டே எஞ்சிய நேரத்தைக் கழித்தது. எனினும் சிறப்பாக விளையாடிய நியூ யங்ஸ் அணி 79ஆவது நிமிடத்தில் தனது அணி சார்பாக இரண்டாவது கோலையும் அடித்த அன்கமஹா ஜோர்ஜ் நியூ யங்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.


ப்ளூ ஸ்டார் மற்றும் மாத்தறை கழகத்திற்கு இடையிலான போட்டி

ஆகஸ்ட் 6ஆம் திகதி களுத்துறை வெர்னோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாத்தறை அணியானது ப்ளூ ஸ்டார் அணியை 1-0 என்ற கோல் அடிப்படையில் வென்றது.

இந்த வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் வெற்றிபெறாத நிலையில் இப்போட்டியில் களமிறங்கிய  மாத்தறை அணி இப்போட்டியிலேனும் ஆறுதல் வெற்றியைப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு களமிறங்கியது

தீவிரமாக விளையாடிய மாத்தறை அணியானது தரவரிசையில் தன்னை விட முன்னிலையில் இருக்கும் ப்ளூ ஸ்டார் அணிக்கு எதிராக 14ஆவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்தது. வெளிநாட்டு வீரரான ஒச்சுக்கோ பிராங்க் மாத்தறை அணி சார்பாக கோல் அடித்து மாத்தறை அணிக்கு முன்னிலை வழங்கினார்.

தொடந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்த போதிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளைத் தவறவிட்டதன் காரணமாக இரு அணிகளாலும் எந்த ஒரு கோலையும் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக போட்டி 1-0 என்ற அடிப்படையில் மாத்தறை அணி வசம் முடிவடைந்தது.