பார்சிலோனா பனிப் போர்: மெஸ்ஸியின் எதிர்காலம் என்ன?

163

ஸ்பெயினின் பிரபல பார்சிலோனா கழகத்திற்குள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழப்பங்களுக்கு மத்தியில் அதன் அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி அணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன என தகவல்கள் பரவுகின்றன. 

வரலாறு நெடுகிலும் பார்சிலோனா கழகத்தின் நிறைவேற்றுக் குழுவுக்குள் மற்றும் அந்தக் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் வீரர்கள் போன்று பயிற்சியாளர்களுக்கு இடையேயும் அவ்வப்போது மோதல்கள் வெடித்தபோதும் தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது. அது அண்மையில் இடம்பெற்ற சம்பள வெட்டுடன் தொடர்புபட்ட கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் மெஸ்ஸி முதற்கொண்டு பார்சிலோனா வீரர்கள் நிறைவேற்றுக் குழுவை கடுமையாக விமர்சித்த பின்னணியில் அதன் உயர் பதவிகளில் இருந்த 6 அதிகாரிகள் அண்மையில் தமது பதவிகளில் இருந்து விலகியதோடு நிறைவேற்றுக் குழு மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தினர்.    

யுனைடட் அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் வெளியேறிய போல் பொக்பா

மன்செஸ்டர் யுனைடட் கழகத்தை விட்டு 2012 ஆம் ஆண்டு ஜுவன்டஸ் கழகத்தில்..

எவ்வாறாயினும் இந்தப் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் மற்றும் கருத்து முரண்பாடுகள் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. பார்சிலோனா கழகத்தின் தற்போதைய தலைவர் ஜோசெப் மரியா பார்டோமியு 2014 ஆம் ஆண்டில் அந்தப் பதவியை ஏற்றது தொடக்கம் இதுவரை இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது சாதாரண ஒன்றாக மாறியுள்ளது.    

யாரும் எதிர்பார்க்காத வகையில் 2017 ஆம் ஆண்டு நெய்மார் அணியில் இருந்து வெளியேறியது அவரது பதவிக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது பெரும் சர்ச்சையாக இருந்தது. மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்வில் இறுதி ஆண்டுகளை எட்டி இருக்கிறார். அவரது இடத்தை நிரப்புவதற்கு தகுதி உடையவராக இருந்தவர் நெய்மார் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது

நெய்மார் இவ்வாறு பார்சிலோனா அணியை கைவிட்டு பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துடன் இணைவதற்கு பார்டோமியு காரணமாக இருந்தார் என விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு வீரர்கள் பரிமாற்ற காலம் முழுவதும் மீண்டும் அவரை அணியில் இணைப்பதில் தோல்வி அடைந்தது பார்டோமியு மீது இருந்த கோபத்தை அதிகரிக்க காரணமானது

மேலும், முன்னாள் பயிற்சியாளர் எர்னஸ்டோ வெல்வர்டே மீது பலரும் அதிருப்தி கொண்டபோதும் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விதம் அனைவரதும் விமர்சனத்திற்கும் உள்ளானது. அது அவருக்கு பதில் வேறு ஒரு பயிற்சியாளர் தேர்வு செய்யப்படாத நிலையில் அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரை கௌரவமான முறையில் பதவி நீக்காத பார்டோமியுவின் செயற்பாடும் வீரர்களின் அதிருப்திக்கு காரணமாக இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன

பார்சிலோனா கழகத்தின் தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடைபெறவிருப்பதோடு அதில் பங்கேற்பதற்கு பார்டோமியுவுக்கு வாய்ப்பு இல்லாத சூழலில் அவர் தற்போது தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறார். எவ்வாறாயினும் கடந்த ஒருசில மாதங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக பார்சிலோனா கழகம் தற்போது பல சிக்கல்களுக்கும் முகம்கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.  

சமூக ஊடக சர்ச்சை 

பார்டோமியு தமது நிர்வாகத்தின் புகலை அதிகரிக்கவும் வீரர்கள் மற்றும் அவருக்கு எதிரான உறுப்பினர்களை விமர்சித்து அவர்களை பலவீனப்படுத்துவதற்கும் சமூகு ஊடக நிறுவனமானI3 Venturesஉடன் பல மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக கடந்த பெப்ரவரி மாதத்தில் ஸ்பெயின் வானொலிச் சேவையான Cadena SER அம்பலப்படுத்தி இருந்தது. அதன்படிI3 Venturesநிறுவனம் சமூக ஊடகத்தில் போலிக் கணக்குகளை உருவாக்கி அந்தப் பணிகளை மேற்கொண்டதாக அந்த வானொலிச் சேவை மேலும் கூறியிருந்தது

இதன் மூலம் அணியில் இருக்கின்ற பிரபல வீரர்களான மெஸ்ஸி மற்றும் கெரார்ட் பிக்கு போன்றவர்கள், முக்கிய இடம் பிடித்திருக்கும் கார்லஸ் புயோல், எக்சாவி ஹெர்னான்டஸ் மற்றும் பெப் குவார்டியோலா போன்ற முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் போன்று எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் அதன் தலைமை பதவியில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் அகஸ்டி பென்டிடோ, விக்டர் பொன்ட் மற்றும் ஜவுடோ ரோரஸ் போன்றவர்களை அவமதித்தும் விமர்சித்தும் கருத்துகள் வெளியாவதாக தெரியவந்தது

தொடர்ந்து பொன்ட் மற்றும் ரோரஸ் இது தொடர்பில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதோடு இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாயின் பார்டோமியு முதற்கொண்டு நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாக பென்டிடோ குறிப்பிட்டிருந்தார்

எவ்வாறாயினும் அவர்களை விமர்சிப்பதற்காகI3 Venturesநிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் வழங்கவில்லை என்றும் அது தமக்குத் தெரியாமல் அந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் செயல் என்றும் அதனால் கழகத்திற்கும் அந்த சமூக ஊடக நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை கைவிட தாம் தீர்மானித்திருப்பதாகவும் பார்டோமியு குறிப்பிட்டிருந்தார்.      

ஊதியக் குறைப்புக்கு பார்சிலோனா வீரர்கள் இணக்கம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோன கழக வீரர்கள்…

இது தொடர்பில் மெஸ்ஸி கருத்துக் கூறும்போது தெரிவித்ததாவது

இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் அவர்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறியிருந்தார்கள். என்றபோதும் இது உண்மையா, பொய்யா என்பது பற்றி தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. எனவே அது பற்றி இப்போது எதுவும் கூற முடியாதுள்ளது என்றார்

இதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சர்ச்சைகள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  

வீரர்கள் சம்பள வெட்டு

உலகெங்கும் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கழகங்கள் வருவாய் இழப்புகளை எதிர்கொண்டுள்ளன. இதனால் கழகத்தில் பணியாற்றுகின்ற கால்பந்துடன் சாராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பார்சிலோனா இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்டோமியு முதற்கொண்டு நிறைவேற்றுக் குழு வீரர்களின் சம்பளத்தில் 70 வீத குறைப்பை மேற்கொள்ள தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது. இது தொடர்பில் இடம்பெற்ற முதல் சந்திப்பு வெற்றியளிக்காதபோதும் மெஸ்ஸி முதற்கொண்டு வீரர்கள் இறுதியில் 70 வீத சம்பள வெட்டுக்கு இணங்கியது மாத்திரமல்ல அதற்கு அப்பால் இரண்டு வீத  ஊதிய வெட்டுக்கும் இணங்கினார்கள்.    

சம்பள வெட்டுக்கு அனைத்து வீரர்களும் தயாராக இருக்கும்போது கழகத்தின் நிர்வாகிகள் அது தொடர்பில் அதிக அழுத்தம் கொடுத்தது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக மெஸ்ஸி இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.   

ஆரம்பத்தில் இருந்தே சம்பள வெட்டுக்கு நாம் விருப்பத்தை வெளியிட்டிருந்தோம் என்பதை நான் முதலில் கூற விரும்புகிறேன். ஏனென்றால் இது நெருக்கடியான சந்தர்ப்பம் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நிர்வாகம் கேட்ட விடயங்களுக்கு நாமே முதலில் ஆதரவை வழங்கினோம். பல நேரங்களில் அவசியம் என்று எமக்குத் தெரிந்தால் நாம் எமது விருப்பில் பல விடயங்களை செய்த சந்தர்ப்பங்கள் இருக்கின்றன

அப்படி இருந்தும் நிர்வாகத்தில் இருக்கின்ற சில நபர்கள் நாம் ஆரம்பத்தில் இருந்தே இணங்கி இருந்த விடயம் ஒன்றை செய்வதற்கு அதிக அழுத்தம் கொடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இதற்கு இணங்குவதற்காக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது இந்த நெருக்கடியான நேரத்தில் கழகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் உதவுவதற்கான முறையான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காகும் என்று மெஸ்ஸி கூறி இருந்தார்

பார்சிலோனாவுக்கு விளையாட மறுப்பு தெரிவித்த ரொனால்டோ

மன்செஸ்டர் யுனைடட் கழகத்திடம் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவை 2009..

இந்த 70 வீத சம்பள வெட்டுக்கு வீரர்கள் இணங்காத பட்சத்தில் ஸ்பெயினின் ‘ERTE’ (Temporary Employment Regulation File) சட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு நிர்வாகம் தயாராக இருந்ததாக பார்டோமியு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இவ்வாறாக மெஸ்ஸி சமூக ஊடகத்தில் விமர்சித்ததன் மூலம் வீரர்கள் மற்றும் நிர்வாகக் குழு இடையே இருக்கும் முரண்பாடு உச்சத்தை எட்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது

அதிகாரிகளின் வெளியேற்றமும் ஊழல் குற்றச்சாட்டும்

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பார்சிலோனா கழகத்தின் துணைத் தலைவராக செயற்பட்ட எமிலி ரவுசௌட், மேலும் 5 உறுப்பினர்களுடன் பதவியில் இருந்து வெளியேறினார். இதன்படி, மற்றொரு துணைத் தலைவரான என்ரிக் டொம்பாஸ், நிறைவேற்றுக் குழுவின் பணிப்பாளர் பதவியை ஏற்றிருந்த சில்வியோ எலியஸ், மரியா டிக்சிடோர், ஜோசெப் பொன்ட் மற்றும் ஜோர்டி க்ளசமிக்லியா ஆகியோரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.     

I3 Venturesநிறுவனத்தை மையமாகக் கொண்ட சமூக ஊடகங்களுடன் தொடர்புபட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள், ஊடகங்கள் வழியாக வெளியானதை அடுத்து அழைக்கப்பட்ட அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் சிலர் பார்டோமியுவை பதவி விலகும்படியும் வாக்கெடுப்பை நடத்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர். என்றாலும் இதனால் அவர் கோபமடைந்திருப்பதாகவும் அதன் காரணமாக அவருக்கு சார்பான உறுப்பினர்களை மாத்திரம் எதிர்கால செயற்பாடுகளில் இணைத்துக் கொள்வதற்கு அவர் தயாராகி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன்படி அவருக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனாலும் அவர் தமது பதவிக் காலத்தை பூர்த்தி செய்வதற்கு தயாராகி வருவதாக தெரியவருகிறது.      

இதன்படி பார்டோமியு மூலம் நிறைவேற்றுக் குழு மறுசீரமைக்கப்பட இருப்பதாகவும் ரவுசௌட் உட்பட மேலும் பல அதிகாரிகளின் செயற்பாடுகள் தெளிவில்லாமல் இருப்பதாக அவர்களை அந்தப் பணிகளில் பங்கெடுக்கச் செய்ய எதிர்பார்க்கவில்லை என்றும் ரவுசௌட் இடம் பார்டோமியு கூறியதாக Cadena SER வானொலிக்கு ரவுசௌட் குறிப்பிட்டுள்ளார்.   

ஆரம்பத்தில் தமது பதவிக்காக போராட தயாராகி வருவதாக அவர் கூறியபோதும் கடந்த வாரம் அவர் மேலும் ஐந்து உறுப்பினர்களுடன் இணைந்து தமது பதவியை இராஜினாமா செய்தார். அந்தக் குழுவில் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதன் காரணமாக அவர்கள் இவ்வாறு பதவி விலகியதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய சரியான விடயம் வாய்ப்பு கிடைத்த விரைவில் அடுத்த தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது என்றும் சுட்டிக்காட்டினர்.   

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பார்சிலோனா கழகம்

பார்சிலோனா கழகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அதன்..

தொடர்ந்து அண்மையில் RAC1 வானோலிச் சேவைக்கு அளித்த போட்டியில் பார்சிலோன கழத்திற்குள் ஊழல் இடம்பெறுவதாக நீங்கள் நம்புகிறீர்களா? என்ற  கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, அவ்வாறான ஊழல் இடம்பெறுவதாக தாம் நம்புவதாகவும் அது நிறைவேற்றுக் குழுவில் ஒரு நபரினால் மேற்கொள்ளப்படுவதாக தாம் நம்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஊழல் இடம்பெற்றிருப்பதாக நான் உண்மையில் நம்புகிறேன். அது குழுவில் ஒருவரால் இடம்பெறுகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது யார் என்று கூற இந்த நேரத்தில் எனக்குத் தெரியாது. சில ஒப்பந்தங்களுக்கு பகுதி அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ஊழல் இடம்பெற்றிருப்பது தெளிவாகிறது. ஏனென்றால் அவ்வாறு பகுதி அடிப்படையில் செலுத்தும்போது அது உள்ளக கட்டுப்பாட்டுக்குள் சிக்குவதில்லை. அவ்வாறு பகுதி அடிப்படையில் செலுத்தாமல் வழக்கமான முறையில் செய்தால் அது அந்த ஒப்பந்தம் சந்தை விலைக்கு இணையானது என்று உறுதி செய்கின்ற நிர்ணயக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுதல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.   

இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டு பார்டோமியு முதற்கொண்டு நிறைவேற்றுக் குழு ரவுசௌட்டிற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை பற்றி தற்போது இடம்பெற்று வருகின்ற கணக்காய்வு முடிவில் தெரியவரும்.   

மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டுச் செல்வாரா

நிறைவேற்றுக் குழுவில் இருப்பது போன்றே கழகத்திற்குள்ளும் இருக்கின்ற மோதல்கள் காரணமாக மெஸ்ஸி கவலை அடைந்திருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதேபோன்று, மெஸ்ஸி மற்றும் பார்டோமியு இடையிலான உறவு தற்போது விரிசல் அடைந்திருப்பது சம்பள வெட்டு விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் தெளிவாகிறது. மேலும், 2015 ஆம் ஆண்டுக்குப் பின் பார்சிலோனா வீரர்கள் மூலம் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரை வெல்ல முடியாமல் போய் இருப்பதோடு அதனை வெற்றி பெறுவதற்கான தமது எதிர்பார்ப்புப் பற்றி மெஸ்ஸி தொடர்ந்து கருத்துக் கூறி வருகிறார். அதன்படி இவை அனைத்துக்கும் மத்தியில் மெஸ்ஸி இறுதியில் பார்சிலோனாவை கைவிட்டு வேறு அணி ஒன்றில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டுள்ளன.        

இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால் மெஸ்ஸிக்கு பார்சிலோனாவினால் வழங்கப்படுகின்ற பெரிய ஊதியமாகும். அதன்படி அவருக்கு வாரத்திற்கு 646,000 டொலர் அளவு பெரும் ஊதியத்தை பார்சிலோனா தற்போது வழங்குகிறது

கொரோனா வைரஸ் காரணமாக பார்சிலோனாவின் வருவாய்க்கான அனைத்து வழிகளும் தற்போது மூடப்பட்டிருப்பதோடு எதிர்காலத்தில் அவர்கள் திவாலாகும் சூழல் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் வைரஸ் அச்சுருத்தல் தீர்ந்த பின்னரும் பார்சிலோனா கழத்தினால் அவருக்கு ஊதியம் வழங்க முடியுமா என்ற சிக்கலும் தற்போது எழுந்துள்ளது. இதனால் சிலவேளை இந்த நிலைமையின் முடிவில் பார்சிலோனா கழகத்திற்கு மெஸ்ஸியை வேறு அணி ஒன்றிற்கு விற்க வேண்டி ஏற்படும் வாய்ப்புகளும் இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.   

அதேபோன்று மெஸ்ஸி இந்தப் பருவம் முடிந்த பின் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற தீர்மானித்தால் அவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக இத்தாலியின் இன்டர் மிலான் கழகம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.   

எவ்வாறாயினும் 14 வயது தொடக்கம் பார்சிலோனா கனிஷ்ட அணியில் ஆடி தற்போது 16 ஆண்டுகளாக தமது தொழில்முறை கால்பந்தை பார்சிலோனா அணிக்காக அர்ப்பணித்திருக்கும் மெஸ்ஸி, எத்தனை சிக்கல் வந்தபோதும் அந்தக் கழகத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை குறிப்பிட வேண்டும். மேலும், தாம் பார்சிலோனா கழகத்தை விட்டு வேறு அணி ஒன்றுக்கு செல்ல ஒருபோதும் நினைத்ததில்லை என்றும், தமது கால்பந்து வாழ்வை பார்சிலோனாவுடன் முடித்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பல சந்தர்ப்பங்களிலும் கூறியுள்ளார்.      

எனவே. அவர் பார்சிலோனா அணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தபோதும், கால்பந்து விளையாட்டில் எல்லாவற்றையும் போல் இது நிச்சயமில்லாத ஒன்று என்பதால் இங்கு நடக்க முடியாது எதுவும் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்வது நன்று.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<