இந்திய, மேற்கிந்திய டெஸ்ட் போட்டியின் சிறப்புக் கண்ணோட்டம்

390
Ind vs WI test series

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராத் கொஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் இரு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியது. அவ்விரு ஆட்டங்களும் சமநிலையில் முடிந்தன.

இந்த நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள்  மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. புதிய பயிற்சியாளர் அனில் கும்பிளேயின் வழிகாட்டுதலில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.

சில ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி சொதப்பினாலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாடி வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு  எதிராக கடைசியாக ஆடிய 5 டெஸ்ட் தொடர்களையும் (3 இந்திய மண்ணில், 2 மேற்கிந்திய தீவுகள் மண்ணில்) இந்திய அணியே கைப்பற்றி இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

மீண்டும் ஐந்து பந்து வீச்சாளர்கள் யுக்தியை கடைப்பிடிக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதால் ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைக்காது. அத்துடன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருப்பதால் 2 சுழற்பந்து வீச்சாளருடன் ஆடுவதா? அல்லது மூன்று சுழற்பந்து வீச்சாளரை சேர்ப்பதா? என்பது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இங்குள்ள ஆடுகளங்களில் துடுப்பாட்ட வீரர்கள் பொறுமையாக செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். தொடக்க வீரர்கள் முரளி விஜயும், ஷிகர் தவானும் நிலைத்து நின்று நல்ல ஆரம்பத்தை உருவாக்கித் தந்தால், பெரிய ஓட்டங்களை எட்டி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க உதவிகரமாக இருக்கும். பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சைத் தான் இந்திய அணி அதிகம் எதிர்பார்க்கிறது.

அதே சமயம் உள்ளூரில் விளையாடுவதால் மேற்கிந்திய தீவுகள் அணி கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் மேற்கிந்திய தீவுகள் அணியில் திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். 2002-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்டில் வீழ்த்தாத ஒரே அணி இந்தியாதான். இந்தக் காலகட்டத்தில் (கடந்த 14 ஆண்டில்) மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராக 15 டெஸ்டில் விளையாடி அதில் 8-ல் தோல்வியும், 7-ல் சமநிலை முடிவையும்  கண்டுள்ளது. இந்த சோகத்துக்கு விடைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் பலமாக முயற்சிப்பார்கள்.

டெஸ்ட் தரவரிசையில் 112 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி தொடரை 3-0 அல்லது அதை விட சிறந்த நிலையில் வசப்படுத்தினால் மட்டுமே தரவரிசை புள்ளியை இழக்காமல் தக்கவைக்க முடியும். 65 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கும் மேற்கிந்திய தீவுகள் தொடரை வென்றால், அந்த அணிக்கு அதிகமான தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2006-ம் ஆண்டில் ராகுல் டிராவிட் தலைமையிலும், 2011-ம் ஆண்டில் டோனி தலைமையிலும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இந்த வரிசையில் ‘ஹாட்ரிக்’ அடிப்பதே விராட் கோஹ்லி அணியின் கனவாகும். அது நிறைவேறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேசப் பட்டியல் வருமாறு:-

இந்தியா:

முரளிவிஜய், ஷிகர் தவான், விராட் கோலி (தலைவர்), புஜாரா அல்லது லோகேஷ் ராகுல், ரஹானே, விருத்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, அமித் மிஸ்ரா அல்லது ஸ்டூவர்ட் பின்னி அல்லது உமேஷ் யாதவ்.

மேற்கிந்திய தீவுகள்:

டேரன் பிராவோ, கிரேக் பிராத்வெய்ட், சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட் அல்லது லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச் (விக்கெட் காப்பாளர்), கார்லஸ் பிராத்வெய்ட், ஜாசன் ஹோல்டர் (தலைவர்), தேவேந்திர பிஷூ, கேப்ரியல், மிக்யூல் கம்மின்ஸ், ராஜேந்திர சந்திரிகா.

இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 13 பேரில் மூன்று பேர் மட்டும்தான் 20 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிவர்கள். 6 பேர் நான்கு போட்டிகளுக்கும் குறைவாகவே விளையாடியுள்ளனர். இரண்டு பேர் அறிமுகமாக இருக்கிறார்கள்.

மிகவும் பலம் வாய்ந்த இந்திய அணியை, அனுபவம் இல்லாத மேற்கிந்திய தீவுகள் அணி எப்படி சந்திக்க இருக்கிறது என்ற எண்ணம் எல்லோரிடமும் தோன்றியுள்ளது. இந்நிலையில் புதுமுக வீரர்களுடன் இந்தியாவை சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

ஆன்டிகுவா டெஸ்ட் குறித்து ஹோல்டர் கூறுகையில் ‘‘முதல் டெஸ்டில் இடம்பிடித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டவர்கள். ரோஸ்டன் சேஸ் முதன்முறையாக அணியில் இடம்பிடித்துள்ளார். முதல் தரப் போட்டிகளில் 40 சராசரி வைத்துள்ளார். கடந்த சில சீசனில் ஷேன் டவ்ரிச் சிறப்பாக செயற்பட்டுள்ளார். லியோன் ஜான்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல் மேலும் சில வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும், இவர்களுடன் இந்தத் தொடரை எதிர்கொள்ள நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

அனைத்து இளைஞர்களுக்கும் சர்வதேச அரங்கில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இது இளைஞர்களைக் கொண்ட அணி. சர்வதேசப் போட்டியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலான வீரர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம் பிடிப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். மேற்கிந்திய தீவுகள் அணி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தெரியும். அதில் ஏராளமான இளைஞர்கள் தங்களை நிலைநிறுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்”  என்றார்.

முதல் டெஸ்ட் நடைபெறும் ஆன்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானக் கண்ணோட்டம் வருமாறு

2008ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடந்தது. அவுஸ்திரேலிய -மேற்கிந்திய தீவுகள் மோதிய இந்த டெஸ்ட்  சமநிலையில் முடிந்தது. கடைசியாக 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் மோதிய டெஸ்டும் சமநிலையில் முடிந்தது

இங்கு 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. 2012ஆம் ஆண்டு நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள்  அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. மற்ற 3 டெஸ்டும் சமநிலையில் முடிந்தது. இந்திய அணி இந்த மைதானத்தில் தற்போது தான் டெஸ்டில் விளையாடவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள்  அணி 522 ஓட்டங்களைக் குவித்ததே (நியூசிலாந்துக்கு எதிராக) இந்த மைதானத்தில் ஒரு இனிங்ஸிற்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள்  ஆகும். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 479 ஓட்டங்களைக் குவித்து இருந்தது. நியூசிலாந்து அணி 272 ஓட்டங்களை  எடுத்ததே குறைந்தபட்ச ஓட்டங்கள்  ஆகும்.

சந்தர்பால் 243 ஓட்டங்கள்  எடுத்து (4 டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 214 ஓட்டங்களுடன்  (2 டெஸ்ட்) இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை  எடுத்தவர் கிறிச் கெய்ல். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 150 ஓட்டங்களைக்  குவித்தார். இங்கிலாந்து வீரர் இயன் பெல் அவருக்கு அடுத்தபடியாக 143 ஓட்டங்களைக்  குவித்தார்.

ரோச் 12 விக்கெட்டுகளும், டெய்லர் 10 விக்கெட்டுகளும்ம் கைப்பற்றி முதல் 2 இடங்களில் உள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெட் லீ 59 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சு ஆகும்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்2, டென்3, டென்1 எச்.டி. தொலைக்காட்சி அலைவரிசைகள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்