நியூவ் சௌத் வேல்ஸின் உதவி பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க

732
Chandika Hathurusingha
 

அவுஸ்திரேலியாவின் நியூவ் சௌத் வேல்ஸ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்திக ஹதுருசிங்க 2010 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உதவி பயிற்றுவிப்பாளராக, நியூவ் சௌத் வேல்ஸ் அணியுடன் பணியாற்றியிருந்த நிலையில், மீண்டும் அந்த அணியுடன் இணைந்துள்ளார்.

3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தை வென்ற டி வில்லியர்ஸின் ஈகல்ஸ்

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மூன்று அணிகள் மோதும்

அவுஸ்திரேலியாவின் பிரபல பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான க்ரிஸ் ரோஜர்ஸ் மற்றும்  மேற்கிந்திய தீவுகளின் உதவி பயிற்றுவிப்பாளர் டொபி ரெட்போட் ஆகியோர் இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்த போதிலும், சந்திக ஹதுருசிங்கவின் ஆற்றல் நிறைந்த விண்ணப்பத்தை கருத்திற்கொண்டு அவர், இந்த பதவியில் இணைக்கப்பட்டுள்ளார்.

நியூவ் சௌத் வேல்ஸ் கழகத்தின் தலைவராக க்ரெக் மெயில் நியமிக்கப்பட்ட பின்னர், இவர் எடுத்துள்ள முதல் சிறப்பு நகர்வாக, சந்திக ஹதுருசிங்கவின் நியமனம் மாறியுள்ளது. நியூவ் சௌத் வேல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பில் ஜெக்கஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக அன்ரே எடம்ஸ் மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக அந்தோனி க்ளார்க் ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூவ் சௌத் வேல்ஸ் அணி, தங்களுடைய முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஒருவரை மீண்டும் இணைப்பது இது முதல் தடவை அல்ல. இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக தனது பணியை நிறைவுசெய்த ட்ரெவர் பெய்லிஸை கடந்த 2013 ஆம் மீண்டும் தங்களது அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியூவ் சௌத் வேல்ஸ் அணி நியமித்திருந்தது.  எனினும், இவர் 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், ட்ரெவர் பெய்லிஸின் நம்பிக்கை மிகுந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக இலங்கை அணி மற்றும் நியூவ் சௌத் வேல்ஸ் அணிகளில் ஹதுருசிங்க பணிபுரிந்துள்ளார். அத்துடன், பிக்பேஷ் லீக்கில் மோஷமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட சிட்னி தண்டர்ஸ் அணி புத்துயிர் பெறுவதற்கு முக்கிய உதவியாளராகவும் சந்திக ஹதுருசிங்க இருந்துள்ளார்.Chandika Hathurusingha

நியூவ் சௌத் வேல்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கடந்த ஆண்டு, இரண்டு வருட ஒப்பந்தத்தில் மைக்கல் யார்டி நியமிக்கப்பட்ட போதும், குடும்ப காரணங்களுக்காக அவர், பாதியில் அணியிலிருந்து வெளியேறியிருந்தார். 

சந்திக ஹதுருசிங்க இலங்கை அணிக்கு பயிற்றுவித்துவந்த போதும், கடந்த ஒக்டோபர் மாதம் அவருக்கு வழங்கவேண்டிய தொகையை இலங்கை கிரிக்கெட் சபை வழங்காமல் நிறுத்தியிருந்தது. பின்னர், இவ்வருட ஆரம்பத்தில், அவர் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்பின்னர், சந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், ரசல் டொமிங்கோ அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க