இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் 8 சுற்றின் 7ஆவதும் இறுதியுமான வாரத்திற்கான பரபரப்பான போட்டிகள் இடம்பெறவுள்ள இத்தருவாயில் நாம் உள்ளோம்.  அதன்படி முக்கிய நான்கு அணிகள் மோதிக்கொள்ளும் தீர்மானம் மிக்க இரண்டு போட்டிகள் இவ்வாரம் நடைபெறவுள்ளன.

தொடரின், இறுதி நாள் போட்டி முடிவுகள் மூலம் சம்பியனாகும் வாய்ப்பினை பெற்றிருக்கும் ரினௌன் விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகியவை இந்த பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிக் கட்டத்தை சுவரஷ்யமாக மாற்றவுள்ளன என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

இந்நிலையில் ThePapare.com குறித்த முக்கிய இறுதி இரண்டு போட்டிகள் பற்றிய ஆழமான ஒரு ஆய்வை மேற்கொண்டது.

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்

காலம் – மார்ச் 4ஆம் திகதி

நேரம் – மாலை 4:45 மணி

இடம் – ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானம்

புளு ஸ்டார் அணி, தன்னுடன் கிண்ணத்துக்காக போட்டி போடும் இரண்டு அணிகளுடனான போட்டிகளையும் அபாரமாக வெற்றிகொண்டுள்ள நிலையில், இவ்வாரம் இடம்பெறும் தீர்மானம் மிக்க போட்டியில் சம்பியனாவதற்கான ஒரே எதிர்பார்ப்புடன் பந்தயத்தில் இறங்குகின்றது.

புளு ஸ்டார் அணிக்கு சுப்பர் 8 சுற்றில், அவர்களுடைய அசைக்க முடியாத பலமான பின்கள தடுப்பு பெரும் உதவியாக இருந்திருந்தது. அதன் காரணமாக இரு கோல்கள் மாத்திரமே எதிரணிகளினால் புளு ஸ்டார் அணிக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன. இத்தொடரின் சிறந்த தடுப்பினை கொண்டிருந்த அணியாகவும் உள்ள இவர்களின் பின்களம் அவர்களுக்கு இப்போட்டியினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றது.

கடந்த வாரங்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திருக்கும், E.B. ஷன்ன, அபொன்ஜோ ஜிபோலா மற்றும் 2 போட்டிகளில் 3 கோல்களினை பெற்றிருக்கும் அபார ஆட்டக்காரர் மொஹமட் பர்ஷீன் ஆகிய மூன்று வீரர்கள் இருப்பது, புளு ஸ்டார் அணிக்கு பெரும் பலமாக அமைகின்றது.

அத்துடன்,  மத்திய கள வீரர் இடோவோ ஹமீத், பின்கள வீரர் நசிரு ஒபயேமி ஆகியோரும் களத்தில் சிறப்பாக செயற்படக்கூடியவர்கள். இவர்கள் அனைவரும் அவர்களின் அணி சம்பியனாக, முக்கியமான இம்மோதலில் கடின உழைப்பினை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .

ராணுவப்படை அணியானது, வெற்றியாளர்களுக்கான பந்தயத்தில் இருந்து நீங்கி இருப்பினும் தமது இறுதி இரண்டு போட்டிகளிலும், எதரணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து மொத்தமாக 12 கோல்களைப் பெற்றுக்கொண்ட காரணத்தினால் தற்சமயம் சிறப்பான நிலையில் காணப்படுகின்றது.

மறுக்க முடியாத வகையில், எதிரணிக்கு தற்போது சவால் விடும் விதமாக காணப்படும் ராணுவப்படை, புளு ஸ்டார் அணியின் சம்பியன் கனவை சிதறடிக்கக் கூடிய அணி என்பதில் ஐயமில்லை. எனினும், அனுபவம் குறைந்த வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கு உயர்நிலை போட்டிகளில் விளையாட தன்னம்பிக்கை அளிக்கும் விதமாகவும் ராணுவத் தரப்பு செயற்படலாம் எனவும் அனுமானிக்கப்படுகிறது.

போட்டியினை நோக்கும் தருணத்தில், பொறுமையான முறையில், தமது தடுப்புக்கள் மூலம் எதிரணியினை கையாளும் ஆற்றல் கொண்டிருக்கும் புளு ஸ்டார் அணி, தற்போது வலுவான அணியாக மாறியிருக்கும் ராணுவப்படை அணிக்கு அதிர்ச்சி அளிக்கவும் வாய்ப்புள்ளது.

இறுதி நாளின், முதல் போட்டியில் விளையாடுவதன் காரணமாக புளு ஸ்டார் அணிக்கு சம்பியன் பட்டத்தை பெறுவதற்கான அழுத்தம் ஏனைய இரண்டு அணிகளை விட குறைவாக உள்ளது. எனினும், அவ்வணி முழுமையாக கிடைக்கும் மூன்று புள்ளிகளை பெற்றாலும் சம்பியன் ஆகும் வாய்ப்பு புளு ஸ்டார் அணியின் கையில் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கால்பந்துக் கழகம்

காலம் – மார்ச் 4ஆம் திகதி

நேரம் – மாலை 7 மணி

இடம் – ரேஸ் கோர்ஸ் சர்வதேச விளையாட்டு மைதானம்

தொடரில் இறுதியாக இடம்பெறும் போட்டியான இது இலங்கையின் அதி சிறந்த இரண்டு கால்பந்து கழகங்களுக்கு இடையில் நடைபெறவுள்ளமை அனைவரதும் எதிர்பாப்பை ஏற்படுத்தியுள்ளது. டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முடிவுகளை தீர்மானிக்கும் திருப்பு முனையான போட்டிகளில் இது முக்கியமான ஒன்றாகும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி நாளின் முதல் போட்டியில், ராணுவப்படையை புளு ஸ்டார் வீழ்த்தும் எனில், நடப்புச் சம்பியனான கொழும்பு அணிக்கு இருக்கும் சம்பியனாவதற்கான வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போகும். புளு ஸ்டார் வெற்றிகொள்ளத் தவறினாலும் இறுதிப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

பளு ஸ்டார் கழகத்திடம் கொழும்பு அணி தோல்வியுற்றிருப்பினும், சிறந்த நிலையில் உள்ள சர்வான் ஜோஹர் மற்றும் மொமாஸ் யாப்போ ஆகிய வீரர்கள் மூலம் கொழும்பு கால்பந்து கழக அணியினர் சிறப்பான ஆட்டத்தினை காட்டியிருந்தனர். இந்த இரு வீரர்களும், எதிரணியான ரினௌனை வீழ்த்துவதில் உறுதுணையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னைய போட்டிகளில் ரினௌன் கழகம், மத்திய களத்தில் எதிர்தாக்குதல்களை நடாத்துவதில் சிரமத்தினை எதிர்கொண்டிருந்ததனை காணக்கூடியதாக இருந்தது. எனினும் எதிரணியை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ள நுணுக்கங்கள் கொண்ட ஆட்டம் அவ்வணிக்கு, புளு ஸ்டார் கழகத்தின் போட்டி முடிவினை கருத்திற் கொள்ளாமல், கொழும்பு கால்பந்து கழகத்தினை வீழ்த்த போதுமாகவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக, எதிர்பாராத முறையில் சில சரிவுகளை சந்தித்திருந்த ரினௌன், அதன் மூலம் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தால், இறுதிப் போட்டிக்கு முன்னர் அதிலிருந்து மீள வேண்டியது அவசியமாகிறது.

உபாதைக்கு உள்ளான அபாம் அக்ரமிற்கு பதிலாக ரினௌன் கழகத்தில் வாய்ப்பு பெற்றிருந்த முஹமட் முஜீப் போட்டித் தடையினை பெற்றிருப்பதால், அவரின் சேவை இறுதிப் போட்டியில் ரினௌனிற்கு கிடைக்காது.

கடந்த வாரத்தில், அபொன்ஜோ ஜிபோலாவின் வேகத்தினையும் தைரியமான ஆட்டத்தினையும் சமாளிப்பது கொழும்பு கால்பந்து கழகத்திற்கு கடினமானதாய் இருந்திருந்தது. அதே வேளையினை ஜொப் மைக்கல் இப்போட்டியிலும் செய்து கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பார் என நம்பப்படுகின்றது.

கொழும்பு அணி, இப்போட்டிக்கு போக முன்னர், என்ன பெறுபேற்றினை அடையப் போகின்றோம் என்பதனை கருத்திற்கொண்டு உழைத்தல் அவசியமாகின்றது. அத்துடன், போட்டியின் அழுத்தங்களை சரிவர கையாளக்கூடிய கடப்பாட்டுடனும் அவ்வணி செயற்பட வேண்டும்.

கொழும்பு கழகம், ரினௌன் கழகத்தின் மத்திய களத்தினை விரைவாக தகர்க்கும் எனின், அது அவர்களுக்கு தீர்மானம் மிக்க புள்ளியினை உறுதிப்படுத்தி, எதிரணியை வீழ்த்த உதவியாய் அமையும். அத்துடன் ரினௌன் கழகம் தமது எதிரணியின் கவுண்டர் தாக்குதல்களை காக்க வேண்டியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு, மொஹமட் பசால் மற்றும் ஜொப் மைக்கல் ஆகியோர் தமது வேகம் மூலம் ரினௌனிற்கு பங்களிப்பு கொடுக்க வேண்டும்.

அவ்வாறு நடைபெற்றால் போட்டியின் சிறந்த நிலையாக அது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.