மாலிங்க பணத்திற்காகவே அதிகமாக விளையாடுகின்றார் : அமைச்சர் தயாசிறி

2255
Dayasiri replied Malinga

இலங்கை வீரர்களின் உடல் தகுதி மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள் குறித்து தற்பொழுது பல தரப்பினராலும் அதிகமாகக் கதைக்கப்பட்டு வருகின்ற நிலையில், லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொடுத்த பதிலுக்கு மீண்டும் அமைச்சர் கடுமையான விதத்தில் பதில் கொடுத்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மாலிங்க

கடந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண குழு மட்ட போட்டிகளில் அரை இறுதிப்..

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதி மோசமாக உள்ளது, வீரர்கள் உடல் பருமனைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களை சரி செய்ய இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அண்மையில் அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இதற்கு பதில் கொடுக்கும் வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கருத்து தெரிவித்திருந்தார். அதில், இப்பொழுது யுத்தம் நிறைவுற்றுள்ளது. இனிமேலும் எவரும் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட வேண்டிய தேவையுள்ளதாக நான் நினைக்கவில்லை. இந்திய அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற போது எம்மை எல்லோரும் புகழ்ந்தார்கள். எனினும், அடுத்த போட்டியில் தோல்வியுற்ற போது நாம் பலவீனமான அணி என்று குறை கூறுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது லசித் மாலிங்க தெரிவித்த விடயம் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறும்போதே, அமைச்சர் கடுமையான முறையில் லசித் மாலிங்கவை விமர்சித்தார்.

”உடல் தகுதியை பரிசோதிப்பது குறித்து நான் இறுதித் தீர்மானம் எடுத்துள்ளேன். அதற்கு அமைவாக அனைவரும் உடல் தகுதியை உறுதிப்படுத்த வேண்டும். எவ்வளவு திறமையுள்ள வீரராக இருந்தாலும் பரவாயில்லை, உடல் தகுதியை உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் அவர் அணியில் இருந்து வெளியேற வேண்டி ஏற்படும்” என்றார்.

மேலும், மாலிங்க ஐ.பி.எல் விளையாடுவது குறித்தும் அமைச்சர் விமர்சனம் தெரிவித்தார். அவர் ”உடல் தகுதி குறித்து கதைக்கும் குறித்த வீரர்கள் இலங்கையில் உடல் தகுதியை சீர்செய்துகொண்டு இந்தியாவில் போய் விளையாடுகின்றனர். அவர்கள் தாய் நாட்டிற்காக அன்றி பணத்திற்காகவே அதிகம் விளையாடுகின்றனர்” என்றார்.

சம்பியன்ஸ் கிண்ண பதினொருவர் அணி விபரம் வெளியானது

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற எட்டாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்..

லசித் மாலிங்க இலங்கை அணிக்காக விளையாடுவதை விட இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதையே அதிகம் விரும்புவதாக கடந்த காலங்களிலும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து கடந்த வருடம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த மாலிங்க, ”நான் அணியின் வெற்றிக்கு பல வகையிலும் பங்காற்றியுள்ளேன். நான் பெற்ற ஹட்ரிக் விக்கெட்டுகள் அனைத்தும் தாய்நாட்டிற்காகவே அன்றி, பண்ணத்திற்காகவோ, ஐ.பி.எல் போட்டியிலோ இல்லை. உலகக் கிண்ணத்திலும் நான் அதிக ஹட்ரிக்களை பெற்றுள்ளமை தாய் நாட்டிற்காகவே ஆகும்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.